
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு...
மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்குப் போயுள்ள 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு, இப்போது எதிர்பாராத இன்னொரு திருப்பத்தைச் சந்தித்துள்ளது. தினகரன் அணிக்குச் சென்று, ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது நம்பிக்கை இழந்துவிட்டோம்’ என்று தமிழக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால் 18 எம்.எல்.ஏ-க்களைக் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். இவர்களில் 17 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகுதிநீக்க வழக்கு காலதாமதமாவதை சுட்டிக் காட்டி, ‘உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரிக்க வேண்டும்’ என்று அதிரடியாக நாடியிருக்கிறார்கள்.
இப்படி ஒரு திடீர் திருப்பத்தைத் தமிழக அரசுத் தரப்பு எதிர்பார்க்கவில்லை. அதனால், அவர்களால் கேவியட் மனு எதுவும் தாக்கல் செய்ய முடியவில்லை. அப்படி ஒரு மனு தாக்கல் செய்திருந்தால், அரசுத் தரப்பையும் விசாரித்த பின்னர்தான் உச்ச நீதிமன்றம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பைப் பார்த்து விட்டே, அது ஒருவேளை பாதகமாக அமைந்தால் இவர்கள் மேல்முறையீடு செய்வார்கள் என தமிழக அரசு நினைத்திருந்தது. ஆனால், வழக்கின் இடையிலேயே இப்படி தினகரன் தரப்பு செய்யும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஜூன் 21-ம் தேதி வெற்றிவேல் தான் முதல் மனுவைத் தாக்கல் செய்தார். மறுநாள் மற்ற 16 பேரும் மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், மனுதாக்கல் செய்த தகவலை அவர்கள் வெளியே சொல்லவில்லை. ஆனாலும், இதை மோப்பம் பிடித்த ஒருசில டெல்லி தமிழ்ச் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது, தினகரன் தரப்பினர் ‘இல்லை’ என்று மறுத்துவிட்டனர். ‘அப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை செய்துவருகிறோம்’ என்று மீண்டும் மீண்டும் ஒரே பதிலைத்தான் தந்தனர். ஆனால், இந்த 17 பேரும் மனுக்களைத் தாக்கல் செய்துவிட்டனர் என்பது ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் உறுதியானது.
ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. அதற்கும் சில சட்ட ரகசியங்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தால், உயர் நீதிமன்றத்தில் அவரது மனுவைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் எழலாம் என்பதாலேயே அவர் தரப்பில் மனுதாக்கல் செய்யவில்லையாம்.
‘2017 ஆகஸ்ட் 22-ம் தேதி கவர்னரிடம் இவர்கள் மனு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 18-ம் தேதி இந்த 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவு, அன்றே தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக மறுநாளே அறிவிக்கப்பட்டது. எல்லாமே அவசர கதியில் நடந்தன. இப்போது ஒன்பது மாதங்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் எங்கள் தொகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாமதமாக நடைபெற்றதுதான் காரணம். இப்போது, மூன்றாவது நீதிபதி புதிதாக வழக்கைக் கவனிக்கும்போது இன்னும் தாமதமாகிவிடும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கத் தடை விதிக்கவேண்டும். உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சென்னை வந்து வாதாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தற்போது வெளிநாடு சென்றுள்ளார். மனுவை தயார் செய்யும்முன்பு அவரிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர், தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள். மனு வரைவு நகல் இமெயில் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் சொன்ன திருத்தங்களின் அடிப்படையில், மனு இறுதிசெய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்துக்கு ஜூலை 1-ம் தேதிவரை விடுமுறை என்பதால் மூத்த வழக்கறிஞர்களில் பலரும் டெல்லியில் இல்லை. ஜூன் 25-ம் தேதி வரை அபிஷேக் சிங்வி டெல்லி திரும்பவில்லை. தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை அலையாய் அலைந்து வழக்கறிஞர் விகாஸ் சிங்கை இறுதிசெய்தார்.
ஒரே ஒரு விடுமுறைக்கால அமர்வுதான் உச்ச நீதிமன்றத்தில் பணியில் இருப்பதால், அந்த அமர்வில் இருந்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் முன்பு ஜூன் 25-ம் தேதி காலை விகாஸ் சிங் முறையீடு செய்தார்.
‘‘வழக்கை விசாரிக்க நான்கு மாதங்களை எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், பின்னர் தீர்ப்பு வழங்க ஐந்து மாதங்களை எடுத்துக் கொண்டது. இதனால், அரசியல் சாசனத் தேக்கம் ஏற்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று விகாஸ் சிங் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், ‘‘மூன்றாவது நீதிபதியாக விமலா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப் படுவதற்கு முன்பே இவர்தான் நியமிக்கப்படுகிறார் என வாட்ஸ்அப் தகவல்கள் பரவின’’ என்றார் விகாஸ் சிங். உடனே நீதிபதிகள், ‘‘வாட்ஸ்அப் தகவல்களை நாங்கள் கவனத்தில்கொள்ள முடியாது. ஏதேதோ வருகின்றன’’ என்றனர். சில நிமிட ஆலோசனைக்குப் பின் நீதிபதிகள் மனுவை ஏற்று, ஜூன் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதியளித்தனர். மனுவில், ‘உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மருமகள் அரசு வழக்கறிஞராக இருப்பதால் அரசுத் தரப்பிலிருந்து வழக்கில் சுவாதீனம் செலுத்த வாய்ப்பு உள்ளது’ என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை ஒருவேளை ஏற்க மறுத்தால்கூட, ‘குறிப்பிட்ட நாள்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று மூன்றாம் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள் கருதுகிறார்கள்.
- டெல்லி பாலா