Published:Updated:

பா.இரஞ்சித் - கோபி நயினார் சினிமாவாகப் பதிவுசெய்ய விரும்பும் பிர்சா முண்டா யார்? #RememberingBirsaMunda

பா.இரஞ்சித் - கோபி நயினார் சினிமாவாகப் பதிவுசெய்ய விரும்பும் பிர்சா முண்டா யார்? #RememberingBirsaMunda
News
பா.இரஞ்சித் - கோபி நயினார் சினிமாவாகப் பதிவுசெய்ய விரும்பும் பிர்சா முண்டா யார்? #RememberingBirsaMunda

பிர்சா முண்டா இன்று வரை பழங்குடியினரால் `மண்ணின் தந்தை' என வணங்கப்படுகிறார். பிரிட்டிஷார் வெளியேறி 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் பிர்சா தொடங்கிய பழங்குடி மக்களின் நிலத்துக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை.

1900-ம் ஆண்டு. 24 வயது இளைஞன் ஒருவனைத் தேடி, ஜார்க்கண்ட் காடுகளுக்குள் பெரும்படையுடன் நுழைகிறது பிரிட்டிஷ் காவல்துறை. அந்தக் காலத்திலேயே `அந்த இளைஞனைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு, 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியாகிறது. `மண்ணின் தந்தை' என அந்த இளைஞனைக் கருதிய பழங்குடி மக்கள் அவனைக் காட்டிக்கொடுக்க மறுக்கிறார்கள். தம்பாரி என்ற மலையில் வாழ்ந்த பழங்குடி மக்கள் அனைவரையும் சுட்டுக் கொல்கிறது பிரிட்டிஷ் காவல்துறை. 400 பேர் இறந்தார்கள் எனக் கூறப்படுகிறது. 

பழங்குடி மக்கள் தங்கள் உயிரையும் அந்த இளைஞனுக்காகத் துறக்கத் துணிந்தார்கள். அந்த இளைஞன்தான் பிர்சா முண்டா. இன்றைய ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீகார் மாநிலத்தின் பழங்குடிகளால் கொண்டாடப்படும் விடுதலை வீரன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும், சாதிய, நிலப் பிரபுத்துவத்தையும் ஒரே நேரத்தில் எதிர்த்தவர் பிர்சா முண்டா. 

பிர்சா பிறப்பதற்கு முன்பு, காடுகளில் அவரது மூதாதையர் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்தியாவுக்குள் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த காடுகளுக்குள் நுழைந்தார்கள். ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருந்தனர். பழங்குடி மக்களின் வளங்கள் அவர்களின் அனுமதியில்லாமல், ஆங்கிலேயர்கள் சுரண்டுவதற்காக நிலப்பிரபுக்களால் வாரியிறைக்கப்பட்டன. இந்திய சாதியமைப்பு, பழங்குடிகளை நிலப்பிரபுக்களுக்கு அடிமையாகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கூலிகளாகவும் மாற்றிவிட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1875-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி உலிஹதி என்ற கிராமத்தில் பிறந்தார் பிர்சா முண்டா. அவரது தாயும், தந்தையும் வயலில் வேலை செய்துவந்தனர். எனினும் மற்ற பழங்குடிக் குடும்பங்களைப் போல, அவர்கள் வீட்டிலும் வறுமை மட்டுமே குடிகொண்டிருந்தது. பழங்குடிகள் மத்தியில் கிறித்தவ மத மாற்றமும் அந்தக் காலகட்டத்தில் தொடங்கியிருந்தது. கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டிருந்த பிர்சா, மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பழங்குடிகளைப் பற்றி அவதூறாகப் பேசிய பிரிட்டிஷ் ஆசிரியரிடம் சண்டையிட்டு, பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திக் கொண்டார்.

சத்தீஷ்கரில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்கள், பிர்சாவின் இளமைப் பருவத்தை சாதாரணமான ஒன்றாக வர்ணிக்கின்றன. ஆடு மேய்ப்பதும், புல்லாங்குழல் வாசிப்பதும் பிர்சாவின் அன்றாடப் பணிகளாக இருந்தன. 13 வயது நிரம்பாத சிறுவனாக இருந்த போதே, பிர்சா அப்போதைய கிறித்தவம் தங்களை ஏழைகளாக இருப்பதைச் சொர்க்கத்திற்கு செல்லும் வழி எனக் கூறுவதையும், சாதிய முறை தங்கள் பழங்குடியினப் பண்பாட்டை அழித்து அடிமை வாழ்க்கைக்கு மாற்றுவதையும் உணர்ந்துகொண்டார். பிர்சாவின் குடும்பம் கிறித்தவ மதத்தை விட்டு வெளியேறியது. 

17 வயதில் தன்னை இறைத்தூதராக அறிவித்துக் கொண்ட பிர்சா, `பழங்குடிப் பண்பாட்டை மீட்பதே தங்கள் வாழ்க்கையை உயர்த்தும்' என மக்களிடம் பேசினார். சமத்துவத்தை முன்வைத்தார். `ஆங்கிலேயர் ஆட்சியையும், நிலப்பிரபுத்துவத்தையும் களைய வேண்டியது அவசியம்' என மக்களுக்கு உணர்த்தினார். மக்கள் அவரை `தார்தி அர்பா' என்று பாசத்தோடு அழைத்தனர். முண்டா பழங்குடியினரின் மொழியில், அதற்கு `மண்ணின் தந்தை' என்று பொருள்.

ஆங்கிலேய அரசு காடுகளைச் சொந்தமாக்கிக் கொள்ளச் சட்டம் கொண்டுவந்தது. பழங்குடி மக்களை இணைத்து, `உழுபவனுக்கே நிலம் சொந்தம்! நிலம் எங்கள் உரிமை! நீர் எங்கள் உரிமை! காடு எங்கள் உரிமை!' என்று முழக்கமிட்டுப் போராடினார் பிர்சா. பழங்குடி மக்கள் அவர் பின்னால் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர்.  

பிர்சாவின் வளர்ச்சியையும், மக்கள் அவர் மீது வைத்திருந்த அதீத அன்பையும் கண்ட பிரிட்டிஷ் அரசு, அவரைக் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. சிறையில் இரண்டு ஆண்டுகளைக் கழித்த பின் விடுதலை செய்யப்பட்ட பிர்சா தன் போராட்ட முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். மேலும் இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்ட பிர்சா, மக்களை அமைப்பாகத் திரட்டினார். 1899-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் நாள் தாக்குதல் என்று முடிவானது.

பிர்சா முண்டா தலைமையில் அரசு அலுவலகங்களான காவல் நிலையங்களும், ஆதிக்கச் சாதி நிலப்பிரபுக்களின் வீடுகளும் பழங்குடி மக்களால் சூறையாடப்பட்டன. 8 காவலர்கள் கொல்லப்பட்டனர்; நிலப்பிரபுக்களின் 89 வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் மொத்த சொத்துகளும் தீயில் எரிக்கப்பட்டன. 

பிர்சா முண்டாவின் தலைக்கு 500 ரூபாய் சன்மானம் என அறிவிக்கப்பட்டு, 150 பேருடன் வந்த ஆங்கிலேயர்களின் படை தம்பாரி மலையில் 400 பழங்குடி மக்களை சுட்டுக் கொன்றது. ஆங்கிலேயர்களின் வெடிப்பொருள் ஆயுதங்களுக்கு முன்னால் பிர்சாவின் பழங்குடிப் படையினர் வைத்திருந்த விஷ அம்புகளால் எதுவும் செய்ய முடியவில்லை. எனினும் பிர்சா உயிருடன் தப்பி, மீண்டும் தலைமறைவாக மக்களைத் திரட்டத் தொடங்கினார். 

1900-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி, காட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிர்சாவை பிரிட்டிஷ் காவல்துறை சுற்றிவளைத்துப் பிடித்தது. ஆங்கிலேயர்களின் அரசியலமைப்புச் சட்டப்படி, பிர்சாவுக்கும் அவரது 482 தோழர்களுக்கும் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. சிறையில் இருந்த மூன்று மாதங்களில், ரத்த வாந்தியெடுத்து, கடும் நோயால் பாதிக்கப்பட்டார் பிர்சா. அதே ஆண்டு ஜூலை மாதம் பிர்சா உயிரிழந்தார். காலரா பாதிப்பால் பிர்சா இறந்ததாக பிரிட்டிஷ் காவல்துறை அறிவித்தது. பிர்சா முண்டா இறந்தபோது அவருக்கு வயது 25.

பிர்சா முண்டா இன்று வரை பழங்குடியினரால் `மண்ணின் தந்தை' என வணங்கப்படுகிறார். பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறி 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் பிர்சா தொடங்கிய பழங்குடி மக்களின் நிலத்துக்கான போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. அவர்கள் கையிலேந்திய ஆயுதங்கள் இன்று வரை தரையில் விழவில்லை.

பழங்குடி மக்களின் தலைவர் என்று பிர்சா முண்டாவின் படம், இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் இப்படியிருக்க, மறுபக்கம் தொடர்ந்து பழங்குடி மக்களின் வாழ்விடங்களான காடுகள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. இந்திய துணை ராணுவத்தால் பழங்குடி இளைஞர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்; பழங்குடிப் பெண்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரால் வன்புணர்வு செய்யப்படுகின்றனர். பழங்குடி மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பேராசிரியர் சாய்பாபா முதலானோர் கடும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

சமரசம் இல்லாமல் விடுதலையை நேசித்த 25 வயது இளைஞன் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை 1977-ம் ஆண்டு வங்காள எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி `ஆரண்ய அதிகார்' என்று நாவலாக எழுதினார். பிர்சா முண்டாவின் பெயரில் பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் அரசால் உருவாக்கப்பட்டன; 2000-வது ஆண்டு அவரது பிறந்தநாளில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. பிர்சா முண்டாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக பலர் இயக்கியுள்ளனர். 

தற்போது பாலிவுட் திரைப்படமாக பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் பா.இரஞ்சித்தால் எடுக்கப்படவுள்ளது. இயக்குநர் கோபி நயினாரும் பிர்சா முண்டாவின் வாழ்க்கையைப் படமாக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.