Published:Updated:

மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!
மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

திடீர் மழைக்குப் பிறகு வெயில் கொளுத்திய காலை நேரத்தில் கழுகார் சரேலென உள்ளே நுழைந்தார். ‘‘வருமானவரித் துறை ரெய்டின் அனல் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களில் பரவியிருக்கிறது’’ என்றார்.

‘‘விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றபடி ஜூஸ் டம்ளரை அவர் பக்கமாகத் தள்ளிவைத்தோம். 

‘‘தமிழகத்தில் கொங்கு மண்டலம், கர்நாடக மாநிலத்தில் முக்கியமான இடங்கள் என மொத்தம் 75 இடங்களில் ஜூலை 5-ம் தேதி காலையிலிருந்து ஐ.டி ரெய்டு நடந்தது. தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு, பாமாயில் என அனைத்தையும் விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம், அதைச் சார்ந்த துணை நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், அக்னி பில்டர்ஸ், ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனங்கள் சார்ந்த இடங்களிலேயே இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.’’

‘‘யாருடையது இந்த நிறுவனம்?’’

‘‘கிறிஸ்டி நிறுவனம், குமாரசாமி கவுண்டர் என்பவருக்குச் சொந்தமானது. நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. குமாரசாமி கவுண்டர் திருச்செங்கோடு அருகேயுள்ள மோர்பாளை யத்தைச் சேர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1991-96 காலகட்டத்தில், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தார் இந்திரகுமாரி. அப்போது அவருடைய ஆசிகளுடன் கிறிஸ்டி நிறுவனத்தைத் தொடங்கினார், குமாரசாமி கவுண்டர். தொடக்கத்தில், ஊட்டச்சத்து மையங்களுக்கு சத்துமாவு வழங்கி வந்தது இந்த நிறுவனம். அதன் பிறகு, தமிழக அரசுடன் ஒப்பந்தங்கள் போட்டு, கோடிகளில் ‘டர்ன் ஓவர்’ செய்யத் தொடங்கியது. தற்போது, ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்கு சத்துமாவு, முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வருகின்றன இவரின் நிறுவனங்கள். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களுக்கு சுமார் 55 லட்சம் முட்டைகளை சப்ளை செய்யும் டெண்டரை கிறிஸ்டி நிறுவனம் எடுத்தது. இத்தனைக்கும் இவர்களிடம் கோழிப் பண்ணைகளே கிடையாது.’’ 

மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

‘‘முட்டை பிசினஸில் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறதே!’’

‘‘இதுதான் கோழிப்பண்ணையாளர்களை அப்போது கொந்தளிக்க வைத்தது. கோழிப் பண்ணைகளே இல்லாமல் வெறுமனே அரசுக்கும் கோழிப்பண்ணைகளுக்கும் இடைத்தரகராக இருந்து மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.’’

‘‘பெரிய இடத்துத் தொடர்புகள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா?’’

‘‘முக்கியமான அமைச்சர்கள் இருவர் இந்த நிறுவனத்தின் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது மட்டுமில்லை... பி.ஜே.பி ஆட்சியில் இல்லாத தென் மாநிலங்கள் அனைத்திலும் கிறிஸ்டி நிறுவனத்துக்கு வியாபாரம் உண்டு. தமிழகத்தைப் போலவே, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்களின் ஆதரவோடு கிறிஸ்டி நிறுவனத்தின் தொழில் உச்சத்தில் இருக்கிறதாம். குறிப்பாக, தற்போது கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வர் குமாரசாமி குறித்து ஏக கோபத்தில் இருக்கிறது பி.ஜே.பி. அதேபோல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியைவிட்டு விலகிவிட்டார். அத்துடன், பி.ஜே.பி-க்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். இவர்களுக்கும், கூடவே எடப்பாடி பழனிசாமிக்கும் செக் வைக்கவே இந்த ரெய்டு நடப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘இந்த நிறுவனங்களின் நடத்தப்படும் ரெய்டுகள் மூலம், இந்த மூன்று முதல்வர்களுக்கு எப்படி செக் வைக்க முடியும்?’’

‘‘இந்த ரெய்டுக்குக் காரணமாக வருமானவரித் துறை என்ன சொல்கிறது தெரியுமா? ‘நிழலான நிறுவனங்களை ஆரம்பித்து, பணத்தை அவற்றில் திருப்பிவிட்டு வருமானவரி ஏய்ப்பு செய்தார்கள்’ என்பதுதான் வருமானவரித் துறையின் முக்கியமான குற்றச்சாட்டு. அதனால்தான் ரெய்டு ஆரம்பித்ததுமே மத்தியப் பிரதேசத்தில் வைத்து கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமி கவுண்டரைக் கைது செய்தார்கள். வேறு நபர்களின் பணமும் இந்த நிழல் நிறுவனங்களின் வழியே நடமாடி இருக்கலாம் என்பது வருமானவரித் துறையின் சந்தேகம். இதை வைத்துப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.’’

மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

‘‘புரிகிறது. ஆனால், ஒரு விஷயம் புரியவில்லை. குமாரசாமி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருமே பி.ஜே.பி-யின் எதிரிகள். அவர்களுக்கு செக் வைப்பதில் பிரயோஜனம் இருக்கிறது. ஆனால், பி.ஜே.பி-யை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் எடப்பாடிக்கு ஏன் குடைச்சல் கொடுக்க வேண்டும்?’’

‘‘இது காங்கிரஸ் கலாசாரம். எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து ஒருவித நடுக்கத்திலேயே வைத்திருப்பதுதான் தங்களுக்குப் பாதுகாப்பானது என்பது மத்தியில் ஆள்வோரின் லாஜிக். அதையேதான் பி.ஜே.பி-யும் பின்பற்றுகிறது. அவர்களிடம் இருக்கும் இரண்டு அஸ்திரங்களில் ஒன்று, லஞ்ச ஊழல் வழக்குகள்; இரண்டாவது, ஐ.டி ரெய்டு. ப.சிதம்பரம் குடும்பம், சசிகலா குடும்பம், லாலு பிரசாத் யாதவ் குடும்பம் என எல்லா இடங்களில் நடத்தப்படும் ரெய்டுகளும், பதிவுசெய்யப்படும் வழக்குகளும் அதன் அடிப்படையில்தானே! இப்படிக் குடைச்சலைக் கொடுப்பதன் மூலம், மாநிலக் கட்சிகளின் பொருளாதார பலத்தை உடைப்பது, தங்கள் எதிரிகளை எப்போதும் அச்சுறுத்துவது, தற்காலிகமாக தங்களை ஆதரிப்பவர்களை நிரந்தரமாகக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதுதான் திட்டம்.’’

‘‘எடப்பாடி எப்போதுமே பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறார்?’’

‘‘இப்போதுவரை அப்படித்தான் இருக்கிறார். ஆனால், இடையிடையே அவருடைய போக்கில் சிற்சில மாற்றங்கள் தெரிவதாக மத்திய அரசு சந்தேகிக்கிறதாம். அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, ‘எட்டு வழி பசுமைச்சாலை திட்டம் எங்களுடையது அல்ல, மத்திய அரசின் திட்டம்’ என்று மக்களின் கோபத்தை பி.ஜே.பி பக்கம் திருப்பிவிடப்பார்த்தது, தங்களின் ஆத்மார்த்த நண்பனான ஓ.பி.எஸ்ஸுக்கு உரிய மரியாதை தராமல் இருப்பது என்று சில விஷயங்களை மத்தியில் ஆளும் பி.ஜே.பி ரசிக்கவில்லையாம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘தனக்குப் பதவியைக் கொடுத்த சசிகலாவையும், அந்தக் குடும்பத்தையுமே காலி செய்தவர் எடப்பாடி. ஏதாவது ஒரு காரணத்தைக காட்டி ஒரு கட்டத்தில் பி.ஜே.பி-யுடன் மோதவும் தயங்கமாட்டார். எனவேதான், ‘நாங்கள் இருக்கிறோம்... ஜாக்கிரதை’ என்று நினைவூட்டிக் கொண்டே இருக்கும் வகையில் இப்படி எடப்பாடிக்கும் செக் வைக்கிறார்களாம்.’’

‘‘விடாக்கண்டன்... கொடாக்கண்டன் கதையாகத்தான் இருக்கிறது.’’

‘‘இப்படித்தான் 2016 டிசம்பரில் சேகர் ரெட்டி வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி ஓ.பி.எஸ்ஸை வளைத்தனர். அந்த வகையில், இப்போது கிறிஸ்டி ரெய்டு மூலமாக எடப்பாடிக்குக் குடைச்சல் கொடுக்கின்றனர். ஒரே முட்டையில் மூன்று ஆம்லெட் என்பதுபோல, இந்த ஒரு ரெய்டு மூலமாகவே தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று முதல்வர்களுக்கும் செக் வைத்துள்ளது மத்திய அரசு.’’

மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

‘‘இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வீடும் சிக்கியுள்ளதே?’’

‘‘ஐ.ஏ.எஸ் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி வீட்டில்தான் ரெய்டு நடைபெற்றது. கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமி கவுண்டர் போலவே இவரும் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் வாங்கப்படும் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் தரமற்றவையாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்த ஒப்பந்தம் குறித்து சில பருப்பு சப்ளையர்கள் சி.பி.ஐ-க்கு புகார் தந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் சுதாதேவி வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் இரண்டு பேர் வீடுகளுக்கும்கூட வருமானவரித் துறை அதிகாரிகள் எந்த நேரத்திலும் போகக்கூடும் என்று பேச்சு.’’

‘‘ரஜினியின் தலைமை அலுவலகத்தில் ஏதோ குளறுபடியாமே?’’

‘‘சென்னை, கோடம்பாக்கத்தில் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபம் உள்ளது. இங்குள்ள ரஜினியின் அலுவலகம் சமீபகாலமாக பரபரப்பாகவே உள்ளது. தினமும் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பட ஷூட்டிங்குக்காக டார்ஜிலிங் சென்றுள்ளார் ரஜினி. இந்நிலையில், பதவி தருகிறோம் என்று பேரம் பேசி சில நிர்வாகிகள் பணம் பார்ப்பதாகக் குற்றச்சாட்டுகள் மீண்டும் கிளம்பிவிட்டன. இதையடுத்து, சில நிர்வாகிகளை அழைத்து டோஸ்விட்ட ரஜினி, ‘நான் வரும்வரை தலைமை அலுவலகத்தைத் திறக்கக்கூடாது’ என்று சொல்லிவிட்டார். இது அரசல்புரசலாக வெளியில் கசிய ஆரம்பித்ததும், ‘தலைமை அலுவலகத்தில் சில மாற்றங்கள் செய்கிறோம். அதனால்தான், இப்போது அலுவலகம் திறக்கப்படுவதில்லை’ என்று சமாளிக்க ஆரம்பித் துள்ளனர் ரஜினி மன்ற நிர்வாகிகள்.’’

‘‘ஸ்டாலினின் டிரைவர் திடீரென நீக்கப்பட்டுள்ளாரே?’’

‘‘ஸ்டாலினின் டிரைவராக பல வருடங்களாக இருந்துவந்தவர் பாலு. இவர் மூலமாகத்தான் பல்வேறு ரகசிய முடிவுகள் வெளியாவதாக சந்தேகமாம். ‘சமீபத்தில்கூட தென் மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அறிவாலயத்தில் நடத்தாமல், முரசொலி அலுவலகத்தில் நடத்தினார் ஸ்டாலின். அப்படியும் சில தகவல்கள் கசிந்தன. இரவு நேரத்தில் தன்னிலை மறந்துவிடும் பாலுவை, தி.மு.க முன்னணியினர் சிலர் உளவாளியாகப் பயன்படுத்திவந்துள்ளார்கள். காரிலும், போனிலும் ஸ்டாலின் பேசும் விஷயங்களை பாலு வெளியில் சொல்லிவந்தார். இதே புகாரில் சில ஆண்டுகளுக்கு முன்பும் நீக்கப் பட்டவர் பாலு. இப்போது இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளார்’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.’’

‘‘தமிழக எம்.எல்.ஏ-க்கள் வெளிநாட்டுக்குப் பறக்கப்போகிறார்களாமே?’’

‘‘ஆமாம். நீண்ட காலத்துக்குப் பிறகு காமன்வெல்த் கமிட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் 210 எம்.எல்.ஏ-க்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். பத்து ஆண்டு களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற செயல்பாடுகளை உறுதி செய்யும் அமைப்பாக காமென்வெல்த் உறுப்பு நாடுகளில் இத்தகைய அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களைப் பார்வையிடச் செல்லலாம் என்றொரு ஏற்பாடு உண்டு.

‘எம்.ஜி.ஆர் ஓர் எம்.எல்.ஏ-க்கள் குழுவை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தைப் பார்வையிட அனுப்பிவைத்தார்’ என்று துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார். உடனே, ‘இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையுமே ஐந்து குழுக்களாகப் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்பலாம்’ என்று எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டனர்.’’

‘‘இந்த ஒற்றுமையோடு ஆட்சியை நடத்தி தமிழகத்தை நல்வழிக்கு இழுத்துச் சென்றால் சந்தோஷப்படலாம்’’ என்று நாம் சொன்னதும், சிரித்துக்கொண்டே வெளியில் பறந்தார் கழுகார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

டி.டி.வி.தினகரனை கட்சியின் மாவட்ட அளவிலான முக்கியஸ்தர்கள் நெருங்க முடியாதபடி ‘செல்லமாக’ அரண் அமைத்து நிற்கிறாராம் ஒருவர். இவர் ஏற்கெனவே நடராசனிடம் இருந்து, சில புகார்களால் அங்கிருந்து விரட்டப்பட்டவராம். இப்போது தினகரன் கட்சியில் பதவி கல்தா, புது நியமனம் போன்றவற்றில் தனக்குப் பங்கு இருப்பதாக வெளியில் வாய்ப்பந்தல் போடுகிறாராம். இவரின் அலம்பல் தாங்கமுடியவில்லை என்று கட்சி வட்டாரத்தில் புலம்பல் சத்தம் கேட்கிறது. 

சென்னை கீழ்ப்பாக்கம். டூ வீலர்களைக்கூட பார்க்கிங் செய்யமுடியாத அளவுக்கு பிஸியான சந்திப்பு அது. அங்கு திறக்கப்பட்ட பிரபல கடையால் ஏகத்துக்கும் ட்ராஃபிக் ஜாம். பொதுமக்கள் புகார் செய்ய, கடை மூடப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு, திடீரென கடை மீண்டும் திறக்கப்பட்டது. கடை வாசலைத் தவிர்த்து வேறு எங்கோ கார் பார்க்கிங் ஏற்பாடு செய்துள்ளதாகச் சொல்லி தடையில்லாச் சான்றிதழ் வாங்கிவிட்டார்கள். அந்த ஏரியா இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் இதில் ஏனோ அதீத ஆர்வம் காட்டினாராம். 

தலைமைச் செயலகத்தின் அமைச்சர்கள் இருக்கும் அறைகள் பக்கம் மாநகர உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து போகிறார். ஏதாவது அலுவல் விஷயமாக இருக்கும் என்று முதலில் நினைத்தார்களாம் அமைச்சர்கள். ஆனால், விஷயமே வேறு. ட்ரான்ஸ்ஃபர், கல்லூரி சீட் என கைகளில் கத்தையாக மனுக்களுடன் வருகிறார் அவர். அமைச்சர்களிடம் அவசரமாகத் திணித்து, ‘ஜெய’மாக்கித் தரச்சொல்லிக் கோரிக்கை வைக்கிறாராம். இப்போதெல்லாம் அந்த அதிகாரி வந்திருக்கிறார் என்றால், அமைச்சர்கள் தெறித்து ஓடுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு