Published:Updated:

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

இரா.கலைச்செல்வன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி - படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

புதிய யுத்தம் ஒன்று தற்போது தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது. தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் சண்டையிட்டுக்கொள்கின்றன. கார்களும் பயிர்களும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. கனிம வளமிக்க மலைகள், அதைச் சுரண்டி எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகக் களம் காண்கின்றன.  அரசின் அதிகாரமும் விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டமும் சண்டையிட்டுக்கொள்கின்றன. சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம், ஐந்து மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மனிதகுல வரலாற்றில் தொழில் வளர்ச்சி, வாகனங்களின் பெருக்கம் ஆகியவை சாலைகளின் விரிவாக்கத்துக்கு வித்திட்டன. ஆனால் அதேநேரத்தில் சுற்றுச்சூழலைச் சிதைத்து, விளைநிலங்களை அழிக்கும் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக உலகம் முழுக்கவே எதிர்ப்புகள் எழுந்தன. பல திட்டங்கள் இதன் காரணமாகக் கைவிடப்பட்டன. சமீப வருடங்களாக உலகின் பல நாடுகளும் நெடுஞ்சாலைகள் அமைப்பதை நிறுத்திவைத்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா.  நிலங்களைக் கையகப்படுத்துவது, மக்கள் எதிர்ப்பு, சூழலியல் சிக்கல்கள் காரணமாக இந்த நெடுஞ்சாலைத் திட்டங்களை மொத்தமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைக்கப்படுவதன் நோக்கம் சென்னை - சேலத்திற்கான பயண நேரத்தைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துவது என்று சொல்லப்படுகிறது. 277.3 கிமீ தூரத்திற்கு ஒரு சாலை அமைக்கப்போகிறார்கள். அது ஏன் இத்தனை பிரச்னைகளையும், சச்சரவுகளையும் சந்திக்கிறது?

ஓர் இரவு நேரத்தில் சென்னையிலிருந்து சேலத்தை நோக்கிய நம் பயணம் தொடங்கியது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியிலிருக்கும் இருளப்பட்டி கிராமம். சாலைகள் தோண்டப்பட்டிருந்ததால், கேமராவோடு நடந்துபோய்க்கொண்டிருந்தோம். எதிரே பைக்கில் ஒருவர் வந்தார்.

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

“எங்க சந்திரகுமார் வீட்டுக்கா?”

“ஆமாம்.”

“அவருதான் கல்லு நட சம்மதிச்சுட்டாரே, அப்புறம் எதுக்கு அங்க போறீங்க?”

“சார், நீங்க?”

“நான் போலீஸ்தான். ஐபி (Intelligence Bureau)” என்று சொன்னபடி பைக்கை நகர்த்தினார்.

அன்று காலையில் தன் நிலத்தை அளக்க அதிகாரிகள் வந்ததை அடுத்து, குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர் சந்திரகுமார். ‘அவரா இப்போது நிலத்தைத் தர ஒப்புக்கொண்டார்?’ என்ற சந்தேகத்தோடு சந்திரகுமார் தோட்டத்திற்குள் நுழைந்தோம். 15க்கும் அதிகமான காவலர்கள் சூழ நடுவே அமர்ந்திருந்தார் அவர்.


“என்ன சார் நடக்குது இங்க... ஏன் சார் இந்த அரசு இப்படி ஒரு அநியாயத்த பண்ணுது? நிலம் தர முடியாதுன்னு சொன்னா விடியற்காலை 5 மணிக்கு ஏதோ திருடன் மாதிரி நிலத்த அளக்க வர்றாங்க. எதிர்த்துக் கேள்வி கேட்டா, கைது பண்றாங்க. 25 வருடம் கழிச்சு இத்தனை கார் வரும்னு கணக்குப் பண்ற அரசாங்கம், அதே 25 வருஷம் கழிச்சு எவ்வளவு உணவுப்பஞ்சம் வரும், தண்ணீர்ப்பஞ்சம் வரும், சுத்தமான காற்றுக்கு எவ்வளவு தட்டுப்பாடு வரும்னு கணக்கு போட்டுச்சா?

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

நெய்வேலியில இப்படித்தான் மக்களோட நிலத்தைக் கையகப்படுத்தினாங்க. இன்னிய வரைக்கும் அந்த மக்களுக்கு இழப்பீடு முழுசா போய்ச் சேரலை. எதுக்கு இவ்வளவு அவசரம், அராஜகம்? காரணம் கமிஷன். எங்க மண்ணைத் தோண்டுனா கமிஷன், நிரவுனா கமிஷன், வீட்டை இடிச்சா ஒரு கமிஷன், வீட்டக் கட்டுனா ஒரு கமிஷன்... இப்படி கமிஷனுக்காக எங்க வாழ்க்கையையே பறிக்கிறாங்களே. நாங்க சாதாரண விவசாயிங்க... எங்க வயித்துல இப்படி அடிக்காதீங்கய்யா... அடிக்காதீங்க...” என்று தன் கைகளைத் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். தன் தாத்தா அழுவதைப் பார்த்து வயலில் விளையாடிக்கொண்டிருந்த அவரின் மூன்று வயது பேரனும் பயத்தில் அழுகிறான்.

மத்திய அரசின் சார்பாக டெல்லியைச் சேர்ந்த ஃபீட்பேக் இன்ஃப்ரா (Feedback Infra) என்ற நிறுவனம்தான் இந்தத் திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் திட்ட அறிக்கை கூறுகிறது. ஆனால் ‘எங்கும் கருத்து கேட்புக் கூட்டமே நடத்தப்படவில்லை’ என்கிறார்கள் மக்கள்.  இது குறித்த தகவல்களை அறிய ஃபீட்பேக் இன்ஃபிரா நிறுவனத்துக்குத் தொலைபேசி மூலமும், இ-மெயில் மூலமும் தொடர்புகொண்டோம், ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

“ஒரு ஜனநாயக நாட்டோட அணுகுமுறை இது போன்ற விஷயங்கள்ல எப்படி இருக்கணும்? ஒரு கிராமத்துல இருந்து இடத்த கையகப்படுத்தப் போறீங்க. அந்த மாவட்ட கலெக்டர், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ ஆகியோர் அந்த மக்கள் கிட்ட போய், திட்டத்த விளக்கிப் பேசுங்க. அவங்ககிட்ட கருத்து கேளுங்க. அதில் பெரும்பாலானோர் ஏத்துக்கிட்டாங்கன்னா திட்டத்த செயல்படுத்துங்க. அவ்வளவுதானே? அதை விட்டு எதற்கு இந்த சர்வாதிகாரப் போக்கு? ஒரு குளறுபடியான அறிக்கைய ஆங்கிலத்துல வெளியிட்டா போதுமா? அது எப்படி அந்த விவசாயிக்குப் புரியும்?” என்று ஆவேசமாகப் பேசுகிறார் தருமபுரியில் இயங்கும் ‘நிழல் சேவை அமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்.

ஆனால், சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பனோ, “கடந்த டிசம்பர் மாதம் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் முதல்வரைச் சந்தித்து  ‘மத்திய அரசு ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான இடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. அதை எப்படியாவது சேலத்துக்குக் கொண்டுவாருங்கள்’ என்று கோரிக்கை வைத்தோம். உடனடியாக, ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசி அதைப் பெற்றுத் தந்தார் முதல்வர். இந்தத் தொழிற்சாலைகளுக்கு இது போன்ற சாலைகள் மிகவும் அவசியம். இந்தத் தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். அதற்கு இந்த எட்டு வழிச்சாலை அவசியம்” என்கிறார்.

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியும், “1960களில் பெரும் பஞ்சம் வந்தபோது மக்களைப் பசியிலிருந்து காப்பாற்றியது பசுமைப் புரட்சி. காலத்திற்கு ஏற்ப மாற்றங்களையும், வளர்ச்சியையும் நாம் ஏற்படுத்தத்தான் வேண்டும். எட்டு வழிச்சாலையில் பலன்கள் அதிகமாக இருந்தாலும், சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம். விவசாய நிலங்கள் குறைகின்றன என்பதால் உணவு உற்பத்தி குறைந்துவிடாது. இன்று அதைச் சமன் செய்ய, பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. நாளைய சமுதாயத்துக்கு வளர்ச்சியை உருவாக்க இந்த எட்டு வழிச்சாலை நிச்சயம் தேவை” என்று அழுத்தமாய்ச் சொல்கிறார்.

“நாங்கள் வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது இத்தனை சிக்கல்கள் கிடையாது. காரணம், அதில் ஏற்கெனவே இருந்த சாலைகளை விரிவாக்கம் செய்து ஒன்றிணைத்தோம். இப்போது இந்தச் சாலையைப் புதிதாக உருவாக்க வேண்டிய கட்டாயம் என்ன? சொல்லப்போனால், உளுந்தூர்பேட்டை-சேலம் வழிச் சாலை அமைக்க தனியார் யாரும் அப்போது தயாராக இல்லை. காரணம், அதில் போக்குவரத்து குறைவு என்பதுதான். தமிழகத்தில் விரிவுபடுத்த வேண்டிய, மேம்படுத்த வேண்டிய சாலைகள் எத்தனையோ இருக்கின்றன. இந்தச் சாலை அவசியமற்றது” என்கிறார் முன்னாள் நெடுஞ்சாலைப் பொறியாளர் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆலோசகர் டாக்டர்.எம்.எஸ்.ஸ்ரீனிவாசன்.

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் 8 மலைகளும், 100 ஹெக்டேர் அளவிற்கான வனப்பகுதிகளும் இந்தத் திட்டத்தால் பாதிப்பிற்குள்ளாவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்ததற்காகக் கைதாகி, சிறையிலிருந்து பிணையில் வெளிவந்திருக்கும் பியூஷ் மானுஷைத் தொடர்பு கொண்டேன்.

“சேலத்திலேயே இன்னும் முடிக்க வேண்டிய எத்தனையோ மேம்பாலப் பணிகள் இருக்கின்றன. தமிழ்நாடு முழுக்க மிக அவசியமாக நிறைவேற்றப்பட வேண்டிய எத்தனையோ சாலைத் திட்டங்கள் இருக்கின்றன. நம் நாட்டுக்கு ‘விவசாயப் பொருளாதாரம்’ முதன்மையானது. அதை அழித்துவிட்டு இங்கு எந்த வளர்ச்சியையும் கொண்டு வந்திட முடியாது. இது முழுக்க, முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கான திட்டம்.

இது சாகர்மாலா திட்டத்தின் கீழ் வரும் பாரத்மாலா திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. கூடவே, ஓசூர், சேலம் பகுதிகள் ‘பாதுகாப்பு உற்பத்தி கேந்திரம்’ ( Defence Corridor) பகுதியில் வருகின்றன. அது மட்டுமல்லாமல், சேலத்தில் கஞ்ச மலை, திருவண்ணா மலையில் கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைகளில் கனிம வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதைச் சுரண்டி எடுத்துப்போகத்தான் இந்தச் சாலைகள் பயன்படும். மேலும், ஜப்பானின் பல தொழிற்சாலைகள் இங்கு வர இருக்கின்றன. இவர்கள் எல்லாருக்குமாகத்தான் இந்தச் சாலை போடப்படுகிறது” என்று குற்றம்சாட்டுகிறார் பியூஷ்.

எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியாவில் சாலைகள் போடுவதற்காக பூர்வகுடிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. தலைமுறை, தலைமுறைகளாக வெள்ளையர்களால் சுரண்டலுக்கு உள்ளான யன்குஞ்சின்ஞரா (Yankunytjatjara) இனத்தைச் சேர்ந்த பாப் ரண்டால் (Bob Randall) இப்படியாகச் சொல்கிறார்...

“திருடப்பட்ட தலைமுறைகளின் பிள்ளைகளாய்ச் சொல்கிறோம். எந்த மனிதனும் நிலத்தைவிட மூத்தவன் இல்லை. நிலம் எங்கள் தாய். நிலம் எங்கள் சகோதரன். நிலம் எங்கள் பிள்ளை. அவர்களின் ரத்த நாளங்களை அறுத்துவிடாதீர்கள். உங்கள் எலும்புகள் மண்ணிற்குள் புதையும்போதுதான், நிலம் உங்களுக்குச் சொந்தமில்லை; நீங்கள்தான் இந்த நிலத்திற்குச் சொந்தமானவர்கள் என்பதை உணர்வீர்கள்.”

இந்தக் குரல் காலம் தாண்டியும் ஒலிக்கிறது. அரசின் காதுகளில் விழுமா?