
கம்பேரிஸன் கோவாலு!
நடத்துநர் இல்லாப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. ‘இது புது முயற்சி’ என வழக்கம்போல அரசு மார்தட்டிக்கொண்டாலும், ‘நடைமுறையில் சாத்தியமில்லை’ என எச்சரிக்கிறார்கள் போக்குவரத்து ஊழியர்கள். இதைவிட முக்கியப் பிரச்னைகள் சிலவற்றிலிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை வேண்டும் என்பதால் அவை பற்றி அரசின் கவனத்துக்கு...

• பிரச்னை வரவேண்டும் என்பதற்காகவே திட்டம் வகுக்கிறார்களா... இல்லை, இவர்கள் திட்டம் வகுப்பதுதான் பிரச்னைக்கு வழிவகுக்கிறதா எனத் தெரியாத அளவுக்கு எல்லாத் திட்டங்களிலும் பிரச்னைகள் தலைதூக்குகின்றன. எனவே, ‘பிரச்னை இல்லாத திட்டங்கள்’ லிஸ்ட்டை உடனே தாக்கல் செய்தல் நலம்.
• சும்மாவே தமிழனுக்கு ஆயிரம் பஞ்சாயத்துகள். இதில் அட்மின் வேறு கையை கம்மென வைத்துக் கொள்ளாமல் எதையாவது போட்டுத் தொலைகிறார். தமிழகம் பற்றி எரிகிறது. அக்கவுன்ட் ஓனருக்கும் இந்தக் கவன ஈர்ப்பு தேவைப்படுகிறதென்றாலும், வம்பு வளராமல் இருக்கவாவது ‘அட்மின் இல்லா அக்கவுன்ட்கள்’ நிச்சயம் அமலுக்கு வரவேண்டும்.
• மாஸ் ஹீரோதான். ஆனாலும், சினிமாவைப் போலவே நிஜத்திலும் வசனம் பேசி மாட்டிக்கொள்வதால் அவரின் அரசியல் பயணம் டேக் ஆஃப் ஆகவே மறுக்கிறது. எனவே, அவரின் ஆன்மிக அரசியலைக் காக்கும்பொருட்டு ‘பிரஸ்மீட் இல்லா அரசியல் பயணம்’ மேற்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
• தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு விளக்கவுரை தேடவைத்த பெருமை ஒருவரையே சேரும். ட்விட்டர் சர்வரே குழம்பித் தவிக்குமளவிற்குத் தமிழைத் தீட்டுத் தீட்டென தீட்டுகிறார். போதாக்குறைக்கு இப்போது சின்னத்திரையிலும் என்ட்ரி! குறைந்தபட்சம் ட்விட்டரிலாவது ‘தமிழ் இல்லா ட்வீட்’ போட வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
• ஆளுக்கொரு போராட்டம் எனச் சிதறிக் கிடப்பது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தக் கட்சித் தலைவர்களும்தான். ஆளாளுக்கு எதையாவது உளறிக்கொட்டிவிட்டு பின்னர் ஜகா வாங்கி ஓடுகிறார்கள். இதனால், அத்தியாவசியப் பிரச்னைகளிலிருந்து கவனச்சிதறல்கள் நடப்பதால் ‘கருத்து இல்லாக் கட்சி’ என அந்தக் கட்சியை அறிவிக்க வேண்டும். கண்டிப்பாக அப்போதும் மலராது!
ஓவியம்: பிரேம் டாவின்ஸி