அலசல்
Published:Updated:

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைப்போம்! - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைப்போம்! - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க. ஆட்சியைக் கலைப்போம்! - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைப்போம்! - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்

கில இந்திய அளவில் #GoBackAmithShah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆன தமிழகச் சுற்றுப்பயண நாளில், ‘‘எதிர்ப்பாளர்களே! 2019 மார்ச்சில் பி.ஜே.பி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்’’ என பதில் சொல்லிவிட்டுப் போனார் அமித் ஷா. ‘‘இந்தியாவிலேயே ஊழல் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் ஊழல் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும்’’ என அவர் பேசியதை வைத்து, ‘அமித் ஷாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது’ என்கிறார்கள் சீனியர் பி.ஜே.பி தலைவர்கள்.

பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, ஜூலை 9-ம் தேதி தமிழகம் வந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாகக் கட்சிக்கு உத்வேகம் கொடுக்கும் பயணம் இது. தேர்தல் பணிகளைக் கச்சிதமாகச் செய்வதற்குக் கட்சி அமைப்பில் மூன்று பதவிகளை அமித் ஷா அறிமுகம் செய்திருந்தார். நம் மாநிலக் கட்சிகளில், பூத் கமிட்டி என்ற பெயரில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நிர்வாகிகளை நியமனம் செய்கிறார்கள். இதை, பி.ஜே.பி-யில் ‘சக்தி கேந்திரா’ என்கிறார்கள். ஐந்து சக்தி கேந்திரா நிர்வாகிகளுக்கு, ஒரு மகா சக்தி கேந்திரா நிர்வாகி இருப்பார். இவர்களைத் தாண்டி, ‘விஸ்தாரா’ என்ற பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள், கட்சியின் முழுநேர ஊழியர்கள். ‘தங்கள் தொகுதியில் கட்சிப் பணிகளைச் செய்வதுடன், அறிமுகமில்லாத பகுதிகளில் ஆண்டுக்கு 15 நாள்கள் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும்’ என இவர்களுக்கு விதி கொண்டுவந்தார் அமித் ஷா. எல்லாத் தலைவர்களுமே விஸ்தாராவாக பணிபுரிய வேண்டும் என்பது அமித் ஷாவின் கட்டளை. குஜராத் தேர்தலுக்கு முன்பாக அமித் ஷாவும் ஒருநாள் விஸ்தாராவாக இருந்துள்ளார். அறிமுகம் இல்லாத இடத்துக்குப் போகும்போது மக்கள் பிரச்னைகளும், கட்சியின் பிரச்னைகளும் எளிதில் தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு.

அ.தி.மு.க. ஆட்சியைக் கலைப்போம்! - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்

தமிழகப் பயணத்தில் சக்தி கேந்திரா மற்றும் மகா சக்தி கேந்திரா நிர்வாகிகளிடம் உரையாற்றிய அமித் ஷா, அதற்கு முன்பாக விஸ்தாராக்களிடம் விரிவாகப் பேசினார். ‘‘மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். மக்களின் தேவைகளை அறிந்து, மத்திய அரசின் திட்டங்கள் மூலம் அவற்றை நிறைவேற்றிக்கொடுங்கள். பி.ஜே.பி-யை மக்கள் நெருங்கி அரவணைக்க வேண்டும். அதைச் செய்யவேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் உள்ளது’’ என்று அவர்களிடம் உருக்கமாகப் பேசினார் அமித் ஷா.

இதேபோல, நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் 78 பேரிடம் நீண்ட நேரம் அவர் பேசினார். ‘ஒவ்வொரு தொகுதியிலும் என்னென்ன பிரச்னைகள் பேசப்படுகின்றன? அங்கு என்ன செய்தால் ஓட்டு வாங்கலாம்?’ என விரிவாக எழுதிக் கொடுக்கச் சொன்னாராம் அமித் ஷா. ‘‘தமிழக மக்கள் ஏன் நம்மீது இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்? அந்தக் கோபத்தைத் தணிக்க என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டாராம். ‘எல்லாத் தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் பக்காவாக அமைக்கப்பட்டுவிட்டன’ என பி.ஜே.பி நிர்வாகிகள் சொன்னாலும், நிஜம் அப்படி இல்லை. ‘‘கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தென் சென்னை மற்றும் தென்காசி ஆகிய 10 தொகுதிகளில்தான் நாம் அமைப்புரீதியாக ஓரளவு பலமாக இருக்கிறோம். இந்தத் தொகுதிகளில் முழுக் கவனம் செலுத்தினால், நமக்கு வெற்றி நிச்சயம்’’ எனத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நம்பிக்கையுடன் சொன்னார்களாம். பலரும் அமித் ஷாவிடம் ஆர்வமாக, ‘‘பி.ஜே.பி., அ.தி.மு.க மற்றும் ரஜினி கட்சி கூட்டணி அமைந்தால் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்’’ என்றார்களாம்.

அமித் ஷா தமிழகம் வருவதற்கு முந்தின நாள்தான், கோவையில் தினகரன் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. ‘தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக 2016 பிப்ரவரி 2-ம் தேதி கோவையில் மோடி பேசினார். அதற்குவந்த கூட்டத்தைவிட, இப்போது தினகரனுக்கு வந்த கூட்டம் இரண்டு மடங்கு அதிகம்’ என மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருந்தது. தமிழக பி.ஜே.பி உயர்மட்டக் குழுவினருடன் பேசியபோது இதைக் குறிப்பிட்டாராம் அமித் ஷா.

எடப்பாடி அரசின் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் பதவி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இன்னொரு பக்கம், எடப்பாடிக்கு எதிராக கவர்னரிடம் போய்க் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்க வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணனால் விசாரிக்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகள் பற்றியும், தமிழகத் தலைவர்களிடம் அமித் ஷா குறிப்பிட்டாராம்.

‘‘அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் மாற்றங்கள் நடக்கப் போகின்றன. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் அநேகமாக ஆகஸ்ட் இறுதியிலேயே தீர்ப்பு வரலாம். ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் நவம்பருக்குள் தீர்ப்பு வந்துவிடும். இந்தத் தீர்ப்புகளால் தமிழக ஆளுங்கட்சிக்கு எதிரான சூழ்நிலை ஏற்படும். அந்த நேரத்தில், அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்கும் சூழ்நிலை மத்திய அரசுக்கு வரும். இப்போது அ.தி.மு.க-வில் அதிகாரத்தில் இருக்கும் நிறையப் பேர் அப்போது தினகரன் பக்கம் போய்விடுவார்கள். அதன்பின் அ.தி.மு.க ஊழல் பேர்வழிகள் இல்லாமல் தூய்மையாகிவிடும். அந்தக் கட்சியோடு நாம் அப்போது கூட்டணி அமைக்க முடியும்’’ என்றாராம் அமித் ஷா.

‘‘அமித் ஷா இதனால்தான், ‘செப்டம்பருக்குள் பூத் கமிட்டி வேலைகளை முடியுங்கள். அக்டோபருக்குப் பின் கூட்டணி அமைத்து, பிரமாண்டமான சக்தியாக பி.ஜே.பி உருவெடுக்கும்’ என்று பேசினார்’’ என்கிறார்கள் தமிழக பி.ஜே.பி தலைவர்கள்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி