Published:Updated:

மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

‘‘கவர்மென்ட் என்பது ‘கவர்னர்’மென்ட் என்று வேகவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது’’ என்று சொன்னபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.

‘‘கிண்டி கவர்னர் மாளிகை மார்க்கமாகப் பறந்து வந்திருக்கிறீர்களா?’’ என வரவேற்புக் கொடுத்தோம்.

‘‘மாநில கவர்னரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கவர்னர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கவர்னர் மாளிகையை நோக்கி எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. முந்தைய கவர்னர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், எப்போதுமே ராஜ்பவனிலிருந்து அறிக்கை வெளியானதில்லை. தமிழக அரசின் சார்பில்தான் விளக்கம் தரப்படும். அதிலும், ‘ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை’ என்றெல்லாம் அறிக்கை வெளியிடுவது மாநில அரசின் சட்டம்-ஒழுங்கு தொடர்புடையது. கவர்னர் மாளிகையிலிருந்து தன்னிச்சையாக அறிக்கைகள் வெளியிடப்பட்ட வரலாறு இதுவரை இல்லை. ஆனால், இந்திய கவர்னர்களின் வரலாற்றில் முதல்முறையாக எனும் அளவுக்கு, பன்வாரிலால் புரோஹித் கட்டளையால் இந்த அதிரடி அறிக்கை வெளியானது. ‘மாநில சுயாட்சியைக் காக்க ஆயுள் முழுக்க சிறை செல்லத் தயார்’ என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கர்ஜித்தார். அத்துடன் நில்லாமல், சட்டசபையிலும் கவர்னர் பற்றி தி.மு.க-வினர் பிரச்னை எழுப்ப முயன்றார்கள். கவர்னரை ஒருவழி செய்வது என்று தீர்மானம் எடுத்திருக்கிறார் ஸ்டாலின். கவர்னரின் கட்டளையும் ஸ்டாலினின் கர்ஜனையும் தமிழக அரசியலில் புது விஷயமாகப் பார்க்கப்படுகிறது.’’

‘‘ஏன் இந்த மோதல்?’’

‘‘அதைத்தான் பலரும் ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். கவர்னர் மாவட்டவாரியாக ஆய்வுகளுக்குப் போனபோது, ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். உடனே அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து விளக்கம் கொடுத்தார் கவர்னர். ஸ்டாலினுக்கே இதில் ஆச்சர்யம். ‘பெரும்பான்மை இல்லாத ஓர் அரசை நீங்கள்தான் தாங்கிப் பிடித்திருக்கிறீர்கள்’ என ஆதங்கத்துடன் அப்போது சொல்லிவிட்டு வந்தார் ஸ்டாலின். அடுத்து, நிர்மலாதேவி விவகாரம் பெரும் சர்ச்சையாகிப் பல கட்சியினரும் கவர்னரைக் காய்ச்சி எடுத்தபோதுகூட, தி.மு.க அடக்கியே வாசித்தது. அதன்பிறகு கவர்னர் போன பல ஊர்களில் சம்பிரதாயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினார்கள். ஆனால், நாமக்கல் போராட்டத்தில் ஆரம்பித்தது பிரச்னை.’’

மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘என்ன நடந்தது என்று சொல்லும்...’’

‘‘சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்துக்கு விசிட் சென்ற புரோஹித்துக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள் தி.மு.க-வினர். எல்லா ஊர்களிலும் கைது செய்து சில மணி நேரங்களில் விடுவிப்பதே வழக்கம். ஆனால், நாமக்கல்லில் 192 பேரைக் கைது செய்து 15 நாள்கள் சிறையில் அடைத்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து கவர்னர் மாளிகையைத் தி.மு.க-வினருடன் முற்றுகையிட்டார் ஸ்டாலின். அனைவரையும் கைது செய்து, வழக்கம்போல விடுவித்துவிட்டனர். அதன்பிறகுதான், ‘ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை’ என்று மிரட்டல் குறிப்பை அதிரடியாக ராஜ்பவன் வெளியிட்டிருக்கிறது. நாமக்கல் மாவட்ட தி.மு.க-வினர், கவர்னருக்கு எதிர்ப்புக்காட்டுவதில் அத்தனை ஈடுபாடு கொள்ளவில்லையாம். விஷயம் தெரிந்து, ‘கறுப்புக் கொடி காட்டியே தீரவேண்டும்’ என்று ஸ்டாலின் கட்டளை போட்டுவிட்டாராம். ‘இந்தப் போராட்டம் மாநிலம் முழுக்கப் பேசப்படும் அளவில் இருக்க வேண்டும்’ என்ற அளவுக்கு அறிவாலயத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது. பதறிப்போன நாமக்கல் மாவட்ட தி.மு.க-வினர், கறுப்புக்கொடி காட்டுவதில் மும்முரமாகியுள்ளனர். ‘கவர்னர் வரும் பாதையைத் தவிர்த்துவிடுங்கள். வேறொரு இடத்தில் போராட்டம் நடத்திக்கொள்ளுங்கள்’ என்று நாமக்கல் எஸ்.பி அருளரசு சொல்ல, அதைத் தி.மு.க-வினர் கேட்கவில்லை. ‘முன்னெச்சரிக்கை யாகக் கைதாகிவிடுங்கள்’ என்றுகூட போலீஸ் தரப்பிலிருந்து சொல்லியுள்ளனர். ஆனால், ‘கவர்னர் வரும் பாதையில்தான் கறுப்புக்கொடி காட்டுவோம்’ என விடப்பிடியாக தி.மு.க-வினர் சொன்னார்கள். முன்னெச்சரிக்கையாகக் கைது செய்திருந்தால், கவர்னர் விசிட் செய்யும் ஆறு இடங்களிலும் பிரச்னை வெடிக்கும் என்பதால்தான், மணிக்கூண்டு அண்ணா சிலை அருகே மட்டும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். சரியாக அந்த இடத்தில்தான் கவர்னர் காரின் முன்பாகச் சென்ற பாதுகாப்பு வாகனத்தின்மீது கறுப்புக் கொடி விழுந்திருக்கிறது. இது கவர்னரின் கண்களிலும் தவறாமல் பட்டு, அவரது கோபத்தை அதிகரித்திருக்கிறது.’’

‘‘அடடா?’’

‘‘இன்னொரு முக்கியமான விஷயம்... நாமக்கல்லில் இப்படி தனக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்போகிறார்கள் என்பது கவர்னருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால், அவர் நாமக்கல் கிளம்புவதற்கு முன்பாக தமிழக சட்டத்துறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பூவலிங்கத்தை அழைத்து, ஆலோசனை செய்திருக்கிறார்.’’

‘‘அப்படியா?’’

‘‘போலீஸார் பெருமளவு இருந்தாலும், தன் வாகன அணிவகுப்பில் கறுப்புக்கொடி வந்து விழுந்ததை கவர்னர் ரசிக்கவில்லை. பாதுகாப்புக் குறைபாடு என விமர்சனம் வந்துவிடக்கூடாது என்று, போலீஸ் உடனே கைது நடவடிக்கையில் இறங்கியது. வழக்கமாக இதுபோல் கைது செய்தால், மாலையில் அவர்களை விடுவித்துவிடுவது வழக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் 192 பேரைக் கைது செய்து 15 நாள்கள் சேலம் மத்திய சிறையில்  அவர்களை அடைத்துவிட்டது போலீஸ். அதனால்தான், ஸ்டாலின் கொந்தளித்தார். இன்னொரு பக்கம், ‘தமிழகத்தில் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒரே நபர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் போகும் இடங்களில் நிறைய எதிர்ப்புகள் இருந்தாலும், அவரை யாரும் நெருங்கிவிட முடியாது. அந்த அளவுக்கு பாதுகாப்பில் கெடுபிடி காட்டப்படுகிறது. ஆனால், உங்களின் பாதுகாப்பு வாகனத்தின் மீதே கறுப்புக்கொடி வீசும் அளவுக்கு இடம் கொடுத்து வைத்துள்ளனர். முதல்வர் கார்மீது இப்படி வீசியிருக்க முடியுமா’ என்று கவர்னர் மாளிகை அதிகாரிகள் தரப்பு எடுத்துக் கொடுத்திருக்கிறது. இதையடுத்துதான், மாநில அரசு சார்பில் வெளியிட வேண்டிய செய்திக் குறிப்பை, கவர்னர் மாளிகையே அதிரடியாக வெளியிட்டிருக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

‘‘ஸ்டாலினின் திடீர்க் கோபத்துக்குக் காரணம் என்ன?’’

‘‘கவர்னர் தரப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்பாக ஏதோ ஓர் உறுதிமொழி தரப்பட்டதாகவும், ஆனால் அது நிறைவேற்றப் படவில்லை என்றும் கோட்டை வட்டாரத்தில் பேசுகிறார்கள். அதைத் தாண்டி, இந்த ஆட்சி நிர்வாகம் பற்றி ஸ்டாலின் காதுக்கு வந்துசேர்ந்த தகவல்கள் அவரின் கோபத்தை இன்னும் அதிகமாக்கின. மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பற்றிய அறிக்கையைத் தினமும் முதல்வருக்கு உளவுத்துறை அனுப்பி வைப்பது வழக்கம். கவர்னருக்கு சம்பிரதாயமாக வாராந்திர அறிக்கை மட்டும் அனுப்புவார்கள். முதல்வருக்கு அனுப்பும் அறிக்கையில் பல்வேறு சென்சிடிவான ரகசியங்கள் அடங்கியிருக்கும். இவற்றையெல்லாம் கவர்னர்  தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. எந்த கவர்னரும் கேட்பதும் இல்லை. ஆனால், இப்போது உளவுத்துறையின் இந்த அறிக்கை தினமும் கவர்னருக்கு அன் அஃபீஷியலாகப் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ‘அதுபற்றி எனக்குத் தெரியாது. டி.வி செய்தியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என முதல்வர் பழனிசாமி சொன்னதை, இதனுடன் பொருத்திப் பாரும். எல்லோரும் அவரை இதற்காக கிண்டல் செய்தார்கள். ஆனால், அது எடப்பாடி பழனிசாமி அறியாமல் சொன்னதல்ல; கவனத்துடன் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். இதற்காக டெல்லியிருந்தே கூப்பிட்டு அவரைக் கடிந்துகொண்டதாகத் தகவல்.’’

‘‘அப்படியா?’’

‘‘தமிழக நடப்புகள் பற்றிய தகவல்கள் அவருக்கு ஒழுங்காகப் போய்ச் சேர்வதில்லை. இதில் அவருக்கு ஆதங்கமும் உண்டு. ஆனால், அதை வெளிக்காட்டியதில்லை. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கவர்னரின் செயலாளர் ராஜகோபால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி விஜயகுமார் ஆகியோர் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறார்களாம். கவர்னர் புரோஹித்துக்கு மட்டும் அனைத்துத் தகவல்களையும் பரிமாற இவர்கள் தவறுவதில்லையாம். கிட்டத்தட்ட மாநில அரசு நிர்வாகமே, கவர்னர் மாளிகையிலிருந்து தான் நடக்கிறது. என்னதான் தங்களுக்கு இணக்கமாக  எடப்பாடி அரசு நடந்து கொண்டாலும், இதை நீடிக்க விடுவதில் இருக்கும் பிரச்னைகளை டெல்லி உணர்ந்திருக்கிறது. காஷ்மீரில் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு கவர்னர் கையில் அதிகாரத்தைக் கொடுத்தது போல, இங்கும் செய்தால் என்ன என்ற யோசனை வந்திருக்கிறதாம். ‘கவர்னர் இப்படி நிழல் அரசு நடத்துவதைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பன்வாரிலால் புரோஹித்துக்கும் அதிகாரிகளுக்கும் ஏற்பட்டி ருக்கும் இந்தக் கூட்டணி வலுவாகிவிட்டால், எதிர்காலத்தில் அது தங்களையும் பாதிக்கும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். அதனால் தான், ‘புரோஹித்தை மாற்ற வேண்டும்’ என்று குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்’’ என்ற கழுகார் பறந்தார்.

படம்: கே.தனசேகரன்

டீல் பேசும் புரோக்கர்கள்!

மிழக அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்கிறது, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம். இந்த வாரியத்தின் மூலம் 2017-ம் ஆண்டு நர்ஸ்கள் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 950 பேர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 2017 நவம்பரில் நடைபெற்றது. இரண்டொரு நாள்கள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற நேரத்தில், கிராம சுகாதார செவிலியர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் காரணமாக இது நிறுத்தப்பட்டது. எட்டு மாதங்களாக இவர்கள் பணிநியமன ஆணைக்காகக் காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலையில், இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்காமல் காலம் கடத்துகிறார்கள். இதற்கிடையே, சில புரோக்கர்கள் இவர்களில் பலரைத் தொடர்புகொண்டு டீல் பேசுகிறார்களாம்.

‘48-வது நாளில் ஓ.பி.எஸ் முதல்வர்!’

தே
னியில் பழைமைவாய்ந்த பெரிய கோயில் என்ற பாலசுப்பிரமணியர் கோயில் நீண்டகாலம் பராமரிப்பின்றி இருந்தது. இந்தக் கோயிலைத் தன் சொந்த செலவில் சீரமைத்தார்        ஓ.பன்னீர்செல்வம். கோயிலுக்கு பன்னீர் தலைமையில் ஜூன் 25-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கலச பூஜையை முடித்துக்கொண்டு மூலவரான ராஜேந்திர சோழீஸ்வரரை வழிபட்டுவிட்டு, அருகிலுள்ள பாலசுப்பிரமணியர் சன்னிதிக்குள் பன்னீர் நுழைந்தார். அங்கிருந்த முருகன் சிலையை உற்றுப்பார்த்த பன்னீர், “வேலும் கொடியும் எங்கே?” என்று சத்தமாகக் கேட்டார். அர்ச்சகர்கள் வேகமாக ஓடிப்போய் வேல், கொடியை எடுத்துவந்தனர்.

மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

இந்த கும்பாபிஷேகத்துக்குப் பிறகு தன் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று நம்புகிறார் பன்னீர். ‘‘பெரிய கோயில் வேலையை ஆரம்பித்த பிறகுதான், பல பிரச்னைகளைப் பன்னீர் சந்தித்தார். அவர் உள்ளிட்ட ஐவர் கூட்டணி பற்றி விவகாரங்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்குப்போய், ஐவரும் ‘வீட்டில்’ வைத்து ‘சிறப்பாக’க் கவனிக்கப்பட்டனர். பதவிகள் பறிக்கப்பட்டன. முதல்வர் பதவி கைக்கு வந்து உடனே பறிபோனது. தர்மயுத்தம் நடத்தினார். பன்னீரின் அரசியலுக்கு இது அஸ்தமன காலம் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், திடீரென அவர் மேலே வந்து, துணை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். பெரிய கோயிலின் அனுக்கிரகமும், ராஜகோபுரத்தை அவர் கட்டி எழுப்பியதும்தான் இதற்குக் காரணம். பார்த்துக்கொண்டே இருங்கள்... கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த 48-வது நாளில் முதல்வர் நாற்காலியில் பன்னீர் அமருவார்’’ என்கிறார்கள் பன்னீருக்கு நெருக்கமானவர்கள்.

படம்: வீ.சக்தி அருணகிரி

மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

* தெற்கத்தி சீமையில் பணிபுரிகிறார் அந்தப் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி. தலைநகரின் மெட்ரோ பகுதியில் வசிப்பவர் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இருவரும் நண்பர்கள். பெண் அதிகாரி டைவர்ஸ் ஆனவர். ஆண் அதிகாரியின் குடும்பத்தினர் சொந்த மாநிலத்துக்குச் சென்றுவிட்டனர். போதாதா? இருவரும் உலகம் சுற்றும் பறவைகளாக இருக்கிறார்களாம். இப்படித்தான் கடந்த மாதம் அந்தப் பெண் அதிகாரி வெளிநாடு போயிருந்த நேரத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட, உடனே வரவழைக்கப்பட்டார். சமீபத்தில் சூரியன் அஸ்தமிக்காத நாட்டுக்குப் போனார் அந்தப் பெண் அதிகாரி. ‘சீனியர் அதிகாரி கூடவே சென்றாரா’ என்று தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

*  திருச்சி மாவட்ட நகரம் ஒன்றில் இருக்கும் பிரபல பள்ளிக்கூடத்தை, ‘இது மூத்த மாண்புமிகுவின் ஸ்கூல்’ என்று மக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நிர்வாகத்தின்கீழ் 17 பள்ளிகள் உள்ளன. அத்தனைக்கும் ஆசைப்பட்டாராம் மூத்த மாண்புமிகு. பள்ளி நிர்வாகம் முரண்டு பிடிக்கவே, தேர்வு நேரத்தில் பறக்கும் படை, அதிரடி ரெய்டு என்று டார்ச்சர் கொடுத்தார்களாம். வேறு வழியில்லாமல் பள்ளி நிர்வாகம் சரண்டர் என்கிறார்கள். அதன்பிறகு அது, ‘மூத்த மாண்புமிகு ஸ்கூல்’ ஆகிவிட்டதாம்.

*  தமிழக போலீஸின் உச்ச அதிகாரி வீட்டில் விரைவில் டும் டும் சத்தம் கேட்கப்போகிறதாம். சம்பந்தியாகப் போகிறவர், சர்ச்சைக்குரிய ஒரு போலீஸ் அதிகாரி. எடக்கு முடக்கு அதிகாரியான அவர், தன்மீதான பல புகார்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, எந்தப் பிரச்னையும் இல்லாமல் சமீபத்தில் ஓய்வுபெற்றார். ‘இது எப்படி சாத்தியம்’ என்று டி.ஜி.பி ஆபீஸில் எல்லோருக்கும் அப்போது ஆச்சர்யம். அது இப்போது புரிந்துவிட்டது. அந்த அதிகாரியின் மகனுக்கும் உச்ச அதிகாரியின் மகளுக்கும்தான் திருமணம் நடக்க இருக்கிறது. 

* முதல்வர் அலுவலக அதிகாரி சாய்குமார், முன்பு தமிழ்நாடு மின் வாரியத்தில் சேர்மனாக இருந்தார். இப்போது அந்தப் பதவியில் விக்ரம் கபூர் இருக்கிறார். இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடாம். மின்வாரிய அதிகாரி ஒருவர், இங்கிருந்து முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் ஃபைல்கள் குறித்து முன்கூட்டியே, சாய்குமாருக்குத் தகவல் தந்துவிடுகிறாராம். இந்த வகையில், சமீபத்தில் போன மூன்று ஃபைல்களை நிறுத்தி வைத்துவிட்டார்களாம் முதல்வர் அலுவலகத்தில். இதனால் டென்ஷனில் தவிக்கிறார் விக்ரம் கபூர்.