Published:Updated:

அமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்! - சட்டசபை ‘செல்லங்கள்’

அமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்! - சட்டசபை ‘செல்லங்கள்’
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்! - சட்டசபை ‘செல்லங்கள்’

அமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்! - சட்டசபை ‘செல்லங்கள்’

மிழகச் சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கைக் கூட்டத்தொடரில் நாள்தோறும் நவரசக் காட்சிகள் அரங்கேறிவருகின்றன. ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெறும் விவாதங்களும் ரியாக்‌ஷன்களும் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சம் வைக்கவில்லை.

அரசியல்வாதிகளை வெண்ணிற ஆடைகளிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் தமிழக மக்கள். அதிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், அல்ட்ரா வொயிட்டில்தான் பார்க்க முடியும். சட்டமன்றத்தில் வெள்ளைச் சட்டைக்கு விடை கொடுத்துக் கலர் சட்டையை அடிக்கடி அணிந்து வருபவர் தி.மு.க சீனியர் துரைமுருகன்தான். துரைமுருகனை தி.மு.க-வினர் ஃபாலோ பண்ணுகிறார்களோ இல்லையோ, ஆளும்கட்சியினர் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். இப்போது அ.தி.மு.க உறுப்பினர்கள் பலரும் கலர் கலர் சட்டைகளில் அவைக்குள் என்ட்ரி கொடுத்து அசத்துகிறார்கள்.

அமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்! - சட்டசபை ‘செல்லங்கள்’

சட்டமன்றத்தில் பொதுக்கணக்குக் குழு உள்படப் பல்வேறு குழுக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அடுத்த முறை குழுக்களில் இடம்பிடிப்பது தொடர்பான விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்தமுறை பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் பதவியை எப்படியும் தன்வசப்படுத்த வேண்டும் என்று தி.மு.க சீனியர் ஒருவர் காய்நகர்த்துகிறார். தி.மு.க-வின் மற்றொரு சீனியரான எ.வ.வேலுவும் பொதுக்கணக்குக் குழுத் தலைவர் பதவிமீது கண்வைத்துள்ளாராம்.

இந்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கும் இந்த கூட்டத் தொடரில் ஒருநாள் கூடக் கலந்துகொள்ளாத உறுப்பினர், திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ். வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகை வாங்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குள்ளாகி இருப்பது இவரின் வெற்றிதான்.

‘பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி-யில் கொண்டுவந்தால் விலை குறையும்’ என்பது குறித்து விவாதம் நடைபெற்றபோது, தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினரிடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எழுந்து பதில் சொல்ல முயன்றார். ஆனால், சபாநாயகர் தனபால் அவரை அமரச்சொன்னதால் அப்செட்டாகிவிட்டார் மணியன். இதற்குமுன் இதேபோல அமைச்சர் ஜெயக்குமாரையும் சபாநாயகர் உட்காரச் சொன்னார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜெயக்குமார் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் பார்க்காமல் கைத்தட்டி கிண்டல் செய்துவிடுகிறார். ஜெயக்குமாரையே கலாய்த்துக் கவனம் பெற்றார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தன் வீட்டில் நண்டுவிட்ட சம்பவத்தை ஜெயக்குமார் சொல்ல, “வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். சிங்கம், புலியைப் பார்த்தே பயப்படாதவர். நண்டுக்கா பயப்படப் போகிறார்?” என்று சொல்லி ஜெயக்குமாரை அமர வைத்துவிட்டார் ஓ.பி.எஸ்.

காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணிக்கும் சபாநாயகரும் இடையே சில நாள்களுக்குமுன் கடும் வாக்குவாதம். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையிலிருந்து விஜயதரணி வெளியேற்றப்பட்டார். தன்னைப் பற்றி சபாநாயகர் தவறாகச் சொல்லிவிட்டார் என்று புலம்பினார் விஜயதரணி. அதனால், இப்போது விஜயதரணி பேசும் நேரத்தில் சபாநாயகர் தனது இருக்கையில் இருப்பதைத் தவிர்த்து வருகிறார். சட்டசபையில் சபாநாயகர் இல்லாத போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவையை நடத்துவார். இவர்கள் வெளியே செல்ல நேரிடுவதால், மாற்றுத் தலைவர்களுக்குச் சபாநாயகர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது.

அவையில் முதல்வரை ‘இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர்’, ‘கரிகால் சோழன்’, ‘குடிமராமத்து நாயகன்’ என்று பட்டங்களை வாரி வழங்கிவிட்டனர் அமைச்சர்கள் பலரும்.

புதிய பாடத்திட்டப் பாடநூல்களில் ‘கி.மு.’, ‘கி.பி’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘பொது ஆண்டுக்கு முன்’, ‘பொது ஆண்டுக்குப் பின்’ என்று அச்சிடப்பட்டுள்ளது. தி.மு.க உறுப்பினர்கள் இதைப் பிரச்னையாக்க நினைத்தனர். ஆனால், அ.தி.மு.க உறுப்பினர் இன்பதுரை இதுபற்றிப் பேசியதால் தி.மு.க தரப்பு அப்செட். ‘கி.மு.’, ‘கி.பி’ என்றே பாடப்புத்தகங்களில் இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்தாலும், ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில் அதை எப்படி நீக்குவார்கள் என்று தெரியவில்லை.

அமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்! - சட்டசபை ‘செல்லங்கள்’

சட்டப்பேரவையில் இப்போதெல்லாம் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, அமைச்சர்கள் பலரும் சாப்பிடச் சென்றுவிடுகிறார்கள். இதனால், பல நேரங்களில் சபை காத்தாடுகிறது. ஸ்டாலின் வெளியே கிளம்பினால் தி.மு.க உறுப்பினர்களும் ரவுண்ட்ஸ் கிளம்பி விடுகிறார்கள். சட்டசபையில் கதாநாயகனாக இப்போது ஜொலிப்பவர் துரைமுருகன். அவர் எழுந்தாலே, அவரை அமர வைப்பதற்குள் சபாநாயகருக்குப் போதும் போதுமென ஆகிவிடுகிறது. ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இவர் கேள்வி கேட்டால் அமைச்சர்களே, “அண்ணே’’ என்று அழைத்து ஆஃப் செய்துவிடுகிறார்கள். முதல்வர் எடப்பாடியின் சட்டசபை நடவடிக்கைகளில் இப்போது நல்ல முன்னேற்றம். தேவையான ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிக்குச் சுருக்கென அவர் பதிலடி கொடுப்பதைப் பார்த்து ஆளும்கட்சி உறுப்பினர்களே ஆச்சர்யப்படுகிறார்கள்.

அ.தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு முன்பெல்லாம் பேசுவதற்கு அதிகமாக வாய்ப்புத் தரப்படும். இப்போது இவர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்பட்டுவிட்டது.

அமைச்சர்கள் வரிசையிலிருந்து அவ்வப்போது எதிர்க்கட்சி வரிசைக்குக் கடலை மிட்டாய், முறுக்கு போன்ற ஸ்நாக்ஸ் வகைகள் பாஸ் ஆகின்றன. ஜெயலலிதா இருந்தவரை முறுக்கிக்கொண்டி ருந்தவர்கள்... முறுக்கு பரிமாறும் அளவுக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்க மாணவர்கள் வருவதுண்டு. ஜூன் 29-ம் தேதி அப்படி வந்த மாணவர்களில் இருவர், மாடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்கள். அதிகாரிகள் பதறிப் போய் விசாரித்தபோது, அவர்கள் சாப்பிடாமல் வந்திருப்பது தெரிந்தது. அதிலிருந்து மாணவர்களைச் சட்டப்பேரவை ஊழியர்கள் கூடுதல் கவனமெடுத்து பார்த்துக் கொள்கிறார்கள். 

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: கே.ஜெரோம்