Published:Updated:

“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்!”

“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்!”

த.கதிரவன் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்!”

த.கதிரவன் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்!”

பா.ம.க டாக்டர் அன்புமணி ராமதாஸும், பா.ஜ.க டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனும் ட்விட்டரில் நடத்திவரும் ‘நீயா நானா’ மோதல்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்!

`என்னதான் பிரச்னை...?’ என்ற  கேள்வியோடு பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸைச் சந்தித்தேன்...

 `` ‘சாதியை வைத்து நான் சாதிக்கவில்லை’ என்று தமிழிசை உங்களைச் சாடுகிறாரே..?’’

“பா.ம.க-வின் வளர்ச்சியைப் பிடிக்காத, ஏற்றுக்கொள்ள முடியாத கட்சிகள்தான் எங்கள் மீது, திட்டமிட்டு சாதி சாயம் பூசுகிறார்கள்.

‘அன்புமணி, சாதி ரீதியாக இந்தத் தவற்றைச் செய்தான்’ என்று யாராவது என் பெயரில் தப்பு சொல்ல முடியுமா? எனக்கு சாதி, மதம், இனம் என்று எந்தப் பாகுபாடும் கிடையாது. தமிழ்நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய நோக்கம்.

நான் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் அகில இந்திய மருத்துவத் தேர்வில், எஸ்.சி-எஸ்.டி மாணவர்களுக்கு 22 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தேன். 2008-ல் இதற்காகவே பூட்டாசிங், திருமாவளவன், செ.கு.தமிழரசன் உள்ளிட்ட 37 தலித் அமைப்பினர் சென்னையில் எனக்குப் பாராட்டுவிழா நடத்தி விருது கொடுத்தனர். சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அயோத்திதாசர் பெயர் வைத்ததும் நான்தான்!’’

“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்!”

“சமூக நீதி, இட ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேசிவரும் பா.ம.க இன்னமும் சாதியவாதத்தையும் தூக்கிப்பிடிப்பது நியாயம்தானா?’’

“வன்னியர் சங்கம் என்ற அடித்தளத்திலிருந்து அரசியல் கட்சியாக பா.ம.க உருவாகி 30 வருடங்களாகிவிட்டன. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் எங்களை இப்படியே பிராண்ட் பண்ணுவீர்கள்? வேறு எதையுமே நாங்கள் செய்யவில்லையா?

இந்தியாவில், 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசியக் கிராமப்புற சுகாதாரத் திட்டம், சேலம் ரயில்வே கோட்டம், மது ஒழிப்பு - புகையிலை ஒழிப்பு, இட ஒதுக்கீடு என்று எவ்வளவோ திட்டங்கள், சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தோம்.... அதற்கான போராட்டங்களை நடத்தினோம். இவையெல்லாம் எந்தக் குறிப்பிட்ட சாதிக்காக நடத்தினோம் என்று சொல்வீர்கள்?’’

``கலப்புத் திருமணத்தால்,சாதியை ஒழித்துவிட முடியாது - என்று பேசிவருவதும், ஆதிக்க சாதி அமைப்புகளை ஒரே அணியாகத் திரட்டும் முயற்சியிலும் பா.ம.க பின்னணியாக இருந்துவருகிறதே...?’’

``சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் இங்கே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சாதியை எப்படி ஒழிக்கவேண்டும்..? வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் மட்டும் ஒழிந்துவிடுமா... அல்லது கலப்புத் திருமணம் செய்தால் போதுமா?

சமூக - பொருளாதார - கல்வி ரீதியாக அனைவரையும் முன்னேற்றமடையச் செய்துவிட்டால், தானாகவே சாதி என்ற கட்டமைப்பு ஒழிந்துபோகும். இதை விட்டுவிட்டு, நாடகக் காதல், கடத்தல், போராட்டம் என்றெல்லாம் செய்துகொண்டிருந்தால், பிரச்னைகள் இன்னும் பெரிதாகுமே தவிர, சாதியை ஒழிக்க முடியாது!”

``வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தத்தை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கும்போது, பா.ம.க மட்டும் வரவேற்கிறதே..?’’

“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட மக்களும் தங்களுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லும் அடிப்படை உரிமை வேண்டும்தானே..? ஆனால், அதற்கான வாய்ப்பே இங்கு இல்லையே..! அதனால்தான் 90 விழுக்காடு வழக்குகள் ஆதாரமே இல்லாமல் போடப்பட்ட வழக்குகளாக நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.   காவல்துறையிலேயேகூட சிலர், காசுக்காக இதுபோன்ற வழக்குகளைப் போடச்சொல்லிப் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித் தவறுகள் நிறைய நடந்து கொண்டிருந்ததால்தான், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் திருத்தம் செய்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே தடை செய்யவில்லை!’’

“வன்னியர் சங்கத் தலைவர் ‘காடுவெட்டி குரு’ உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, பா.ம.க அவரைச் சரிவர கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே...?’’


“குரு என் அப்பாவுக்கு மூத்த பிள்ளை போன்றவர்; எனக்கு அண்ணன். என் அண்ணனுக்கு நான் சரியான வைத்தியம் பண்ணாமல் இருந்திருப்பேனா..?


குருவுக்கு வந்திருந்தது ‘நுரையீரல் தொற்றுநோய்’ (Interstitial lung disease). ‘மாற்று நுரையீரல்’ பொருத்தலாம் என்ற முடிவுக்கு வந்தபோதும்கூட, அந்த அறுவை சிகிச்சை குறித்து அவரின் உறவினர்கள் யாரோ சொல்லிய கருத்துகளை மனதில் கொண்டு அதையும் தவிர்த்தார்.

என் அப்பா பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தபோது நான் கவனித்துவந்ததைவிடவும், என் அண்ணன் குரு மருத்துவ சிகிச்சையில் இருந்த அந்த 45 நாள்களும் நான் வெளியூர் எங்கேயும் செல்லாமல் உடனிருந்து அக்கறையோடு கவனித்துவந்தேன். இப்போதும் அவர் பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்ட எதிர்காலத் தேவைகளை நான்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்!’’

‘`உங்களோடு நேருக்கு நேர் விவாதம் செய்ய அமைச்சர் செங்கோட்டையன் வரவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்கள். ஆனால், அறப்போர் இயக்கமும், வேல்முருகனும் நேருக்கு நேர் விவாதத்துக்கு உங்களை அழைத்தும்கூட நீங்கள் போக மறுக்கிறீர்களே... ஏன்?’’


``கோயில் சொத்தைக் கொள்ளையடித்த தி.மு.க., அ.தி.மு.க-வினரை எல்லாம் விட்டுவிட்டார்கள்; கோயிலுக்காகப் பொது இடத்தில் கட்டடம் கட்டியவரை எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்  பிரச்னையைக் கிளப்பினார்கள். அவர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவரும் கிடையாது.

என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த விரும்புபவருக்கும் ஒரு தகுதி வேண்டும் அல்லவா...? வேல்முருகனோடு விவாதம் நடத்த, அவருக்கு நிகராக எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறோம்!’’

“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்!”

‘`நீட் தேர்வு நடைமுறை இல்லாத காலத்திலும், அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் அதிகளவில் பங்குபெற முடியாத நிலைதானே நிலவியது...?’’

``உண்மைதான்...  மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு தமிழகத்தில் இருந்த காலகட்டமான 1984 - 2006 வரை அரசுப் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை... வெறும் 15 விழுக்காடு எண்ணிக்கையிலான கிராமப்புற மாணவர்களே பயனடைந்தார்கள்.  ஆனால், 2006 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்த பிறகு, இந்த எண்ணிக்கையானது 65 விழுக்காடாக உயர்ந்தது. இப்போது ‘நீட் தேர்வு’ வந்து ஒட்டுமொத்தமாக சமூக நீதியையே சாகடித்துவிட்டது.’’

“தமிழகத்துக்குத் தேவை ஆக்டர் அல்ல... டாக்டர்! என்றெல்லாம் பேசிய நீங்களே, கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்குச் செல்கிறீர்களே...?’’


“காவிரி பற்றி விவாதிக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு  யார் அழைத்தாலும் பா.ம.க அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும். கமல்ஹாசன் ஓர் அரசியல் கட்சியை நடத்திவருபவர். ஆனாலும் கட்சி சார்ந்து எந்த அடையாளமும் இந்தக் கூட்டத்தில் இருக்காது என்றும் அறிவித்திருந்தார். அதனால் நாங்களும் கலந்துகொண்டோம். ஆனால், அதே கமல்ஹாசன் இப்போது குமாரசாமியை நேரில் சந்தித்துப் பேசி அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்துவிட்டார். அரசியலில் கமல்ஹாசன் எதையும் தெரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

கிராமத்து மக்களை நேரில் சந்தித்துப் பேசி அவர்களது பிரச்னை என்ன, கோரிக்கை என்ன, தேவை என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு மக்கள் பிரச்னைக்காகப் போராடுவதுதானே அரசியல். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல், இன்னமும் ஷூட்டிங் ஸ்பாட், இயக்குநர், நடிகர் - நடிகை, இயக்குநர் என்று குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மக்கள் பிரச்னைகள் பற்றி என்ன தெரியும்..?

அரசியலைப் பொறுத்தவரையில், கமல்ஹாசன் இன்னும் எல்.கே.ஜி லெவலில்தான் இருக்கிறார். ரஜினிகாந்த், பேபி கிளாஸில் இருக்கிறார்!’’

“இதே காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், பா.ம.க பங்கேற்க வில்லையே..?’’

“காவிரிப் பிரச்னை இந்தளவு பூதாகரமானதற்கு அடிப்படைக் காரணமே தி.மு.க-தான்.

1914-ல் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவு 47 டி.எம்.சி மட்டும்தான். ஆனால், அதன்பிறகு 1966-லிருந்து 1974 வரையிலான காலகட்டத்தில்தான் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, சொர்ணாவதி என 4 அணைகளைக் கட்டிவிட்டது கர்நாடகா. இப்போது 5 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 105 டி.எம்.சி. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பிலிருந்த தி.மு.க., கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளைக் கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் மூலகாரணம்! அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் மிரட்டலுக்கு பயந்தே கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவில்லை. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியாக இப்போது, அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தினார்கள். அதையும்கூட அவர்கள் உண்மையாகச் செய்யவில்லை!”

 “ஆளும் கட்சியினரைத் தாக்குவதைவிடவும் மு.க.ஸ்டாலினை குறிவைத்துத் தாக்குகிறீர்களே..?’’

“ஸ்டாலினை விமர்சித்து அறிக்கை எதுவும் நாங்கள் வெளியிடுவதில்லை. அவருடைய செயல்பாடுகள் குறித்த கமென்ட்தான் சொல்கிறோம்.

‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காவிரியைக் கொண்டுவருவோம்’ என்கிறார் ஸ்டாலின். ஏற்கெனவே 50 ஆண்டுகளாக நீங்கள்தான் ஆட்சியில் இருந்தீர்கள்... அப்போது என்ன செய்தீர்கள்? அப்போதே கொண்டுவராத நீங்களா, இனிமேல் ஆட்சிக்கு வந்து கொண்டுவரப் போகிறீர்கள் என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறோம்.

மீத்தேனுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் கையெழுத்து போட்டுவிட்டுப் போராட்டமும் நடத்திக்கொண்டிருக்கும் தி.மு.க-வினரின் ஏமாற்றுவேலையைத்தான் நாங்கள் திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.’’

“ ‘மெர்சல்’ படத்துக்கு எதிராக பா.ஜ.க-வினர் சர்ச்சையைக் கிளப்பினார்கள். இப்போது, ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பா.ம.க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறதே..?’’


“சிகரெட் பிடிப்பதைப் பெருமைப்படுத்துவது போன்ற காட்சிகள் சினிமாவில் இடம்பெறக் கூடாது என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தவனே நான்தான்! அப்படியிருக்கையில், ‘ஏன் இப்படி சட்டத்தை மீறுகிறீர்கள்’ என்று நான் கேட்கக் கூடாதா? இந்தியாவில், ஒரு வருடத்துக்கு 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் இறந்துபோகிறார்கள் என்கிறபோது, இதற்கு விஜய்யும் ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் நான் கேட்கிறேன்.’’

“மது - புகையிலை ஒழிப்புக்காகப் போராடும் அன்புமணி, பா.ம.க தொண்டர்களிடமும் இதே கெடுபிடியைக் கடைப்பிடிப்பாரா?’’

“20 வருடங்களுக்கு முன்பு இருந்த எங்கள் கட்சி இப்போது நிறைய மாறிவிட்டது. இன்றைக்கு எங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் யாரும் குடித்துவிட்டு வருவது கிடையாது... வரவும் மாட்டார்கள். அதேபோல், புகைபிடிக்கும் பழக்கமும் அவர்களிடம் கிடையாது. ஏதோ ஒன்றிரண்டு பேர் அப்படியிருக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகளோடு ஒப்பிடும்போது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட கட்சியாக இருப்பது பா.ம.க மட்டும்தான்!’’