Published:Updated:

ரஃபேல் விவகாரம்...126க்கும் 36க்கும் நடுவில் ஊழல் ரகசியம்!

ஒப்பந்தம் குறித்த விவரத்தில் இந்திய விமானப்படைதான் 36 விமானங்கள் கேட்டதாக எங்குமே குறிப்பிடப்படவில்லை. தனிநபர் நிறுவனங்களுக்காக இந்தியாவின் தேவை சமரசம் செய்துகொள்ளப்பட்டது.

ரஃபேல் விவகாரம்...126க்கும் 36க்கும் நடுவில் ஊழல் ரகசியம்!
ரஃபேல் விவகாரம்...126க்கும் 36க்கும் நடுவில் ஊழல் ரகசியம்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் மீது கரும்புள்ளியாகப் பதிந்திருக்கும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பதில் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று விவாதத்துக்கு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்கள்.

ரஃபேல் ஊழல் தொடர்பாக, நவம்பர் 12-ம் தேதி மத்திய அரசு அளித்த 16 பக்க விளக்க மனுவுக்கு எதிராக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``அம்பானி சகோதரர்கள் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவதற்கு இரண்டு நாள்கள்வரை, பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்தான் பிரெஞ்சு நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையில் இருந்தது. இரண்டு நாள்களில் அப்படி என்ன மாறிவிடும்?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் வாங்க உத்தேசித்துள்ள 36 போர் விமானங்கள் தொடர்பாகவும், அதுதொடர்பாக ஆன செலவுகளின் விவரத்தையும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 12-ம் தேதி அரசு தாக்கல் செய்திருந்தது. ஆனால், அரசு அளித்திருக்கும் விவரங்கள் அனைத்தும் தவறான தகவல்கள் என்று பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

``அரசுத் தரப்பில் `தஸ்ஸால்ட் நிறுவனமும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனமும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான தகவல். 2012-ம் வருடம் தொடங்கிய இருதரப்புப் பேச்சுவார்த்தை, 2014-ம் வருடத்தில் ஒருமுடிவுக்கு வந்தது. தஸ்ஸால்ட் நிறுவனத்துக்கு இந்தத் திட்டத்தில் 30 சதவிகித வேலை இருக்கும் என்றும், அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் நிறுவனத்துக்கு 70 சதவிகித வேலை இருக்கும் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் சுவர்ணராஜூவே உறுதிப்படுத்தியிருந்தார்” என்று பதில் மனுவில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. 

மேலும், ``25.03.2015 அன்று, அதாவது ரஃபேல் தொடர்பாக இறுதி அறிக்கையைப் பிரதமர் மோடியும், பிரெஞ்சு அதிபரும் இணைந்து வெளியிட இருந்ததற்கு பதினைந்து நாள்கள் முன்னர்தான், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைவர் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து தான் திருப்திகரமாக உணர்வதாகவும் தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும்போது, ஹிந்துஸ்தான் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை எப்படி நல்லவிதமாக முடியவில்லை என்று அரசு கூறமுடியும். அப்படிக் கூறுவது பொய்யாக இருக்காதா? 

`தொழில்நுட்பரீதியான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன. அதில் அரசு அளவிலான தலையீடுகள் இருக்காது' என்று வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் குறிப்பிட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயர் இதில் அடிபடுகிறது. எந்தவித அடிப்படை ஆய்வுமே செய்யாமல் இரண்டே நாள்களில் புதிய நிறுவனம் ஒன்று எப்படி நுழைய முடியும்? இந்த முடிவை யார் எடுத்தது?” என்று பதில்மனுவில் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். 

குறிப்பாக, ஹிந்துஸ்தான் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் 126 விமானங்கள் தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ரிலையன்ஸுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டபோது, 36 விமானங்களாக அவை குறைந்தன. ஒப்பந்தம் குறித்த விவரத்தில் இந்திய விமானப்படைதான் 36 விமானங்கள் கேட்டதாக எங்குமே குறிப்பிடப்படவில்லை. தனிநபர் நிறுவனங்களுக்காக இந்தியாவின் தேவை சமரசம் செய்துகொள்ளப்பட்டது. மேலும் மொத்த செலவுப் பட்டியலைக் குறிப்பிட்டிருந்தாலும், ரஃபேல் விமானங்களின் விலை எங்குமே குறிப்பிடப்படவில்லை.

அரசு அளித்த விளக்கத்தில் இருந்த இந்தச் சிக்கல்களையெல்லாம் காரணம்காட்டி, `புதிய விளக்க அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்; இனிமேலும் விமானங்களின் விலையை மறைக்கக் கூடாது' என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.