Published:Updated:

``நேருவைப் பின்பற்றுகிறாரா மோடி?’’ - ஒரு சாமானியனின் கடிதம்!

சுதந்திர இந்தியாவின் `முதல் பிரதமர்’ பதவி, வெறும் புகழை மட்டுமல்லாமல் மிகப்பெரிய சுமைகளையும் தாங்கியே வந்தது. அதைத் தூக்கிச் சுமக்கும் தோள்கள் சரியானதாக இல்லாவிட்டால், இந்தியாவே சரிய வேண்டியதாகப் போய்விடும்.

``நேருவைப் பின்பற்றுகிறாரா மோடி?’’ - ஒரு சாமானியனின் கடிதம்!
``நேருவைப் பின்பற்றுகிறாரா மோடி?’’ - ஒரு சாமானியனின் கடிதம்!

வீன இந்தியாவின் சிற்பி நேரு அவர்களுக்கு,

வணக்கம், அவ்வப்போது புதிதாகப் பிறந்துகொண்டிருக்கும் இந்தியாவிலிருந்து சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். முதலாவதாக ஒரு முக்கியத் தகவலை உங்களிடம் பகிர்ந்தாக வேண்டும். இனி நீங்கள் பிறந்த ஊரின் பெயர் `அலகாபாத்’ அல்ல... அது இனி, `பிரயாக்ராஜ்’ என அழைக்கப்படுமாம். மக்களின் வாழ்வை மேம்படுத்தப்போகும் அதிமுக்கியத்துவம் (!?) வாய்ந்த இம்மாற்றத்தை ஆளும் பி.ஜே.பி அரசு செய்திருக்கிறது.

என்னுடைய சிறுவயதில் அறிமுகமாகியிருந்த நேரு என்பவர், யானையைக் காண ஆசைப்பட்ட ஜப்பான் நாட்டுக் குழந்தைகளுக்கு ஒரு குட்டி யானையை விமானத்தில் அனுப்பிவைத்தார். இப்படிக் குழந்தைகளின்மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராகத்தான் என்னைப் போன்ற பல சிறுவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் நீங்கள் ஆற்றிய பெரும் பணியைப் பின்னாள்களில் தெரிந்துகொண்டோம். மதம்சாராத கட்டமைப்பின்மீது இந்தியாவை உருவாக்கியதன் மூலம் அது எல்லோரையும் உள்ளடக்கிய எல்லோருக்குமான இந்தியாவாக இன்றுவரை திகழ வழிவகுத்தவர் நீங்கள் மட்டும்தான்.

சுதந்திர இந்தியாவின் `முதல் பிரதமர்' பதவி, வெறும் புகழை மட்டுமல்லாமல் மிகப்பெரிய சுமைகளையும் தாங்கியே வந்தது. அதைத் தூக்கிச் சுமக்கும் தோள்கள் சரியானதாக இல்லாவிட்டால், இந்தியாவே சரிய வேண்டியதாகப் போய்விடும். ஆனால், அதை உங்களைவிட வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக வழி நடத்தியிருக்க இயலாது. உங்களின் 'பஞ்சசீலக் கொள்கை' உலக அளவில் இந்தியாவுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கித் தந்தது. `அணிசேராக் கொள்கை' வளரும் நாடுகளின் தலைமை நாடாக இந்தியாவை உருவாக்கியது. அதன்மூலமாக இந்தியா அடைந்த பலன்கள் ஏராளம். இன்று தேசிய, பொருளாதார, அறிவியல், விஞ்ஞானரீதியாக இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி அனைத்துக்குமான கடைக்கால், தங்களின் அரசாட்சி என்றால் அது மிகையல்ல.

``ஏர் உழும் மனிதனை வானில் வைத்துப் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது? எண்ணற்ற தலைமுறைகளாக அவன் நசுக்கப்பட்டிருக்கிறான். பல காலமாக அவனைச் சுரண்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள். அவனுக்கும் அவனோடு வாழும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?” - இவை உங்களின் வரிகள் அல்லவா? இவை, அத்தனை சுத்தமான உண்மை. இங்கு வேளாண்மையின்மீதும் உழவர்களின்மீதும் ஒரு புனிதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வேளாண்மையின் முன்னேற்றம் குறித்தோ விவசாயிகளின் வாழ்க்கை குறித்தோ கவலைப்படுவதாக அரசு இல்லை. அது, உங்களின் வழித்தோன்றல்களான காங்கிரஸாயினும் சரி, மற்ற கட்சிகளாயினும் சரி... இன்றுவரை இந்தியா விவசாய நாடுதான் என்பதில் இவர்களுக்கு ஏதேனும் பிரச்னையா என்பதும் தெரியவில்லை. 

``நான் அவர்களை நகரவாசிகளாக்க விரும்பவில்லை நகரத்தாரின் வசதிகள் அவர்களுக்கும் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றீர்கள். இப்போது பல கிராமவாசிகள் நகரவாசிகளாகிவிட்டனர். வாழ்வாதாரத்தைத் தொலைத்ததாலும், பிழைப்பு தேடி வந்ததனாலும் நகரவாசிகளாகிவிட்டனர். ஆனால், இங்கும் அவர்கள் சுரண்டப்பட்டும் நசுக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை மாற ஒரு வழியில்லை.

``அரசியல், என்னைப் பொருளாதாரம் நோக்கித் தள்ளியது; அது, என்னை அறிவியலையும் அறிவியல் அணுகுமுறையையும் நோக்கித் தள்ளியது; நம்முடைய எல்லாப் பிரச்னைகளுக்குமான தீர்வுகளும் அறிவியல் அணுகுமுறையில்தான் உள்ளன” என்றீர்கள். உங்களுக்கு அறிவியல், விஞ்ஞானம் குறித்த தெளிவான பார்வையிருந்தது. வலுவான அறிவியல் மற்றும் கல்வி மையங்கள் உங்கள் காலத்தில் எழுந்தன. அதன் காரணமாக நீங்கள் தொடங்கிய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு, அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் வளர்ச்சியால் இன்று நாம் `சந்திராயன்’ மூலம் நிலவுக்குச் செல்லுமளவு வளர்ந்துவிட்டோம். ஆனால், இன்று ஆட்சியில் இருப்பவர்கள் அதை நோக்கித்தான் பயணிக்கிறார்களா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது. 

ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ``பண்டித நேருவால் இந்தியாவுக்கு ஜனநாயகம் கிடைத்தது எனக் கதை சொன்னாலும் அதை நம்புவதற்கில்லை’’ என்றார். வேறெந்த தேசியவாதிகளைவிடவும் அனைவருக்கும் வாக்குரிமையையும், பல கட்சி தேர்தல் அரசியலையும் வளர்த்தெடுத்தவர் தாங்கள். பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உறைந்திருக்கும் பல்வேறுபட்ட மத, இன, கலாசார, பண்பாட்டு வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு அவை அனைத்தையும் உள்ளடக்கிய பன்முகத் தன்மைகொண்ட இந்தியாவே உங்களின் கனவு இந்தியாவாக இருந்தது. இந்தியாவின் தேசிய மொழியை நிர்ணயிக்கும்போது, இந்தி பேசாத மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு எந்த மொழியையும் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்காமல், ``ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமா என்பதை நான், இந்தி பேசாத மக்களின் விருப்பத்துக்கே விட்டுவிடுகிறேன்’’ என்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியவர் நீங்கள். ஆனால், இந்தியாவின் பன்முகத்தன்மையை அரசு அதிகாரத்தின் மூலம் அழித்தொழித்துவிட்டு, `ஒரே மதம், ஒரே மொழி' என ஒற்றைத் தன்மையை நோக்கி இந்தியாவை மாற்ற முயன்று கொண்டிருக்கிறார்களோ என்றே தோன்றுகிறது. 

உங்களின் ஆட்சிக்காலத்தில் எழுந்த முந்தரா ஊழல், கைரோன் என்கிற பஞ்சாப் முதல்வரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் தலையிடாமல் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதற்கு அனுமதித்தவர் தாங்கள். ஆனால், இன்றைய நிலை என்ன? சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி அனைத்தையும் தங்களின் கைப்பாவைகளாக மாற்றி வைத்துக்கொண்டு ஊழலில் திளைத்துத் திரியும் இவர்கள்தான் மக்களாட்சி பற்றிப் பேசுகிறார்கள். இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இன்னும் அதிகம் என்பது உங்களுக்கு நிச்சயம் கசப்பான செய்திதான். 

உங்களின் மிகப்பெரிய சாதனை எதுவெனக் கேட்டபோது, ``இந்துச் சட்டங்களைத் திருத்தியது’’ என்றீர்கள் அல்லவா? பழைமைவாத மற்றும் ஆணாதிக்கச் சிந்தனையில் கட்டமைக்கப்பட்ட இந்து மதச் சட்டங்களைத் திருத்தி, பெண்களுக்குப் பல உரிமைகளைப் பெற்றுத்தந்த அம்பேத்கரின் சட்டங்களுக்கு ஒப்புதல் தந்து நிறைவேற்றிய உங்களுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். பஞ்சசீலக் கொள்கைகளில் ஒன்றான 'பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுதல் கூடாது' என்பதை காங்கிரஸ் அரசே கடைப்பிடிக்கவில்லை. இலங்கை விவகாரத்தில் தலையிட்டதன் வாயிலாகக் கசப்பான சூழ்நிலைகளையும் உலகப் பொருளாதார அரசியலுக்கு இந்தியா பலியாகியதும் நடந்தேறியது. ஆனால், அது மிகச் சாதுர்யமாக மறைக்கப்பட்டுவிட்டன. 

உங்களின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நீர்த்தேக்கத் திட்டங்களால் பழங்குடியினர் பலர் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டதாக விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். அவை, உண்மைதான். எனினும், அந்த நீர்த்தேக்கங்களால் இந்தியா அதிக பலன்களைப் பெற்றதும் உண்மை. ஆனால், பலன்களைப் பெரிதாக நல்காத அரசியல் ஆதாயத்துக்காக 3,000 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டிருக்கும் சிலை பல பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது. படேல் அவர்களோடு உங்களை ஒப்பிட்டு அரசியல் செய்ய முயல்கிறார்கள். ஆனால், ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதில் நீங்கள் ஒன்றுபட்டே செயல்பட்டீர்கள் என்பது உண்மை அல்லவா?

உலகளவில் இந்தியப் பிரதமர்களில் உங்களுக்கு என்று ஓர் உயர்ந்த இடம் உண்டு. அதை வெறுமனே எல்லா நாடுகளுக்கும் சென்று வருவதாலேயே பெற்றுவிடவோ... இல்லை, உங்களின் புகழைக் குறைத்துவிடவோ முடியாது. காந்தியின் எண்ணமான, ``இந்து, முஸ்லிம் வலதுசாரிகள், இடதுசாரிகள், ஒடுக்கப்பட்டவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய எல்லோருக்குமான இந்தியா என்ற கருத்தாக்கத்தை உளப்பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் உணர்ந்துகொண்டவர் தாங்கள். என்னதான் மத அடிப்படையில் நாடுகள் நிலைபெற்றிருந்தாலும் அவை எல்லாம் பல்வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளற்ற நாடுகள். ஆனால், ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படும் அளவுக்குப் பண்பாடு, மத, இன, புவியியல் ரீதியில் பன்முகத்தன்மையைக் கொண்ட இந்தியாவுக்கு மதரீதியிலான கட்டமைப்பு என்பது சற்றும் பொருந்தாது என்பதைப் புரிந்துகொண்டு இயங்கும் ஒருவராலேயே அத்தகைய இடத்தை அடைய முடியும். மத அடிப்படையிலான தேசியவாதம் வெறுப்பையே ஏற்படுத்தும். தேசியம் என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக முன்வைக்காமல் நீங்கள் எல்லோரையும் அரவணைத்ததால்தான் 'இந்தியா' என்ற தேசிய உணர்வு இந்தியர்களுக்கு மேலோங்கியது. அதனால்தான் நீங்கள் 'நவீன இந்தியாவின் சிற்பி'! 

இப்படிக்கு, 

புதிய இந்தியாவின் சாமானியன்