Published:Updated:

‘ஸ்டாலினே பாராட்டுற அளவுக்கு எல்லாத் துறையும் சிறப்பா இருக்கு!’ - கலகலத்த அமைச்சர்

‘ஸ்டாலினே பாராட்டுற அளவுக்கு எல்லாத் துறையும் சிறப்பா இருக்கு!’ - கலகலத்த அமைச்சர்
‘ஸ்டாலினே பாராட்டுற அளவுக்கு எல்லாத் துறையும் சிறப்பா இருக்கு!’ - கலகலத்த அமைச்சர்

கஜா புயலில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என அனைத்துக் கட்சிகளும் பாராட்டுப் பத்திரம் வாசிக்க, அ.தி.மு.க அமைச்சர்களின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் மின்னுகிறது. இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கும் அமைச்சர்கள் சிலர், தங்களுக்கும் ஹியூமர் சென்ஸ் இருக்கிறது என காட்டும் விதத்தில் சமீபத்திலான பேட்டிகளில் பொளந்து கட்டுகின்றனர்.

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ‘கஜா புயல், கூஜா புயல் அகிவிட்டது’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரிவித்திருந்தார். ஈரோட்டில் அனைத்துத் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் எனக் கூட்டம் நடந்த அரங்கமே நிறைந்து வழிந்தது. அதிகாரிகளினுடைய ஆலோசனைக்கூட்டம் என்பதால் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டம் நடந்த அரங்கினுடைய கதவுகளை திறந்துவைத்து, மைக்கில் பேசுபவர்களுடைய குரல் ஸ்பீக்கரில் அலற எனக் கூட்டம் ரகசியமானதாக (!) நடந்தது. 

கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “கஜா புயலால் நம்முடைய மாநிலத்தில் பெரும்பாலான இடத்தில் சேதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்ற புள்ளிவிவரம் கொடுத்த உடனேயே, முதலமைச்சர் அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே புயல் சேதத்தினை தடுக்கும் வகையில் ஆயத்தப்  பணிகளை முடுக்கிவிட்டார்கள். இதை அனைத்துக் கட்சிகளும் இன்றைக்குப் பாராட்டியிருக்கிறது. கஜா புயல் வேகத்தைக் காட்டிலும் அரசுடைய பணிகள் வேகமாக இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என முதல் பாலிலேயே புண் சிரிப்போடு சிக்ஸர் அடித்தார். தொடர்ந்தவர், “நாகப்பட்டினத்தில் இருந்து 136 பள்ளிகளில் ஓடுகள் சேதமடைந்திருக்கின்ற என்ற பட்டியல் வந்திருக்கிறது. மேலும், பள்ளிகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய சேதங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்” என்றார்.

சிறப்பாசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்ப, இடைமறித்த அமைச்சர் கருப்பண்ணன், “ஏங்க!...எல்லாத்துறையும் சிறப்பா இருக்கு. காஜா புயலையே பண்ணியாச்சி (என்னது காஜாவா!). இதை ஏன் போய் கேட்டுக்கிட்டு இருக்கீங்க. ஸ்டாலினே பாராட்டுற அளவுக்கு எல்லாத் துறையும் சிறப்பா இருக்கு” எனச் சொல்ல ஓட்டு மொத்த கூட்டமே வெடித்துச் சிரித்தது..