Published:Updated:

முதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்

முதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்

ஹம்சத்வனி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

முதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்

ஹம்சத்வனி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
முதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்

இந்திய சாரண சாரணியர் இயக்கத்தின் முதல் பெண் தலைவர்; இந்தியன் ஃபெடரேஷன் ஆஃப் ஃபிலிம் சொசைட்டியின் முதல் பெண் துணைத் தலைவர் அம்மு சுவாமிநாதன்

1907-ம் ஆண்டு. பாலக்காட்டைச் சேர்ந்த கோவிந்த மேனனுக்கு நெருங்கிய நண்பர், மதராஸைச் சேர்ந்த சுவாமிநாதன். சட்டம் பயின்றுகொண்டிருந்த இவர், இங்கிலாந்தில் படித்து, பாரிஸ்டர் பட்டம் பெற்று, தன் நண்பரைத் தேடி பாலக்காடு வருகிறார். வயதோ 33.

படிப்பையே வாழ்வின் லட்சியமாகக்கொண்ட இவருக்கு மனதில் ஓர் ஆசை. கோவிந்த மேனனின் மகள்களில் யாராவது ஒருவரை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே அது. ஆனால், சுவாமிநாதனுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. கோவிந்த மேனன் திடீரென இறந்துவிட, வேறு வழியின்றி அவர் மனைவி தன் பெண் குழந்தைகளை அவசரம் அவசரமாகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். எஞ்சி இருந்தது 13 வயதான அந்த வீட்டின் குட்டி தேவதை.

சுவாமிநாதனைப் போன்ற நல்ல வரனை இழக்க விரும்பாத தாய், மகளிடம் அவரை மணக்கும்படி சொல்ல, 1894-ல் பிறந்த 13 வயதான ‘டாம்பாய்’ என்று அறியப்பட்ட அந்தச் சுட்டிப் பெண் இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறாள். ஒன்று, `எப்போது வீட்டுக்குத் திரும்புவாய் என்று வெளியே செல்லும்போது கேட்கக் கூடாது. என் அண்ணன் தம்பிகளை யாரும் இப்படிக் கேட்பதில்லை' என்றவர் விதித்த இரண்டாவது நிபந்தனை, `என்னை மதராஸ் அழைத்துச் சென்று ஆங்கிலேய ‘கவர்னஸ்’ மூலம் ஆங்கிலம் கற்றுத்தர வேண்டும்'. இந்த இரண்டு நிபந்தனைகளைக் கேட்டதும் இரட்டிப்பு மகிழ்ச்சி சுவாமிநாதனுக்கு. புதிதாகக் கற்கும் ஆசை கொண்ட மனைவி, அதிலும் அவருக்குப் பிடித்தமான மொழி, அவர் மனதுக்கு உகந்த நகரத்தில். வேறென்ன வேண்டும்? தாலியைக் கட்டிவிட்டார்.

முதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்

மதராஸ் வந்ததும் கவர்னஸ் மூலம் ஆங்கிலம் கற்கத் தொடங்கினார் அம்மு. குதிரையேற்றம், கார் ஓட்டுவது என்று புதிது புதிதாகத் தேடிக் கற்றுக்கொண்டார். அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. வெளிநாடுகளில் அவர்களைப் படிக்க வைத்தார், வெற்றிகரமான பாரிஸ்டரான சுவாமிநாதன். பின்னாளில் பேட்டி ஒன்றில், குழந்தைகளைத் தன் கணவர்  வெளிநாடுகளில் படிக்கவைத்த காரணத்தால், தான் அதிகம் பயணப்பட நேர்ந்தது என்றும், தன் பார்வை விரிவடைந்தது என்றும் கூறியிருக்கிறார் அம்மு. 1910-ல் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக தன் முப்பதுகளில் கணவரை அம்மு இழக்க நேரிட்டது.

தன் பார்வையைச் சமூகப் பணி நோக்கி அம்மு திருப்பினார். அன்னி பெசன்ட், மார்கரெட் கசின்ஸ், முத்துலட்சுமி ரெட்டி ஆகியோருடன் இணைந்து மதராஸில் இந்திய மகளிர் சங்கத்தைத் தொடங்கினார். சமூகப்பணி அரசியல் நோக்கி அம்முவை ஈர்த்தது. காந்தியக் கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். கதர் உடைகளை மட்டுமே உடுத்தினார். 1934 முதல் 1939 வரை மதராஸ் மாகாணத்தின் மேலவை உறுப்பினராகப் பதவி வகித்தார். `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது சுதேசி அங்காடிகள் திறக்க, பெரிதும் துணைபுரிந்தார் அம்மு. 1942-ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக அம்முவைக் கைது செய்து வேலூர்ச் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு.

11 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

சிறையில் இருந்தவருக்கு, தன் மகள், நேதாஜி போஸின் பெண்கள் படைத்தலைவியாக நியமிக்கப்பட்ட செய்தி வந்துசேர்ந்தது. டாக்டராக விரும்பிய, அரசியல் சார்பற்ற தன் மகள் திடீரென அரசியலில் குதித்தது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இந்திய தேசியப் படையின் ஜான்சி ராணி பிரிவின் தலைவியான மகள் லக்ஷ்மி செகலின் இந்தத் தேர்வையும் திடீர் அரசியல் முயற்சியையும், மனதில் பயம் இருந்தாலும், எந்த எதிர்
வாதமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார் அம்மு. தன் மகள்கள்மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தவர் அவர்களை நெஞ்சுரமுள்ள வீராங்கனைகளாகவே வளர்த்தார். கேப்டன் லக்ஷ்மி ஒரு வீரமங்கை என்றால், இன்னொரு மகளான மிருணாளினியோ நடனமங்கை. ‘நடனத்துக் காகவே உயிர் வாழ்பவள்... அவள் வணங்கும் தெய்வம் நடனம்’ என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அம்மு. தங்கள் விருப்பப்படி மகள்களும் மகன்களும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எந்த எதிர்ப்பும் இல்லாமல் சம்மதித்தார். விஞ்ஞானி சாராபாயை மிருணாளினி மணக்க முழுச் சம்மதம் அளித்தார் அம்மு.

1950-களில் டெல்லிக்குக் குடிபெயர்ந்தார் அம்மு. மாநிலங்களவை, மக்களவை ஆகியவற்றில் உறுப்பினராகப் பணியாற்றினார். பெண் ணுரிமை, சமத்துவம்மீது அதிக ஈடுபாடு கொண்டவர் அம்மு. 1949-ம் ஆண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவின்போது, வரைவுக்குழுவில் அம்மு உட்பட பெண் உறுப்பினர்கள் ஆற்றிய பங்கு பெரியது.

சாதியத்தைக் கடுமையாக சாடியவர் அம்மு. வேலூர்ச் சிறையில் இருக்கும்போது, தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை பெண் கைதி ஒருவர் சாதிப் பெயர் சொல்லி அழைக்க, அவரிடம் சென்று, “அது நான்தான்... என்னை ஏன் அழைத்தாய்?” என்று கேட்டவர் அம்மு.

இந்திய சாரண சாரணிய இயக்கத்தின் முதல் பெண் தலைவராக 1960 முதல் 1965 வரை பதவி வகித்தார் அம்மு. உலக சினிமா மீது அளவற்ற காதல் கொண்டவர் அவர். திரைப்படங்களின் மீதுள்ள ஈர்ப்பால், பிரபல இயக்குநர் சத்யஜித் ரே தொடங்கிய இந்தியத் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் பெண் துணைத் தலைவராகச் செயல்பட்டார். திரைத் தணிக்கை அமைப்பிலும் உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார். 1978-ம் ஆண்டு மறைந்த அம்மு சுவாமிநாதன், படிப்பறிவு பெரிதும் இல்லை யென்றாலும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய குழுவில் இடம்பெறும் அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட ஒரு சாதனைப்பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!