அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

மனோகர், மேட்டுப்பாளையம்.

ரஷ்யாவில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நிலவும் உற்சாகம், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் எழும் உற்சாகத்தை விஞ்சுமா?


உலகின் பல நாடுகளில் நம் அளவுக்கு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு கணக்கு தெரியுமா? 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை 150 கோடி பேர் டி.வி-யில் பார்த்தனர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியை 320 கோடி பேர் பார்த்தனர். நேரில் பார்த்தவர்களின் கணக்கு தனி!

கழுகார் பதில்கள்!

செ.விஜயரங்கன், திருவண்ணாமலை.

வங்கிகளில் கடன் வாங்கி 9,863 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டு வெளிநாட்டில் பதுங்கி வாழும் விஜய் மல்லையா, ‘நான் எழுதிய கடிதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் பதில் எழுதவில்லை’ என்று வருத்தப்பட்டுள்ளாரே?

நாடு ரொம்பத்தான் கெட்டுக்கிடக்கிறது. பிக்பாக்கெட் வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள்கூட, இனிமேல் ‘என் கடிதத்துக்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஏன் பதில் தரவில்லை’ என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது.

அ.குணசேகரன், புவனகிரி.

கர்நாடகாவில் குதிரை பேர அரசியல் நடப்பது போன்று, தமிழகத்தில் பதவி கிடைக்காத அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க-விடம் ஏன் பேரம் பேசவில்லை?


அதற்கெல்லாம் இங்கே அவசியமே இல்லை. பெயர்தான் அ.தி.மு.க ஆட்சி. மற்றபடி, இங்கேயும் ‘கூட்டணி ஆட்சி’தான் நடக்கிறது. அதுவும், புதுவிதமான கூட்டணி. அனைவருக்கும் கிடைக்க வேண்டியவை விகிதாசாரப்படி கிடைத்துக்கொண்டிருக்கும்போது, தேவையில்லாமல் பேரம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டுமா?

கழுகார் பதில்கள்!

கோ.ரவிக்குமார், புதுச்சேரி.

சமூக வலைதளங்களில் யாரை வேண்டுமானாலும் மோசமாகத் திட்டுவதும் மிரட்டுவதும் அதிகரித்துள்ளதே?


ஒரிஜினல் முகத்தை மறைத்து, போலி அடையாளங்களை வைத்துக்கொண்டு யாரை வேண்டுமானாலும் மிரட்டும் இந்தப் போக்கு நிறுத்தப்பட வேண்டும். கருத்தை எதிர்கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். மிரட்டல் ஆபத்தானது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சொல்லாத ஒரு விஷயத்தை, அவர் சொன்னதாகச் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். இதைத் தொடர்ந்து குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், ‘உங்கள் 10 வயது மகளைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவேன்’ என ட்விட்டர் தளத்தில் பிரியங்காவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்தார். பதறிப் போன பிரியங்கா, மும்பை போலீஸின் உதவியைக் கேட்டார். மும்பை போலீஸ் அவரை நேரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்கச் சொன்னது. பிரியங்கா டெல்லியில் இருந்தார்.

கழுகார் பதில்கள்!

இந்தச் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டுக் கட்டளைகள் பிறப்பிக்க, மும்பையிலும் டெல்லியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனிப்படை போலீஸார் குஜராத் போய், மிரட்டல் விடுத்த கிரிஷ் மகேஸ்வரியைக் கைது செய்திருக்கின்றனர். ஆன்லைன் மிரட்டலுக்காக, குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் முதல் நபர் இவர்தான்.

நல்ல விஷயம்தான். ஆனால், ஒரு வி.ஐ.பி-க்கு இப்படி நேர்ந்தால்கூட, போலீஸ் ஆக்‌ஷன் எடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலையிட வேண்டியுள்ளது. எளியவர்கள் பாதிக்கப் பட்டாலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயம் இருந்தால்தான் இதுபோன்ற மிரட்டல்கள் குறையும்.

ச.ஆதிமூலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியப் பிரதமர் பதவியில் இருக்கும் நரேந்திர மோடி, வெறும் 19 நாள்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அவர் கொடுக்கும் மதிப்பு இதுதானா?


இது மிகவும் தவறு. மக்கள் பிரதிநிதிகள் கூடுமிடமான நாடாளு மன்றத்தில், ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர், நாள் தவறாமல் பங்கேற்பதுதான் சரியானது. ‘‘ரேடியோவிலும் மேடைகளிலும் பேசும் மோடி, எங்களுக்கு ஏன் பதில் சொல்வதில்லை?’’ என எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்வி அர்த்தமுள்ளது. இதைச் சொன்னதுமே, ‘இந்திரா காந்தி வந்தாரா... ராஜீவ் காந்தி வந்தாரா?’ என்று எதிர்கேள்வி கேட்கக் கூடாது. ‘அவர்களெல்லாம் சரியில்லை’ என்று சொல்லித்தானே இவர் வந்தார்?

க.நெஞ்சையன், பொள்ளாச்சி.

அண்மையில் உங்களைப் பாதித்த நிகழ்ச்சி?

சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச்சாலை திட்டத்துக்கான நில அளவீட்டுக்காக அதிகாரிகள் வரும்போது, நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் விவசாயிகளையும் பெண்களையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டம் எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த, 12-ம் வகுப்பு முடித்திருக்கும் தேவதர்ஷினி, தங்களின் நிலத்தில் அளவு எடுப்பதற்கு எதிராகத் தன் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட துயரச்சம்பவம். தமிழகத்தில் இதற்கு முன்பு எத்தனையோ வளர்ச்சித் திட்டங்கள் வந்துள்ளன. பல இடங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை மட்டும் ஏன் இத்தகைய எதிர்ப்பு? எங்கே தவறு என்பதை ஆட்சியாளர்கள் ஆராய வேண்டும்.

கழுகார் பதில்கள்!

த.பாலகிருஷ்ணன், விருதுநகர்.

வாரிசு அரசியலின் உச்சம் தமிழ்நாடுதானே?


பீகார் நம்மையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. தான் ஊழல் வழக்கில் சிறைக்குப் போனபோது, மனைவியை முதல்வர் ஆக்கிவிட்டுச் சிறையில் இருந்தபடி ஆட்சியை ஆட்டுவித்தவர் லாலு பிரசாத் யாதவ். அவர் மகன் தேஜ் பிரதாப்புக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் மே 12-ம் தேதி திருமணம் நடந்தது. இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. கட்சி போஸ்டர்களில் லாலுவின் மருமகள் ஐஸ்வர்யா ராயின் முகம் பளிச்சிடுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஐஸ்வர்யா ராய் போட்டியிடப் போகிறாராம். லாலுவின் இரண்டு மகன்களும் பீகார் எம்.எல்.ஏ-க்கள். மகள் ராஜ்ய சபா எம்.பி. இப்போது மருமகளும் அரசியலில்! 

 ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

‘துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம், துணை வட்டாட்சியர்களுக்கு உள்ளது’ என்பது மணல் கடத்தல் புள்ளிகளுக்குத் தெரியுமா?


யாரை நோக்கிச் சுட உத்தரவிட வேண்டும் என்பதுத் துணை வட்டாட்சியர்களுக்கும் தெரியும். துப்பாக்கியின் முனை தங்களைக் குறிவைக்காமல் இருக்க, எந்த கலர் நோட்டு கொண்டு சமாளிக்க வேண்டும் என்பது அந்தக் கடத்தல் புள்ளிகளுக்குத் தெரியும்.

ஏ.ராமசாமி, பொள்ளாச்சி.

தன் அலுவலக கார் வேகமாகச் சென்றதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள ஆளுநருமான சதாசிவம் அபராதம் கட்டியுள்ளாரே!


பாராட்டப்பட வேண்டிய முன்னுதாரணம். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், நீதியை நிலைநாட்டியிருக்கிறார். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்வாஹா செய்யப்படும் விஷயங்களில் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை ஆள்பவர்கள் எடுத்தார்கள் என்று பாராட்டத்தான் வாய்ப்பு கிடைப்பதில்லை! 

வி.சண்முகம், திருவாரூர்.

‘பள்ளி வேலை நேரத்தில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தனியார் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளாரே?

இந்த எச்சரிக்கைக்கு எந்தப் பலனும் இருக்காது என்பதுதான் யதார்த்தம். பல ஆண்டுகளாக மத்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜே.இ.இ தேர்வுகளுக்கான பயிற்சியை, பள்ளிகளும் தனியார் கோச்சிங் நிறுவனங்களும் இணைந்து நடத்திக்கொண்டுதான் உள்ளன. இப்போது, இந்தப் பட்டியலில் நீட் சேர்ந்துள்ளது. ‘தனித்தனியாக மாணவர்களை ஈர்க்க மெனக்கெடுவதைவிட, இப்படிப் பள்ளிகளுடன் சேர்ந்துகொண்டால் எளிதில் பணம் பார்க்கலாம்’ என்பது தனியார் கோச்சிங் நிறுவனங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டம். 

ஏற்கெனவே கல்விக் கட்டண நிர்ணயக்குழுவின் உத்தரவு... கட்டாயக் கல்வித் திட்டத்தின்கீழ் ஏழை, எளிய குடும்ப மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற உத்தரவு... போன்றவற்றையே பெரும்பாலான தனியார் பள்ளிகள் அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் காம்பவுண்டு சுவரைத் தாண்டி தமிழக அரசின் அதிகாரம் போகமுடியாது என்பதுதான் நிஜம்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!