Published:Updated:

முதலில் மேற்கு... இப்போது தெற்கு! - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்

முதலில் மேற்கு... இப்போது தெற்கு! - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
முதலில் மேற்கு... இப்போது தெற்கு! - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்

முதலில் மேற்கு... இப்போது தெற்கு! - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்

‘‘கட்சியின் நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சிலர்கூட, தங்கள் பதவிகளை விட்டுத்தர வேண்டிய நிலை வரும்’’ என்று தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியுள்ளார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின். இதற்காக, ‘கழக உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ நிகழ்வை அவர் நடத்தினார். ‘கண்துடைப்புக்கு நடத்தப்படும் கலந்துரையாடல் இது’ என்று கட்சியினர் அனைவரும் நினைத்த நிலையில், தமிழகத்தின் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலரின் பதவிகளைப் பறித்து அதிரடி காட்டினார் ஸ்டாலின். ‘இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் பதவியை வைத்துக்கொண்டு கட்சிப்பணி செய்யாமல் இருப்பவர்கள் களையெடுக்கப்படுவார்கள்’ என ஸ்டாலின் வெளிப்படையாகவே நிர்வாகிகளிடம் சொல்லியிருந்தார்.

முதலில் மேற்கு... இப்போது தெற்கு! - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்

இந்த நிலையில்தான், கடந்த புதன்கிழமை சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 14 மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். ‘‘தி.மு.க-வில் மண்டலவாரியாக செயலாளர்களை நியமிக்கும் திட்டத்தில் ஸ்டாலின் இருப்பதால், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்களை முதலில் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காகவே இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்’’ என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.

மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை வழக்கமாக அறிவாலயத்தில் மட்டுமே நடை பெறும். ஆனால், அறிவாலயத்தில் இருக்கும் சிலர் ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெறும் விஷயங்களை உடனடியாக வெளியே கசியவிடுகிறார்கள் என்ற தகவல் ஸ்டாலின் காதுக்குத் தொடர்ச்சியாக எட்டிவந்தது. அதனால், யாருக்கும் எந்த விஷயமும் தெரிந்துவிடக் கூடாது என்ற முடிவில் முரசொலி அலுவலகத்தைத் தேர்ந்தெடுத்துக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

‘கூட்டத்தில் என்ன நடந்தது’ என இதில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் விசாரித்தோம். ‘‘தென் மாவட்டங்களில் யார் யாரின் பதவிகள் எல்லாம் பறிபோக உள்ளன என்பதை வெளிப்படை யாகவே சொல்லி அவர்களைச் சமாதானம் செய்வதற்காகவே இந்தக் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார். கூட்டத்தில் கலந்துகொண்ட 18 மாவட்டச் செயலாளர்களிடமும் அவர் மட்டுமே நேரடியாகக் கருத்துகளைக் கேட்டறிந்தார். மதுரை மாவட்டம் இப்போது கட்சிரீதியாக நான்கு மாவட்டங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதை இரண்டாக மாற்றலாம் என்று ஸ்டாலின் கருதுகிறார். அப்போது மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் வேலுச்சாமியைக் கழற்றிவிடுவது உறுதியாகிவிட்டது. ‘உங்கள் செயல்பாடுகள்மீது அதிருப்தி எழுந்துள்ளது. உங்கள் பகுதிக்கு வந்த ஆய்வுக் குழுவும் அதை உறுதிசெய்துள்ளது. கட்சி நலனை முன்னிட்டு சில நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தாக வேண்டும்’ என்று கொஞ்சம் கறாராகவே அவரிடம் சொல்லப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதலில் மேற்கு... இப்போது தெற்கு! - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்

அதேபோல், தேனி மாவட்டப் பொறுப்பாளர் ஜெயக்குமாரை மாற்றிவிட்டு முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையாவின் மகனுக்குப் பொறுப்பு கொடுக்க ஸ்டாலின் நினைக்கிறார். தேனி மாவட்டத்தில் யாரைப் பொறுப்பாளராகப் போட்டாலும் பன்னீர்செல்வத்துக்கு ஈடுகொடுக்காமல், அமைதியாகப் போவது ஸ்டாலினிடம் உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஜெயக்குமார், ‘மாவட்டப் பொறுப்புக்கு வந்து ஏராளமாகச் செலவழித்துவிட்டேன்’ என்று ஸ்டாலினிடம் சொன்னார். அதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், பதில் ஏதும் சொல்லவில்லை. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சுப.திவாகரன்மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அவரின் அப்பா சுப.தங்கவேலன் இருந்தவரைக் கட்சிக்காரர்களை அனுசரித்துச் சென்றார். ஆனால், இவர் கட்சிக் காரர்கள் யாரையும் கண்டுகொள்வதே கிடையாது என்று கள ஆய்வில் பலர் புகார் அளித்துள்ளனர். அதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், சிவகங்கை மாவட்டச் செயலாளர் பெரியகருப்பனையும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அவர் தனக்கென கோஷ்டி வைத்துக்கொண்டு லோக்கல் பாலிட்டிக்ஸ் செய்வதைக் கண்டித்தார். திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்மீது ஏராளமாகப் புகார்கள் இருந்ததால், அவரிடம் ஸ்டாலின் கடுமையாக நடந்துகொண்டார். அவர் பதவி தப்புவதும் கடினம்தான். ‘உங்கள் மாவட்டத்தில்  சில ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் நகரச் செயலாளர்களை மாற்றப் போகிறேன். நீங்கள் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அதைச் சொல்லவே இந்த அழைப்பு’ என்று ஸ்டாலின் சொல்லிவிட்டார்” என்கிறார்கள்.

முதலில் மேற்கு... இப்போது தெற்கு! - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணியில் வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. ‘‘அழகிரி எந்த நேரத்திலும் விஸ்வரூபம் எடுக்கலாம். அப்போது இந்த நிர்வாகிகள் அழகிரி பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் ஸ்டாலினுக்கு உள்ளது. அதனாலே தனக்கு நெருக்கமான மூர்த்தியையும் தளபதியையும் பொறுப்புக்குக் கொண்டுவந்து, அவர்கள் மூலமாக மதுரையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதற்காகத்தான் சாட்டையைச் சுழற்றுகிறார்’’ என்கிறார்கள் சிலர்.

தென் மண்டலத்தை அடுத்து, மத்திய மண்டல மாவட்டச் செயலாளர்கள் பட்டியலைக் கையிலெடுக்க இருக்கிறார் ஸ்டாலின். அப்போது புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் களையெடுப்பு நடத்தும் திட்டத்தில் அவர் உள்ளார். அதையடுத்து, வடக்கு மண்டலத்தில் ஏராளமான சிக்கல்கள் ஸ்டாலினுக்குக் காத்திருக்கின்றன. குறிப்பாக பொன்முடி, எ.வ.வேலு, ராணிப்பேட்டை காந்தி உள்ளிட்டோர்மீது கட்சியினர் ஏராளமாகப் புகார் அளித்துள்ளார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஸ்டாலினிடம் நெருக்கமாக உள்ளார்கள். அவர்கள்மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

- அ.சையது அபுதாஹிர்