Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பி.நாகராஜன், மதுரை.

பிரதமர் மோடியின் பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளதே?


‘அமைச்சர்கள்கூட இனிமேல் முன்அனுமதி இல்லாமல் பிரதமரை நெருங்க முடியாது’ எனத் தகவல் வந்ததே... அதைக் கேட்கிறீர்களா? பிரதமரின் பாதுகாப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் பாதுகாப்பு விதிகளை, சமீபத்தில் எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை ஒரு நினைவூட்டலுக்காக அனுப்பியது. உடனே, ‘பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது’ எனச் செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. அந்த விதிகளில், ‘அமைச்சர்கள்’ என எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை. ‘பிரேக்கிங் நியூஸ்’ ஏக்கத்துடன் இருக்கும் இன்றைய மக்களுக்கு எது வேண்டுமானாலும் இப்படிச் செய்தியாகும்.

கழுகார் பதில்கள்!

கோ.ஆவுடையப்பன், திருநெல்வேலி.

ஆக்ஸ்போர்டு, ஜோகன்னஸ்பர்க் என உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதே?

உலகமெங்கும் தமிழ் பெருமை பெறுவது நல்ல விஷயம்தான். ஆனால், நீட் தகுதித் தேர்வு வினாத்தாளை ஒழுங்காகத் தமிழில் மொழிபெயர்க்க நல்ல மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்ய வேண்டியது அதைவிட முக்கியம். தமிழக அரசு முதலில் அதைச் செய்யட்டும்.

கே.விக்னேஷ், சென்னை-33.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்!

ட்விட்டர் சமூக இணையதளத்தில் தமிழர்கள் சினிமா மற்றும் விளையாட்டு பற்றித்தான் அதிகம் கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கிறார்களே?

இந்த இரண்டிலும்தான் விமர்சனம் செய்வது ரொம்பச் சுலபம். அதுதான் காரணம்!

எல்.ஆர்.சுந்தர்ராஜன், மடிப்பாக்கம்.


1969-ல் நெடுஞ்செழியனை கருணாநிதி அடக்கியதுபோல், இப்போது ஓ.பி.எஸ்-ஸை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சேர்த்து ஓரம்கட்டிவிட்டார் என்று கூறலாமா?


நிச்சயமாக. ஆனால், கருணாநிதி, நெடுஞ்செழியன் ஆகியோருடன் இவர்களை ஒப்பிட முடியாது. கருணாநிதியும் நெடுஞ்செழியனும் அந்தக் காலத்தில் கொள்கைப் பிடிப்புடன் வலம் வந்தவர்கள். இளம்வயதிலேயே போராட்டங்கள், களப்பணிகள், இலக்கிய மேடைகள் என்று தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள்; திறமைகளை மெருகேற்றிக்கொண்டவர்கள். எந்தவிதப் பின்னணியும் இல்லாமல், அரசியலில் மோதி மோதி மேலே வந்தவர்கள். அண்ணாவின் மரணத்துக்குப் பிறகு, இவரா... அவரா என்கிற போட்டியில் கருணாநிதி வெற்றிபெற்றார். ஆனாலும், இரண்டாம் இடத்தைப் பிடித்த நெடுஞ்செழியன் தனித்துவம் மிக்கவராகவே கடைசி காலம் வரை வலம்வந்தார்.

எடப்பாடி, ஓ.பி.எஸ் கதை அப்படியல்ல. ஜெயலலிதாவைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த ஒரு குடும்பத்தினருக்குச் சேவகம் செய்வதில் யார் முந்துவது என்று போட்டி போட்டவர்கள்; அந்தக் குடும்பத்தாலேயே உருவாக்கப்பட்டவர்கள்; கடைசியில் அந்தக் குடும்பத்துக்கே வேட்டுவைத்தவர்கள். ‘யார் முந்துவது’ என்ற போட்டியில் எந்த எல்லைக்கும் செல்வோம் என்று நிரூபித்தவர்கள். இதில் ஒருபடி முன்னேறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

கோ.குமார், உளுந்தூர்பேட்டை.


‘உளவுத்துறை தோல்வியடைந்துவிட்டதால்தான் தமிழ்நாட்டில் பிரச்னைகள் அதிகமாகியுள்ளன’ என்று சிலர் குற்றம்சாட்டுவது சரிதானா?


‘எந்த விஷயங்கள் பெரிய பிரச்னையாகும்... அவற்றை எப்படிச் சமாளிக்க வேண்டும்’ என ஆட்சியாளர்களுக்கு யோசனை சொல்ல வேண்டியவர்கள் உளவுத்துறை அதிகாரிகள்தான். ஆனால், அந்த உளவுத்துறை தமிழகத்தில் எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றி தமிழக உளவுத்துறையின் ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

கழுகார் பதில்கள்!

ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சத்தியமூர்த்தி ஆஜரானபோது, அவர் அளித்த பதில்கள் சுவாரசியமானவை. ‘ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானது பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை’ என்றவர், ‘அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது மாடி முழுவதும் உளவுத்துறையின் கண்காணிப்பில் தான் இருந்தது. ஆனால், ஜெயலலிதாவை யார் யார் பார்த்தனர் என்பது எனக்குத் தெரியாது’ என்று கூறியிருக்கிறார். ‘ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக இருந்த கறுப்புப்பூனைப் படையினர் ஏன் அப்போலோ மருத்துவமனைக்கு பாதுகாப் புக்காக வரவில்லை என்பது எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ளவும் நான் முயற்சி செய்யவில்லை’ என்பதும் அவர் கொடுத்திருக்கும் வாக்குமூலம்.

உளவுத்துறையைச் சுய அதிகாரத்துடன் செயல்பட விடாமல் தடுப்பது கவலை அளிக்கிறது. ஆட்டுக்குத் தாடிபோல அவசியமில்லாத துறையாக அது தேவையா? 

ஹெச்.மோகன், மன்னார்குடி.

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றம் பற்றி?


ஆரம்பத்திலேயே அது பொருந்தாக் கூட்டணி என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தானே. இந்துத்வா பேசும் ஒரு கட்சியும், இந்துத்வா பேசாத பிற கட்சிகளும் கூட்டணி அமைக்கும்போது அடிக்கடி பிரளயங்கள் வெடிக்கின்றன. உ.பி-யில்  பி.ஜே.பி-யும் மாயாவதியும் கூட்டணி போட்டது தொடங்கி இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். காஷ்மீரில் பி.ஜே.பி-யும் மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் சுயநலக் காரணங்களுக்காகவே கூட்டணி போட்டன. தாமரை இலையும் தண்ணீரும் போல ஒட்டாமல்தான் காலத்தை ஓட்டின. இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தபோது சொன்ன எந்த ஒரு பிரச்னைக்கும் அங்கே தீர்வு காணப் படவில்லை. குறிப்பாக, அமைதிப் பிரதேசமாக மாற்றுவோம் என்று சொல்லி ஆட்சியில் புகுந்தவர்கள், மேலும் அமைதியைக் கெடுத்துத்தான் வைத்துள்ளனர் என்பது அந்த இரண்டு கட்சிகளின் தற்போதைய வாக்குமூலத்திலேயே தெரிய வருகிறதே. எனவே, சுயநலமில்லாத கூட்டணி அமைந்தால்தான் தீர்வு கிடைக்கும். ஆனால், கண்ணுக்கு எட்டாத தூரம் வரையிலும்கூட அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவே இல்லை.

கழுகார் பதில்கள்!

உ.சிவன், வாகைக்குளம்.

1963-ல் காங்கிரஸ் அமைச்சரவையில் உள்துறை, நிதி, கல்வி, சிறைத்துறை, தொழிலாளர் நலன், அரிஜன நலன் என்று முதன்மையான துறைகளின் பொறுப்புகள் கக்கனுக்கு வழங்கப்பட்டன. அதற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் இதுபோன்ற பொறுப்புகள் வழங்கப்படவில்லை. கக்கன் போன்ற அரசியல்வாதிகள் இப்போது இல்லையா? அல்லது, சேவை அரசியல் மாறி, தலைமைகள் சுயநலமிகளாக மாறிவிட்டதுதான் காரணமா?


கேள்வியிலேயே பதிலை ஒளித்து வைத்திருக்கிறீர்களே! அதற்கடுத்து ஆட்சியில் அமர்ந்த தி.மு.க., அ.திமு.க ஆகிய இரண்டுமே அமைச்சரவையைப் பொறுத்தவரை, ஓர் இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் தாங்களாகவே உருவாக்கிக்கொண்டு, அதை நிறைவேற்றி வந்தார்கள்; வருகிறார்கள். ‘தாழ்த்தப்பட்டோர் நலத்துறையை அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுத்துவிட்டால்போதும்’ என்பதுதான் இவர்களின் எண்ணமாக இருக்கிறது. முக்கியமான துறைகளில் அவர்கள் அமர முடியாமல் இருப்பதற்குக் காரணம்... சாதிதான். காங்கிரஸ் காலத்தில் கக்கனை உட்காரவைத்தபோது, சாதிவெறி இல்லை என்று சொல்லிவிட முடியாது. அப்போது, இன்னும் அதிகமாகவே சாதி வெறி இருக்கத்தான் செய்தது. ஆனாலும், தவிர்க்க முடியாத நபராக கக்கன் இருந்த காரணத்தால் அது சாத்தியமானது. அதன் பிறகு, அந்த இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலமிக்கவர்களாக வரவே இல்லை. துண்டு துண்டாகச் சிதறிக்கிடக்கிறார்கள். அதிலும் பலர் சுயநலமிகளாகவும், பெரிய கட்சிகளுக்கு வால்பிடிப்பவர்களாகவுமே காலத்தைக் கடத்திக்கொண்டுள்ளனர். இதனால்தான், அந்தச் சமூகத்திலிருந்து சொல்லிக் கொள்ளக்கூடிய வகையிலான தலைவர்கள் உருவாக முடியாமலே இருக்கிறது; அல்லது உருவாவது திட்டமிட்டே தடுக்கப்படுகிறது.

ஆர்.கே.ஸ்ரீரங்கன் (திருப்பதி), திருநள்ளாறு.

கிராமப்புறங்களிலிருந்து கேள்விகள் வந்தால் பதில் சொல்வீர்களா?


கேட்கும் வாசகர் கிராமத்தைச் சேர்ந்தவரா, நகரத்தில் வசிப்பவரா என்றெல்லாம் கழுகார் பார்ப்பதில்லை. சிறந்த கேள்விகளை இருகரம் கொண்டு  ஜூ.வி வரவேற்கிறது. 

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!