அலசல்
Published:Updated:

எவர் எதிர்த்தாலும் சிறைதான்! - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்

எவர் எதிர்த்தாலும் சிறைதான்! - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
எவர் எதிர்த்தாலும் சிறைதான்! - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்

எவர் எதிர்த்தாலும் சிறைதான்! - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்

காஷ்மீருக்குக்கூட போய் பத்திரமாகத் திரும்பி வந்துவிட முடிகிறது. இங்கிருக்கும் காஞ்சிபுரத்துக்கு வெளி மாவட்டங்களிலிருந்து போகிறவர்களைக் கைது செய்துவிடுகிறது போலீஸ். சேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படவிருக்கும் எட்டுவழிச் சாலையை யார் எதிர்த்தாலும், அவர்களைச் சிறைக்குள் தள்ளுவது என்பதை எழுதப்படாத சட்டமாக ஆக்கியுள்ளது எடப்பாடி அரசு.

எட்டுவழிச் சாலைக்குக் காஞ்சிபுரம் தொடங்கி சேலம் வரை ஐந்து மாவட்ட விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஜூன் 26-ம் தேதி கறுப்புக்கொடி ஏற்றியும், ஜூலை 6-ம் தேதி அரசாணை நகலை எரித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சேலத்தில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி உள்பட 44 பேரும், திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி உள்பட 63 பேரும் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவர முடியாத (505/1பி, 285, 188, 341, 153, 147, 71ஏ/சி.ஏ.ஏ.) பிரிவுகளின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எவர் எதிர்த்தாலும் சிறைதான்! - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்

துண்டுப்பிரசுரங்கள் வழங்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, காஞ்சிபுரம் மக்கள் மன்றம், பாலாறு பாதுகாப்புக் கூட்டமைப்பு உள்படப் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 19 பேர், வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையில் மூன்று பேர் என 30-க்கும் மேற்பட்டோரை தமிழக அரசு கைது செய்துள்ளது. எட்டுவழிச் சாலையை எதிர்க்கும் இயக்குநர் வ.கவுதமன், மக்கள் அதிகாரம் அமைப்பினர் எனப் பலரையும் வேறு ஏதோ காரணங்களைக் காட்டி அரசு கைது செய்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. அப்படிக் கைது செய்யப்பட்ட வர்கள்மீது கொலைமுயற்சி உள்படப் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்திருப்பதுடன், அவர்கள் தொடர்பான பழைய வழக்குகளையும் தூசிதட்டி எடுத்து, ஜாமீனில் வெளியில் வந்துவிட முடியாதபடி செய்யும் வேலைகளும் ஜரூராக நடைபெறுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நடிகர் மன்சூர் அலிகான், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ், சமூக செயற்பாட்டாளர் வளர்மதி உள்பட பலர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். நடிகர் மன்சூர் அலிகானிடம் பேசியபோது, ``நம் பிள்ளை தவறு செய்யும்போது, ‘கொன்னுடுவேன்’ என்று ஒரு தாயின் உரிமையில் நாம் கண்டிப்பதில்லையா... அப்படித்தான் நமக்காக இயங்கும் இந்த அரசைக் கண்டித்தேன். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் நடக்காத கொடுமைகள், தமிழகத்தில் நடக்கின்றன” என்றார். பியூஸ் மானுஷிடம் பேசியபோது, ``எங்களைப் பயமுறுத்துவதற்காக, தமிழக அரசு கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்பதைத் தொடர்ந்து சொல்லிவருகிறேன். சட்டரீதியாக எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டும் என்று எண்ணக்கூடியவன் நான். அப்படிப்பட்ட என்மீது பிரிவு 153 (சட்டவிரோதமாகச் செயல்படும் குழு) மற்றும் 506/2 (ஆயுதங்களைக்கொண்டு மிரட்டுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்’’ என்றார். வளர்மதியிடம் பேசியபோது, “இந்தப் பகுதியில் உள்ள எட்டு மலைகளில் கனிம வளங்கள், இரும்புத்தாதுகள் போன்றவற்றை அபகரிக்கவே இந்தச் சாலை அமைக்கப்படுகிறது” என்றார்.

எவர் எதிர்த்தாலும் சிறைதான்! - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்

துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 பேர் சிறையில் அடைக்கப் பட்ட நிலையில், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 6-ம் தேதி அரசாணை எரிப்புப் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘‘எட்டுவழிச் சாலை திட்டத்துக்கான, நில எடுப்பில் நில உரிமைதாரர்கள் அல்லாதவர்கள், குறிப்பாக வெளியூர் நபர்கள் ஊடுருவி நில உரிமையாளர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டாலோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கான வாகன உரிமம் ரத்துசெய்யப்படும்’’ என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நாம் கேட்டபோது, ‘‘வெளியிலிருந்து வந்து போராட்டத்தைத் தூண்டுகிறார்கள். அதற்காக, இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது” என்றார். அவரிடம், “ஒரு பகுதி மக்களுக்குப் பிரச்னை ஏற்படும்போது, அவர்களுக்கு ஆதரவாக வேறு பகுதியிலிருந்து வந்து குரல் கொடுப்பதில் என்ன தவறு?” என்று கேட்டதற்கு, ‘‘மக்களை மனமாற்றம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது’’ என்றார். தொடர்ந்து அவரிடம், “இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களை மனமாற்றம் செய்கிறார்கள் என யாராவது உங்களிடம் புகார் செய்துள்ளார்களா?’’ என்று கேட்டோம். அதற்கு கலெக்டர், ‘‘எங்கள் நிலத்தை எடுக்கிறார்கள் என்று விவசாயிகள் வந்து உங்களிடம் புகார் செய்தார்களா?’’ என எரிச்சலுடன் கேட்டார்.

அதிகாரிகள் யாரும் செய்திகளைப் பார்ப்பதோ, படிப்பதோ இல்லையா?

- கே.புவனேஸ்வரி