Published:Updated:

நேரு காண விரும்பிய `கனவு இந்தியா' எப்படி இருந்தது?

நேருவின் `கனவு இந்தியா' என்பது அனைவரையும் உள்ளடக்கியது; மதம், சாதி முரண்கள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்து சமத்துவத்தை நிலைபெறச் செய்வதாகும். மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அதேநேரத்தில், பெண்களின் முன்னேற்றம், விவசாயிகள் மேம்பாடு போன்ற நேரு கண்ட அல்லது காண விரும்பிய `கனவு இந்தியாவை' நோக்கிப் பயணிக்கட்டும் மத்திய அரசின் செயல்பாடுகள்...

நேரு காண விரும்பிய `கனவு இந்தியா' எப்படி இருந்தது?
நேரு காண விரும்பிய `கனவு இந்தியா' எப்படி இருந்தது?

ந்தியாவில் தற்போது முதிர்ந்துவரும் ஜனநாயகம், நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் கேள்விக்குள்ளாகும் சூழலில், நாடு சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரும், நாட்டின் சகிப்புத் தன்மையை வளர்ப்பது பற்றியான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. காஷ்மீரில் எல்லை தொடர்பான பிரச்னை பதற்றமான சூழலில் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கையில். தர்மபுரி, சேலம் என இந்தியா நெடுகிலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. 

இப்படியான பதற்றங்களுக்கு இடையே உறுதியான, திடமான இந்தியாவைக் கட்டமைக்க, நாட்டின் முதலாவது பிரதமரும், சுதந்திர இந்தியாவின் சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேருவின் கனவுகள் தேவைப்படுகின்றன.

உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் நேரு. அரண்மனை போல வீடு, லண்டனில் உயர் கல்வி எனச் சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்தவர். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் சூழல் நேருவைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. நேருவின் வாழ்க்கை முறையே ஆங்கிலேயர்களுக்கு இணையானதாக இருந்தது. உயர் கல்விக்குப் பின்னர் 1912-ல் இந்தியா திரும்பிய நேரு, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டார். லக்னோவில் 1920-களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான் மகாத்மா காந்தியை நேரு முதல்முறையாகச் சந்தித்தார்.

காந்தியின் தொண்டராகத் தன்னை அறிவித்துக்கொண்ட அவரை, பிற்காலத்தில் தன் வாரிசாக அறிவித்தார் காந்தி. அதுவே சுதந்திர இந்தியாவின் ஜனநாயகப் பாதையைத் தீர்மானித்தது என்று கூறலாம். சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 17 ஆண்டுக்காலம் பிரதமர் பதவியில் அமர்ந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர். அதற்கு முன்னர் அவருடைய வாழ்நாளில் விடுதலைப் போராட்டத்திற்காக ஏறத்தாழ ஒன்பது ஆண்டுக் காலம் சிறையில் இருந்தார். அதனால்தான், நேருவால் சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் மக்களின் போராட்டங்களை மதிப்பவராகத் திகழ முடிந்தது.

இந்தியாவைப் போன்று பல்வேறு மொழிவழி தேசிய இனங்களை உள்ளடக்கிய நாட்டில், மொழி என்பது எப்போதும் சர்ச்சைகளாகவே நீடிக்கக் கூடியது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மொழிக் கொள்கையை வகுக்கும்போது, `பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்படும்’ எனச் சட்டம் இயற்றப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. இதற்குப் பதிலளித்த நேரு, "மக்களின் விருப்பமில்லாமல் அரசு மொழியைத் திணிக்காது" என்றார். இன்றைய சூழலில் பல்வேறு மொழிகளும் அரசின் அங்கீகாரத்தோடு நிலைத்திருக்க நேருவின் அந்த அறிவிப்பே வழிவகுத்தது.

சாலையோரங்களில் உள்ள மைல் கற்களில் இந்தியில் எழுதுவது, ரயில் நிலையங்களில் உள்ள தமிழ்ப் பெயர்களை அழித்துவிட்டு, இந்தியைச் சேர்ப்பது போன்று சமீபத்தில் நடந்தேறிவரும் நிகழ்வுகள் நேருவை நமக்கு ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்தியாவில் நேருவின் பிறந்த நாள், குழந்தைகளின் தினமாகக் கொண்டாடப்படுகையில், சேலத்தில் பாலியல் இச்சைக்கு இணங்காத குழந்தையை, அந்தச் சிறுமியின் தாய் கண் முன்பே `தலையைத் துண்டித்துக் கொலைசெய்த கொடூரச் சம்பவம் நடந்தேறியுள்ளது. 

இந்தியா மட்டுமன்றி, உலகளவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. உலகப் போரின்போது ஜப்பானில் அதிகப்படியான விலங்குகள் அழிக்கப்பட்டன. இதனால், குழந்தைகளை மகிழ்விக்க ஜப்பானில் உள்ள யூனோ பூங்காவுக்கு யானைக்குட்டியைப் பரிசாக அளித்தார் நேரு. குழந்தைகளையும் உள்ளடக்கி, அவர்களுக்கான இடத்தை உறுதிசெய்வதுடன் நாட்டில் நாளைய சமூகத்தைச் சிறப்பான வகையில் உருவாக்க வழிவகுக்கும் என நம்பினார் நேரு.

அண்ணல் அம்பேத்கர், சட்ட அமைச்சராக இருந்தபோது, பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குதல், பெண்கள் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை போன்றவற்றுக்காக, இந்துக்கள் சட்ட மசோதாவில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். அந்த மசோதாவை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு நேரு, மீண்டும் 1952-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போதிய பெரும்பான்மை பெற்று, அம்பேத்கர் கொண்டுவந்த சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றினார். அதன் மீதான விவாதத்தில் 1955 மே 5-ம் தேதி நேரு பேசுகையில், ``வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; பெண்களின் முன்னேற்றமும் நாட்டின் வளர்ச்சியில் அடங்கும்” என்றார். அவரின் இந்தப் பேச்சு, இந்தியப் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை நிலைபெறச் செய்தன.

கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு தரப்பினரும் இடஒதுக்கீடு கேட்டு, அதனை நோக்கிய போராட்டங்கள் இந்தியா முழுக்க அதிகரித்து வருகின்றன. குஜராத்தில் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், மகாராஷ்ட்ராவில் மராட்டியர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள இடஒதுக்கீடு அவசியமானது என்று தெரிவித்துப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 1950-களில் இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் அமைய வேண்டும் என விவாதங்கள் நடக்கையில் `சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களுக்குத்தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என மொழிந்த நேரு, `அந்த வழிமுறையே அனைவருக்குமான வளர்ச்சியை அளிக்கும்' என்றார். நேருவின் தெளிவான அத்தகைய செயல்பாடுகளினால்தான், இன்று அரசுத் துறைகளில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தியாவின் மதச்சார்பின்மை என்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னெடுக்க வழிவகுத்தவர்களில் முதன்மையானவர் நேரு. தன்னை ஒரு நாத்திகன் என அறிவித்துக்கொண்டாலும் `மக்களின் சமயம் பற்றிய கொள்கைகளில் அரசு தலையிடாது' என்ற நிலையை உருவாக்கியவர். எந்த மதத்தையும் மக்கள் பின்பற்றுவதற்கான சூழல் இந்தியாவில் உருவாகியது. `முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது' என இன்று ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களே சொல்லும் காலத்தில், நேருவின் மதச்சார்பின்மை தொடர்பான கொள்கைகள்தான், மக்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கைகளை வலுப்பெறச் செய்கிறது.

விடுதலைக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்னை பசி. அந்தப் பிரச்னையிலிருந்து மக்களைக் காப்பாற்றும்வகையில், விடுதலைக்குப் பின்னர், நேரு நிறைவேற்றிய முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் உணவு உற்பத்தி, விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். `இந்தத் துறைகளில் இந்தியா தீவிர கவனம் செலுத்தும்' என்றார் அவர். என்றாலும் விவசாயிகளின் போராட்டங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பல போராட்டங்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தி வருவதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கோமாளிகளாக்கினாலும், விவசாயத்தைப் பாதுகாக்க போராடுவோர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

நேருவின் `கனவு இந்தியா' என்பது அனைவரையும் உள்ளடக்கியது; மதம், சாதி முரண்கள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமன்செய்து சமத்துவத்தை நிலைபெறச் செய்வதாகும். மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அதே நேரத்தில், பெண்களின் முன்னேற்றம், விவசாயிகள் மேம்பாடு போன்ற நேரு கண்ட அல்லது காண விரும்பிய `கனவு இந்தியாவை' நோக்கிப் பயணிக்கட்டும் மத்திய அரசின் செயல்பாடுகள்.