Published:Updated:

`வட இந்தியர்களுடன் என்ன பிரச்னை?’ - டிசம்பர் 2-ல் மனம் திறக்கிறார் ராஜ் தாக்கரே

`வட இந்தியர்களுடன் என்ன பிரச்னை?’ - டிசம்பர் 2-ல் மனம் திறக்கிறார் ராஜ் தாக்கரே
`வட இந்தியர்களுடன் என்ன பிரச்னை?’ - டிசம்பர் 2-ல் மனம் திறக்கிறார் ராஜ் தாக்கரே

மும்பையில் லட்சக்கணக்கான வட இந்தியர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளம். நடிகர் அமிதாப்பச்சன்கூட உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். மும்பையில் தமிழர்கள் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்துவதுபோல, வட இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மும்பையிலிருந்து வெளியேற வேண்டுமென்று அடிக்கடி சிவசேனா கட்சி கூறி வந்தது. 

அதேபோல் ராஜ்தாக்கரேவின் நவநிர்மான் சேனா கட்சியும் வட இந்தியர்களுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில், மும்பையில் டிசம்பர் 2-ம் தேதி வட இந்தியர்கள் சங்கமான 'உத்தர பாரத் மாகாபஞ்சத் சங்' என்ற அமைப்பு நடத்தும் விழாவில் ராஜ் தாக்கரே கலந்துகொள்கிறார். இந்தத் தகவலை சங்கத்தின் தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், `காந்திவிலியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு ராஜ் தாக்கரே தலைமை தாங்கிப் பேசுகிறார். அப்போது, வட இந்தியர்கள் மீதான தனது கருத்தையும் தெரிவிப்பார்' என்று கூறியுள்ளார்.  

சில மாதங்களுக்கு முன் வடஇந்திய தெருவோர வியாபாரிகளுக்கு எதிரான நவநிர்மான் சேனா கட்சி பெரும் போராட்டம் நடத்தியது. மும்பை, தானே, புனே நகரங்களில் வசித்த வட இந்திய தெருவோர வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பலரும் மகாராஷ்ட்ராவை விட்டு வெளியேறினர். தற்போது, நவநிர்மான் சேனா கட்சியின் மீதான வட இந்தியர்கள் பார்வை மாறும் வகையில் அவர்கள் அமைப்பு நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க ராஜதாக்கரே முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.