Published:Updated:

முன்னாள் துணை முதல்வரை பிக்பாஸ் போல கேமரா மூலம் கவனிக்கும் முதல்வர்..!

முன்னாள் துணை முதல்வரை பிக்பாஸ் போல கேமரா மூலம் கவனிக்கும் முதல்வர்..!
முன்னாள் துணை முதல்வரை பிக்பாஸ் போல கேமரா மூலம் கவனிக்கும் முதல்வர்..!

பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் ``முதல்வர் தன்னை சிசிடிவி கேமராக்கள் வைத்துக் கவனிக்கிறார்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிதிஷ் குமாரின் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தற்போது பீகாரில் ஆட்சி செய்துவருகின்றது. கடந்த  தேர்தலில் ஆட்சி அமைக்கப் போதுமான தொகுதிகள் கிடைக்காததால் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் ஆட்சி அமைத்திருந்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வோடு சேர்ந்து ஆட்சியமைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். நிதிஷ் குமாரும் தேஜஸ்வியும் ஒரே தெருவில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் முதல்வரின் வீட்டில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராக்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி.   

``நிதிஷ் குமார் அவர்களுக்குப்  பாதுகாப்பின் மீது அச்சமா?. என்னுடைய வீட்டை நோக்கி மட்டும் ஏன்  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கேமராவின் தேவை என்ன. முதல்வரின் வீடு மூன்று புறம் முக்கிய சாலைகளும் மற்றொரு புறம் எதிர்க்கட்சித் தலைவரின் வீடும் உள்ள நிலையில், சாலைகளை விடுத்து அரசியல் எதிரியின் வீட்டை நோக்கி கேமராவை வைத்துள்ளார். இது மாதிரியாக சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்தி அருகில் வசிப்பவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் தலையிடுகிறார் முதல்வர்.

பாட்னாவில் ஒவ்வொரு நொடிக்கும் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால், முதல்வர் மக்களை விடுத்து  எதிர்க்கட்சிகளைக் கண்காணிப்பதிலே கவனம் செலுத்துகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.