Published:Updated:

தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேற்றவும், ஈழத் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை சிங்கள ராணுவத்திடம் இருந்து மீட்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவுகடந்து போகின்றன என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, இலங்கையிலே தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த 6,381 ஏக்கர் நிலங்கள் சிங்கள ராணுவத்தினரால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதலே யாழ்ப்பாணத்தின் "வலிகாமம்" பகுதி சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது.

இலங்கையில் போர் முடிவுற்ற பிறகு, இந்த நிலங்கள் திரும்பவும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த நிலங்களை சிங்கள ராணுவத்திற்கே சொந்தமாக ஆக்கிக்கொள்வதற்கான உத்தரவினை சிங்கள அரசு தற்போது பிறப்பித்திருக்கிறது.

இந்த மாதிரியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணப் பகுதியிலே மட்டுமல்ல; தமிழர்களுக்குச் சொந்தமான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திரிகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் தமிழர்களுக்குச் சொந்தமான இந்த நிலப்பகுதியில், யாழ்ப்பாணம் மண்டலத்திற்கான ராணுவ தலைமை அலுவலகத்தைக் கட்டுவதற்கும் இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறதாம். தமிழர்கள் வழிபட்டு வந்த சுமார் 2,500 கோவில்களும், 400 கிறித்தவ தேவாலயங்களும் இடிக்கப்பட்டு, அங்கே சிங்கள வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாம். இதைப்பற்றியெல்லாம் அங்கிருந்து தகவல் அனுப்பியிருப்பதோடு, இதனைக் கண்டித்து தமிழர்கள் சார்பில் அங்கே அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈழத் தமிழர்களின் இந்தக் கோரிக்கை பற்றித் தான் ஏற்கனவே 12.8.2012 அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டிலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானத்தில், "இன்றைய இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக ராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. ராணுவம், அதன் நடவடிக்கைகளுக்காக, தமிழர் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளை கையகப்படுத்திக் கொண்டுள்ளது. காலியாக உள்ள வீடுகளைத் தன் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளும் ராணுவம், அவற்றைக் காலி செய்ய மறுக்கிறது. ராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் வீடுகளில் எந்த சமூக நிகழ்ச்சிகளும் நடத்த முடியாது. ராணுவத்தினரே அங்கு மாவட்ட ஆட்சியராகவும் அரசு நிர்வாகிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இன்றையத் தமிழ் ஈழம் ஓர் ராணுவ முகாம் போலக் காட்சியளிக்கிறது. வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே அப்பகுதிகளில் இருந்து திருப்பி அனுப்புவதோடு, மீண்டும் தமிழர்கள் தங்களின் தொழில், வணிக மற்றும் இயற்கை வள ஆதாரங்களின் மீது உரிமை கொண்டோராய் அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களின் வாழ்வில் இயல்பு நிலை ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, ஐ.நா. அவை இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்" என்றும் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

##~~##
இலங்கையில் இவ்வாறு தமிழர்கள் வாழ்ந்த, அவர்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை எல்லாம் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில், இந்தப் பிரச்னையில் முக்கியமாக நமது இந்திய அரசும் மற்றும் உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் உடனடியாக தலையிட்டு, ஈழத் தமிழர்களுக்கு உரிய இந்த நிலங்களை மீட்டு, தொடர்ந்து அவர்கள் அங்கே வாழவும், தமிழர்கள் வாழ்ந்த இந்தப் பகுதிகளில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.