Published:Updated:

`களநிலவரம் கவனம்!' - ஸ்டாலினுக்குச் சென்ற புகார்கள்

நாடாளுமன்றத் தொகுதியே இவர்களது கட்டுப்பாட்டில் இருப்பது போல, `பூத் கமிட்டி போட்டாச்சா..எங்கெல்லாம் ஆள்களைப் போடவில்லை. பணிகள் எப்படிச் செல்கிறது?' எனச் சம்பிரதாயமாக நான்கு கேள்விகளைக் கேட்கின்றனர்.

`களநிலவரம் கவனம்!' - ஸ்டாலினுக்குச் சென்ற புகார்கள்
`களநிலவரம் கவனம்!' - ஸ்டாலினுக்குச் சென்ற புகார்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது குறித்து தேசியத் தலைவர்களுடன் விவாதித்து வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். `தொகுதிகளின் வெற்றிக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பலரும் பெரிதாக எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. இதனால் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமோ என்ற அச்சம் வாட்டுகிறது' என வேதனைபடுகின்றனர் அறிவாலயப் பொறுப்பாளர்கள். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த பிறகு நேற்று சி.பி.எம் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். இந்தச் சந்திப்பில், பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான அணியைக் கட்டமைப்பது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றும் அளவுக்குக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையையும் நடத்தி வருகிறார் ஸ்டாலின். இதையொட்டித்தான், நாற்பது தொகுதிகளுக்கும் தலா இரண்டு பொறுப்பாளர்களை அவர் நியமித்தார். இவர்கள் அனைவரையும் அழைத்து அறிவாலயத்தில் கூட்டம் ஒன்றையும் நடத்தினார் ஸ்டாலின்.

அந்தக் கூட்டத்தில், `தொகுதி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் ஏதாவது சரிசெய்யப்படாமல் இருந்தால், தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். அதைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதற்கு வசதியாக இருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பாக வேலை செய்யுங்கள். அடிமட்டத் தொண்டர்கள் வரையில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுங்கள். மக்களுக்கு ஏதாவது நிறை குறைகள் இருந்தால் அதையும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே, அங்கு பதவியில் இருக்கும் எம்.பி-க்களின் செயல்பாடுகள் எப்படி என்பதையும் ஆராயுங்கள். பிற அரசியல் கட்சிகள் அந்தத் தொகுதிகளில் என்ன செய்கின்றன என்பதையும் கவனியுங்கள். இதைப் பற்றித் தலைமைக்குத் தெரியப்படுத்துங்கள். நல்லபடியாக வேலை செய்கிறவர்களை ஊக்கப்படுத்துங்கள். மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து செயல்படுங்கள்' என உற்சாகப்படுத்தினார். 

``ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளை உள்வாங்கிக் கொண்டுதான் தொகுதிகளுக்குப் பயணமானார்கள் பொறுப்பாளர்கள். ஆனால், களநிலவரம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை" என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` மாவட்டச் செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுங்கள் எனத் தலைமை கூறினாலும், தொகுதிப் பொறுப்பாளர்களை மா.செக்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சில மாவட்டங்களில் உள்ளூர் அ.தி.மு.க அமைச்சர்கள், மொத்த தி.மு.க-வினரையும் விலைக்கு வாங்கிவிட்டதையும் அறிய முடிந்தது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாததால், உள்ளூர் அ.தி.மு.கவினருடன் உடன்பிறப்புகள் பலரும் சமரசமாகிவிட்டனர். இதுகுறித்து தலைமையின் கவனத்துக்குப் பல புகார்கள் வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, இவர்களில் பலர் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என நம்புகிறோம்.

பெரும்பாலான கிராமங்களில் அ.தி.மு.க நிர்வாகிகளின் தேர்தல் பணிகளைப் பார்க்க முடிகிறது. `உங்களுடைய தேவைகளை நிறைவேற்றித் தருகிறோம்' என நம்ப முடியாத வாக்குறுதிகளையும் அவர்கள் அளிக்கின்றனர். ஆனால், தி.மு.க பொறுப்பாளர்களோ, தொகுதிக்கு இரண்டு நாள் பயணம் செல்கின்றனர். ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளை அழைத்துக் கூட்டம் போடுகின்றனர். அந்தக் கூட்டத்திலும், நாடாளுமன்றத் தொகுதியே இவர்களது கட்டுப்பாட்டில் இருப்பது போல, `பூத் கமிட்டி போட்டாச்சா. எங்கெல்லாம் ஆள்களைப் போடவில்லை. பணிகள் எப்படிச் செல்கிறது?' எனச் சம்பிரதாயமாக நான்கு கேள்விகளைக் கேட்கின்றனர். பயணம் முடிந்த கையோடு மா.செக்களிடம் ஐம்பதாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு திரும்பிவிடுகின்றனர் சில பொறுப்பாளர்கள். 

`தொகுதிகளில் கட்சியின் நிலை எப்படியிருக்கிறது?' என்றெல்லாம் யாரும் ஆய்வு செய்யவில்லை. `அனைத்தும் சரியாகச் செல்கிறதா?' என்ற கேள்வியைக் கேட்டார்களே தவிர, கட்சியின் அடிமட்டம் வரையில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவில்லை. அ.தி.மு.க எந்தளவுக்குப் பணிகளைச் செய்கிறது என்ற சாதாரண கேள்வியைக் கூட சிலர் எழுப்பவில்லை. பொறுப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையே, ஏற்கெனவே கிடைத்த தோல்வியைச் சரிக்கட்ட என்ன செய்யலாம் என்பதை ஆய்வு செய்வதுதான். அதை செய்யத் தவறிவிட்டனர். இதில், பல பொறுப்பாளர்களுக்கு எப்படிக் கேள்வி கேட்பது என்றே தெரியவில்லை. சிலர் பேசும்போது, ` எல்லாவற்றையும் மா.செ பார்த்துக் கொள்வார். அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை' எனப் பேசியுள்ளனர். பிறகு எதற்காக தொகுதிப் பொறுப்பாளர்களைத் தலைமை அறிவிக்க வேண்டும்? பல மாவட்டங்களில் பொறுப்பாளர்களைக் கண்டாலே மா.செக்கள் கொதிப்படைகின்றனர். இன்னும் இரண்டு தரப்புக்கும் இடையில் சரியான பிணைப்பு உருவாகவில்லை. தேர்தல் தேதி நெருங்குவதற்குள் இவற்றையெல்லாம் தலைமை சரிசெய்யும் என எதிர்பார்க்கிறோம்" என்றார் ஆதங்கத்துடன். 

தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி மறைந்து இன்றோடு 100 நாள்களாகிவிட்டன. இதுதொடர்பாக, உடன்பிறப்புகளுக்கு நினைவு மடல் ஒன்றை எழுதியிருக்கிறார் ஸ்டாலின். அதில், `பல பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்தவர் கலைஞர். குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற வடிவமைப்பை உருவாக்கிடச் செய்து, அதன் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்தின் நலன்களையும் பாதுகாத்தவர். அவர் வகுத்துத் தந்த வழிமுறை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. கலைஞரின் புகழ் வணக்க நிகழ்வுகளில் அவரது நினைவுகளில் நீந்துவதுபோலவே, அவர் கற்றுத்தந்த எதிர்நீச்சலையும் மேற்கொள்வோம். அவரிடம் பயின்ற கனிவும் துணிவும் பணிவும் வலிவும் பொலிவும் குறிதவறாத வியூகமும் மிக்க உழைப்பை எந்நாளும் வழங்குவோம்' என உருக்கமாக விவரித்திருந்தார். 

`மடலில் மட்டுமல்லாமல், தேர்தல் களத்திலும் இவை எதிரொலிக்க வேண்டும்' என எதிர்பார்க்கின்றனர் உடன்பிறப்புகள்.