Published:Updated:

“ஸ்கூட்டி கொடு... இல்லை டியூட்டி மாறு!”

“ஸ்கூட்டி கொடு... இல்லை டியூட்டி மாறு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஸ்கூட்டி கொடு... இல்லை டியூட்டி மாறு!”

அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ

‘‘ஆளும்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரும் அவரவர் தொகுதிக்கு முதல்வர் போலவே தங்களை நினைத்துக்கொண்டு செயல்படுகிறார் கள்’’ என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதற்குச் சமீபத்திய உதாரணம் இந்தப் பெரம்பலூர் சம்பவம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் முறைகேட்டுக்குத் துணை போகா விட்டால், சப் கலெக்டர் அந்தஸ்தில் இருக்கும் ஓர் அதிகாரியைக்கூட சட்ட விரோத ட்ரான்ஸ்ஃபரில் தூக்கியடிக்க முடியும் என்பது, தமிழ்நாட்டுக்கே தெரிந்திருக்கிறது. பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான இளம்பை தமிழ்ச்செல்வனுக்கும் பெரம்பலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் தேவநாதனுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக இருந்த மோதல் வெளி உலகுக்குத் தெரிந்து, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் தேவநாதனிடம் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் கோபமாகப் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பேச்சைக் கேட்க மறுத்த தேவநாதனுக்கு அவசர அவசரமாக ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொடுத்திருக்கிறார் தமிழ்ச்செல்வன். இதற்கு எதிராக தேவநாதன் மனு தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் இந்த ட்ரான்ஸ்ஃபருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழ்ச்செல்வனுக்கும் தேவநாதனுக்கும் என்னதான் பிரச்னை என விசாரிக்க ஆரம்பித்தோம். “தமிழ்நாடு மின் உற்பத்திப் பகிர்மானக் கழக இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தேவநாதன். இவர், 2018 பிப்ரவரி 26 அன்று  மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநராக பெரம்பலூர் மாவட்டத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.

“ஸ்கூட்டி கொடு... இல்லை டியூட்டி மாறு!”

அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்குப் பயனாளிகள் தேர்வுசெய்யும் பணியைச் செய்வது இந்த அலுவலகம்தான். பெரம்பலூரில் 810 பயனாளிகளுக்கு இந்த ஸ்கூட்டி மானியம் வழங்க வேண்டும். தேவநாதன் இங்கு பணிக்கு வருவதற்கு முன்பே 126 பேர் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள். இந்நிலையில், தனக்கு வேண்டிய 200 நபர்களைப் பயனாளிகள் லிஸ்ட்டில் இணைக்கும்படி எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அதிலும் இந்தத் திட்டத்துக்கான வயது வரம்பைக் கடந்தவர்களுக்கும், வேலைக்குச் செல்லாத பெண்களுக்கும்தான் தமிழ்ச்செல்வன் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், ‘விதிகளுக்கு மாறாக என்னால் எதையும் செய்யமுடியாது’ என தேவநாதன் கறாராகக் கூறியுள்ளார். இதனிடையே எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தானாகவே ஒரு லிஸ்ட்டைத் தயார் செய்து, ‘இதில் உள்ளவர்களுக்கு முதலில் ஸ்கூட்டி கொடுங்கள்’ என்று மிரட்டியுள்ளார். அதையும் ஏற்க மறுத்துவிட்டார் தேவநாதன்.

இதனால் மே 21-ம் தேதி எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தன் சகாக்களுடன் தேவநாதனைத் தேடி அலுவலகம் வந்தார். அப்போது தேவநாதன் அலுவலகப் பணி காரணமாக வெளியில் சென்றிருந்தார். தேவநாதன் இல்லாததால் கோபமடைந்த எம்.எல்.ஏ., அவருக்கு போன் செய்து திட்ட ஆரம்பித்துவிட்டார். ‘இன்னும் சில தினங்களில் உன்னை வேறு இடத்துக்கு மாற்றுகிறேன்’ என்று சவால்விட்டுவிட்டுக் கிளம்பினார். எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தனக்கு வேண்டியவர்களைப் பட்டியலில் இணைக்கும்படிக் கூறியது மட்டுமல்ல, தான் சொல்லும் நிறுவனத்திட மிருந்துதான் ஸ்கூட்டி வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குக் கட்டளைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் முட்டுக் கட்டையாக தேவநாதன் இருந்தார். அதனால், தமிழ்ச்செல்வன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தேவநாதனைத் தூக்கியடித்தார்’’ என்கின்றனர் சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஸ்கூட்டி கொடு... இல்லை டியூட்டி மாறு!”

தேவநாதனுக்கு ட்ரான்ஸ்ஃபர் உத்தரவு ஜூன் 11-ம் தேதி வந்தது. அந்த மாறுதல் உத்தரவு முறைப்படி அவருக்கு வருவதற்குமுன்பே, அதன் நகலை எடுத்துக்கொண்டு எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனின் ஆட்கள் சிலர் வந்திருக்கிறார்கள். ‘‘எங்க எம்.எல்.ஏ-கிட்ட மோத வேண்டாம்னு சொன்னோமே... இப்ப என்னாச்சு பார்த்தியா? சென்னைக்கு உன்னைத் தூக்கியடிச்சிட்டாரு’’ என்று சொல்லி, ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை விசிறியடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.  

தேவநாதனின் வழக்கறிஞர் ரவியிடம் பேசினோம். ‘‘எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென தேவநாதன் சென்னைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் சென்னையிலிருந்து பெரம்பலூர் சென்றே நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் மீண்டும் சென்னைக்கு  ட்ரான்ஸ்ஃபர் செய்வது எந்த வகையில் நியாயம்? நிர்வாகக் காரணங்களுக்காக ட்ரான்ஸ்ஃபர் செய்ய அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், இவரை அப்படியும் ட்ரான்ஸ்ஃபர் செய்யவில்லை. இது பொது மாறுதல் செய்யும் நேரமும் அல்ல. தேவநாதன் என்ற அதிகாரி, ஓர் அரசியல்வாதிக்கு அடிபணியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்து இந்தப் பணியிட மாற்றத்துக்கு இடைக்காலத் தடை வாங்கினேன்” என்றார்.

“ஸ்கூட்டி கொடு... இல்லை டியூட்டி மாறு!”

எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ‘‘நான் எந்த விதத்திலும் அந்த அதிகாரியைத் தவறாகப் பேசவில்லை. அவரும் நானும் பேசிய ஆடியோவை முழுமையாகக் கேளுங்கள். அம்மாவின் திட்டம் கடைக்கோடி தொண்டர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அதிகாரியிடம் பேசினேன். அதற்கு அவர், ‘உங்களிடம் காட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை’ என்று அலட்சியமாகப் பேசினார். எம்.எல்.ஏ-விடமே  ஓர் அதிகாரி இப்படிப் பேசினால் பாமர மக்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அதிகாரி சரியாக வேலையே செய்வதில்லை எனப் பல அதிகாரிகள் என்னிடம் புகார் கொடுத்து வருகிறார்கள்’’ என்று முடித்துக்கொண்டார்.

இந்த வழக்கு ஜூலை 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஆட்சிகள் மாறினாலும், முதல்வர்கள் மாறினாலும், கவர்னர் கடுமை காட்டினாலும், நேர்மையாகச் செயல்படும் அரசு அதிகாரிகள் பந்தாடப்படுவது தொடர்கிறது. 

- எம்.திலீபன், ஜெ.அன்பரசன்
படம்: ஸ்ரீனிவாசுலு