Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி!

மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி!

மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி!

மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி!

ழுகார் உள்ளே வரும்போதே, ‘‘தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளின் உள்கட்சி விவகாரங்கள்தான் இந்த வார ஹாட் டாபிக்’’ என்றார். முரசொலி அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நடத்திய தி.மு.க தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றிய கட்டுரையைப் படித்தவர், ‘‘உமது நிருபர் லேட். இந்தக் கட்டுரை பிரசுரமாகி வெளியில் வருவதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன’’ என்றார்.

‘‘ஆமாம்’’ என்றோம் சமாளிப்பாக.

‘‘மதுரையில்தான் இது சர்ச்சையாகியுள்ளது. மதுரை மாநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாக இருந்ததை ஒன்றாக்கி, மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அழகிரி ஆதரவாளரான இவர், வடக்கு மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது சரியாகச் செயல்படவில்லை. இவரிடமே திரும்பவும் பதவி போனால் எப்படி என்பது எதிர்ப்பாளர்களின் கேள்வி. ஆனால், ‘இது தற்காலிகமான பொறுப்பாளர் பதவிதான். விரைவில் நிரந்தரமான செயலாளர் நியமிக்கப்படுவார்’ என எதிர்ப்புகளை இப்போதைக்கு சமாதானப்படுத்தி வருகிறார்களாம்.’’ 

‘‘சரி, அ.தி.மு.க-வில் என்ன பிரச்னை?’’

‘‘எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரைத் தவிர மற்றவர்களுக்குப் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. இந்த நிலையில், உளவுத்துறை அனுப்பிய ஒரு ரிப்போர்ட்டை வைத்து இந்தப் பிரச்னையை அமைச்சர்களில் சிலர் பெரிதாக்கி யுள்ளனர்.’’

மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘அப்படி என்ன இருக்கிறது அதில்?’’

‘‘சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் குறித்து உளவுத்துறை சில வாரங்களுக்கு முன்பே ரிப்போர்ட் கொடுத்தது. அதில், ‘இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பும். நிலத்தை இழந்த மக்களிடம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதிலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகும். குறிப்பாக, அ.தி.மு.க செல்வாக்காக உள்ள கொங்கு மண்டலத்தில்கூட பெரும் சரிவை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். இதைச் சுட்டிக் காட்டிய சில அதிருப்தி அமைச்சர்கள், முதல்வர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். ‘இந்தத் திட்டத்தை நாம் ஏன் இவ்வளவு அடாவடியாக நிறைவேற்ற வேண்டும்? கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்கலாமே’ என்றார்களாம்.’’

‘‘ஓஹோ. அதற்கு என்ன பதில் வந்ததாம்?’’

‘‘நிதானமாக அவர்களைப் பார்த்த முதல்வர், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திட்டத்துக்கான வேலைகளைத் தொடங்கி விடுங்கள் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கின்றனர். அதனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை’ என்றாராம். அப்போது குறுக்கிட்ட அமைச்சர்கள் சிலர், ‘அவர்களுக்காக நம் பெயரை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்? நமது வாக்கு வங்கியை நாமே அழித்துக்கொள்ளவேண்டுமா?’ என்று கேட்டார்களாம். முதல்வர் அமைதியாக அவர்களைப் பார்த்து, ‘அடுத்த தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கப்போகிறவர்கள் மாதிரியா நம் ஆட்கள் இருக்கிறார்கள். வாக்கு வங்கியைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்?’ என்றாராம். அதைக் கேட்ட அமைச்சர்கள் ஆடிப் போனார்களாம்.’’

‘‘முதல்வர் ஏன் இப்படிப் பேசினாராம்?’’

‘‘முதல்வருக்கு நெருக்கமானவர்கள், ‘எடப்பாடி மனதில் ஒரு திட்டம் இருக்கிறது’ என்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு ஈடான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வலம்வரும் எடப்பாடி, ஜெயலலிதா போலவே ஓர் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கப்போகிறார். ‘சில மாதங்களாகவே அவர் மனதில் ஓடிய திட்டம்தான் என்றாலும், அதற்கு இப்போது செயல்வடிவம் கொடுக்கப்போகிறார். சட்டப்பேரவை மானியக் கோரிக்கைக் கூட்டத் தொடர் ஜூலை 9-ம் தேதியுடன் முடிகிறது. ஜூலை 12-ம் தேதி அமாவாசை வருகிறது. அன்று அமைச்சரவை மாற்றம் உறுதி. ஆறு அமைச்சர்களுக்குக் கல்தா கொடுக்க எடப்பாடி தீர்மானித்துவிட்டார்’ என்கிறார்கள் முதல்வருக்கு நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள்.’’

‘‘எதற்காக இந்தத் திடீர் முடிவு?’’

‘‘அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. பல அமைச்சர்களே மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், பலமுறை நினைவூட்டியும் இவர்களில் பெரும்பாலானவர்கள் இதில் அக்கறை காட்டவில்லையாம். இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இரண்டு வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழலில், உறுப்பினர் சேர்க்கையில் சுணக்கம் காட்டுவது ஆபத்தானது எனச் சொல்லியும் எந்தப் பலனும் இல்லையாம். கீழ்மட்ட அளவில் கட்சி நிர்வாகிகளை அனுசரித்துப் போவது, கூட்டங்கள் நடத்துவது என எல்லாவற்றிலும் பலரும் அலட்சியம் காட்டுகிறார்கள். ‘அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால்தான், இவர்கள் சரிப்படுவார்கள். சிலரைத் தூக்கியடித்தால் மற்றவர்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்’ என்று கணக்குப் போடுகிறார் எடப்பாடி.’’

‘‘அதிரடியாக அமைச்சர்களை மாற்றி மாற்றி விளையாடிய ஜெயலலிதாவே ஒரு கட்டத்தில் ஓய்ந்துபோனார். ஆனால், ஆறு அமைச்சர்களை மாற்றி அதிரடி கொடுக்கப்போகிறார் எடப்பாடி  என்று நீர் சொல்லும்போது, கிள்ளியல்லவா     பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது?’’

‘‘ஆனால், காரணங்களைப் பெரிய பட்டிய லாகவே போடுகிறார்கள். இப்போதைய அமைச்சர்கள் பலர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளைத் தாண்டி அமைச்சர்களாக இருக்கி றார்கள். இவர்களே பதவியில் தொடர்ந்தால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதே! கர்நாடகாவில் காங்கிரஸ் இப்போது அறிமுகம் செய்திருக்கும் ஃபார்முலா பற்றி தமிழக ஆளும் கட்சியில் பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டது. ‘சுழற்சி முறையில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் என்ன’ என்று பலரும் கேட்கிறார்கள். தோப்பு வெங்கடாசலம் சட்டசபையிலேயே இதைப் பூடகமாகப் பேசினார். சிலருக்கு வாய்ப்பு கொடுக்கும்போது, ‘தினகரன் பக்கம் தாவலாமா’ என்ற யோசனையில் இருக்கும் மற்றவர்களுக்கும் அணைபோட முடியும்.’’

‘‘கல்தாவாக இருக்கும் அந்த ஆறு பேர் யார்?’’

‘‘சில மாவட்டங்களுக்கு அமைச்சர்களே இல்லை. சில மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களின் பட்டியல் எடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ‘யாரை நீக்கினால் பிரச்னை இருக்காது’ என்றும் தனியாகப் பார்க்கிறார்கள். இப்படி இரண்டு பெண் அமைச்சர்கள் உள்பட ஆறு பேரை எடப்பாடி தேர்வுசெய்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.’’
‘‘இவர்களுக்குப் பதிலாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?’’

‘‘தென் மாவட்டங்களில் கட்சியின் பெயர் மிகவும் கெட்டுப்போயுள்ளது. ஏற்கெனவே அந்தப் பகுதியிலிருந்து அ.தி.மு.க-வுக்கு வலுவான தலைவர்கள் இல்லை. இருந்த ஒன்றிரண்டு பேரும் கட்சி மாறிவிட்டனர். தற்போது, ஸ்டெர்லைட் விவகாரம் அங்கு ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக அத்தனை அமைச்சர்களுமே கவலையுடன் விவாதிக்கிறார்களாம். அதனால், கட்சியைப் பலப்படுத்தும் வகையில் தென்மாவட்ட தொகுதிகளைச் சேர்ந்த சிலருக்கு வாய்ப்பு இருக்கிறது. அமைச்சரவை மாற்றம் என்கிற இந்த அதிரடி நடவடிக்கை மூலமாக, வேறு சில லாபங்களையும் கணக்குப்போடுகிறாராம் எடப்பாடி. ஒருவேளை 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தினகரன் தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும்பட்சத்தில், அவர்களின் எம்.எல்.ஏ பதவி உயிர்பெற்றுவிடும். அந்த 18 பேரில் சிலரை வளைப்பதற்கும் இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறார். ‘நான் நினைத்தால் அமைச்சர்களை மாற்ற முடியும். உங்களையும் அமைச்சராக்க முடியும்’ என்று அவர்களுக்கு உணர்த்தவும் நினைக்கிறார் எடப்பாடி.’’

‘‘இதையெல்லாம் செய்தால் எடப்பாடி இன்னொரு ஜெயலலிதா ஆகிவிடுவார். அவர் செய்வாரா?’’

‘‘சிலர் இதே சந்தேகத்தை இப்போதும் கிளப்புகிறார்கள். இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலிலும், கொங்கு மண்டல அமைச்சர்கள்மீது கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவும் சூழலிலும் இப்படிப்பட்ட துணிச்சலான முடிவை எடப்பாடி எடுக்கமாட்டார் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் செய்யாவிட்டால் இந்த ஆட்சியை எஞ்சியிருக்கும் மூன்று ஆண்டு காலம் தள்ளிக்கொண்டுபோவதில் சிரமங்கள் ஏற்படும் என்பதை எடப்பாடி உணர்ந்திருக்கிறார்.’’

‘‘அப்படி என்ன ஆபத்து வரும்?’’

‘‘18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத் தேர்தல் தேதி இதையெல்லாம் பொறுத்துத்தான் அதை உறுதியாகச் சொல்ல முடியும். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேதி குறிக்கப்படுவதற்கு முன்னதாக, 18
எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு வந்துவிடும். என்னதான் அப்போது பி.ஜே.பி-அ.தி.மு.க கூட்டணி அமைந்தாலும், ஆட்சிக்கு வரும் ஆபத்தை டெல்லியால் தடுக்க முடியாது.’’

மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி!

‘‘பி.ஜே.பி தமிழகத்தில் என்ன கணக்கு போட்டிருக்கிறது?’’

‘‘மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், ராமநாதபுரம், தென் சென்னை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் அவர்களின் ஹிட் லிஸ்ட்டில் உள்ளன. இவற்றில் குறைந்தது ஐந்து தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கான ஆலோசனையை மேற்கொள்ள ஜூலை 9-ம் தேதி பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அதற்காக, மதுரையில் இப்போதே வேலைகளைத் தொடங்கவிட்டனர். அதில் ஒன்றுதான், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு. இதுபோல், நைபர் என்று சொல்லப்படும் மருந்துத் தயாரிப்புத் தொடர்பான ஆராய்ச்சிக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட உள்ளதாம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக மு.க.அழகிரி இருந்தார். அப்போது, இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், எந்த வேலையும் நடக்கவில்லை. இப்போது, மதுரை அருகில் உள்ள இடையப்பட்டியில் இதற்கான இடம் 100 ஏக்கரில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இதைப்போலவே, பி.ஜே.பி போட்டியிடப்போகும் மற்ற தொகுதி களிலும் மத்திய அரசின் திட்டங்கள் விரைவில் சத்தமில்லாமல் ஆரம்பமாகும்.’’

‘‘எட்டு தொகுதிகள் பி.ஜே.பி-க்கு என்றால், மற்ற தொகுதிகளில் கூட்டணி வைத்துப் போட்டியிடப்போவது யார்?’’

‘‘அ.தி.மு.க-வுக்கு 24 இடங்கள், பி.ஜே.பி-க்கு எட்டு இடங்கள், வேறு ஏதாவது கட்சி வந்தால் அவர்களுக்கு எட்டு இடங்கள் என்பது இப்போதைய கணக்கு’’ என்ற கழுகார், சட்டெனப் பறந்தார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

மிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? - அமாவாசையில் அதிரடி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தில் இப்போது தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 11 உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த இடங்களைப் பிடிக்கப் பசையான மனிதர்கள் சிலர் கோட்டையைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இந்த உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கே உண்டு என்றாலும், மாநில அரசு பரிந்துரை செய்யும் நபர்களையே நியமிப்பது வழக்கமாக இருக்கிறது. பன்வாரிலால் புரோஹித் அப்படிச் செய்வாரா என்பதுதான் இப்போது ஆளும்கட்சிக்கு இருக்கும் கேள்வி.

கோவை மாவட்ட உயரதிகாரி மகனும், அங்குள்ள ஆளும்கட்சி எம்.எல்.ஏ மகனும் பிசினஸ் பார்ட்னர்கள். விளம்பர போர்டுகள், டாஸ்மாக் பார்கள் என்று இவர்கள் கைநீட்டும் ஆட்களுக்குத்தான் அனுமதி கிடைக்கிறது. இவர்களின் அதிகாரத் தலையீடு ஆளும்கட்சிக்குள்ளேயே சர்ச்சையாகியிருக்கிறது. ‘பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் எனக்கு, என் மகனே வெடி வைத்துவிடுவாரோ’ என்று அந்த அதிகாரி புலம்புகிறாராம்.

ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை வளையத்திற்குள் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் கொண்டுவரப்பட்டுவிட்டனர். அடுத்தகட்டமாக, சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், போயஸ் கார்டன் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகிறவர்கள் என்று ஒரு பட்டியலைத் தயார் செய்து அவர்களையும் விசாரணைக்கு அழைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததைக் கண்டித்து ஜூலை 16-ம் தேதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு முற்றுகைப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். தூத்துக்குடி போராட்டம்போல இதுவும் பெரிதாகலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ராகவன் கடந்த வாரம் டி.ஜி.பி அலுவலகத்துக்கு வந்திருந்தார். உடனே, ‘குட்கா விவகார விசாரணைக்காக வந்தார்’ என்று வதந்தி கிளம்பியது. உண்மையில் நடந்தது வேறு. ராகவன், சைப்ரஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருக்கிறார். விடுப்பில் அங்கிருந்து வந்திருக்கும் அவர், டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து, அந்த நாட்டைப் பற்றிச் சிலாகித்துப் பேசினாராம். அவர்களையும் அங்கு வரச்சொல்லி அழைப்புவிடுத்தாராம்.