அலசல்
Published:Updated:

“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்!”

“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்!”

வேலுமணியை விளாசிய தினகரன்

கோவையில் ஜூலை 8-ம் தேதி  பிரமாண்டமானப் பொதுக்கூட்டத்தை நடத்திவிட்ட உற்சாகத்தில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன். மிரண்டுபோயுள்ளது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு. அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அனைவரின் டார்கெட்டும் எடப்பாடி பழனிசாமியைவிட, கோவையைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணியை நோக்கியே இருந்தது.     

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “நான் சுயம்புவாக வந்தேன் என்கிறார் எடப்பாடி. அவர் சின்னம்மாவின் காலில் விழுந்து எப்படி சுயம்புவாக வந்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துள்ளனர். அத்தனை அமைச்சர்களுமே, ‘அரசு இருந்தால் போதும், கல்லா கட்டினால் போதும்’ என்ற எண்ணத்துடன் மட்டுமே உள்ளனர்’’ என்றார்.

“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்!”

தினகரன் மைக் முன்னே வந்ததும், கூட்டத்தினர் ஒரே ஆரவாரம் செய்தனர். ‘‘இந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் சொல்கிறார்... ‘ஒரு தினகரன் அல்ல... ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்று. ஆர்.கே நகரில் இந்த ஒரு தினகரனையே உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர், ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு, வீடுவீடாக பிள்ளை பிடிப்பவர்கள்போல அலைந்தீர்கள். டெபாசிட் பெறுவதற்கு நீங்கள் போட்ட தோப்புக்கரணம் எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு கொங்கு மண்டலமே இங்கு திரண்டிருக்கிறது. இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

தினகரன் புறவழியில் வந்தவர் என்று சொல்கிறார்கள். அம்மா மிகவும் நம்பிய எஸ்.டி.எஸ்., கண்ணப்பன், முத்துசாமி ஆகிய மூன்று பேரும் கருணாநிதியிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, போட்டி அ.தி.மு.க-வை ஆரம்பித்தார்கள். அப்போதுதான், சின்னம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்த என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார் அம்மா. அதன் பிறகு, அம்மா என்னைப் பேரவைச் செயலாளராக ஆக்கினார். அந்தச் சமயத்தில் நான் கோவை வந்தபோது, சிவசாமியால் என்னிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் இன்றைக்கு இங்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறாரே... அந்த மணி! 2002-ல், ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அம்மா நின்றார். அப்போது, ஃப்ளெக்ஸ் பேனர்கள் கிடையாது. திருப்பூரில் தயாரித்த துணி பேனர்களை எடுத்துக் கொண்டு ஆண்டிப்பட்டிக்கு வருவார் சிவசாமி. அவருடன் ஆறு அடி உயரத்தில் ஒரு நபர் பேனர்களை சாக்கிலே கட்டித் தூக்கிக்கொண்டு வந்து என் பெரியகுளம் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு ஓரமாக நிற்பார். அந்த ஆறு அடி ஆள் யாரென்று உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. (வேலுமணியை நினைத்துக் கூட்டத்தில் சிரிப்பலைகள் பரவின.)

“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்!”

அன்றைக்கு துணி பேனர்களை சாக்குமூட்டையில் தூக்கிக்கொண்டு வந்தவர்தான், இன்று சாக்கடைத்துறை அமைச்சர். சாக்கடையைச் சுத்தம்செய்ய வேண்டிய அமைச்சர், இன்றைக்கு சாக்கடையைப் போலப் பேசுகிறார். காரணம், அமைச்சர் என்கிற திமிர். துரோகம் செய்தவர்களெல்லாம் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. ‘தினகரா... உன்னைத் தெரியாதா? நீ மாமியார் வீட்டுக்குப் போகப்போகிறாய்’ என்று என்னைப் பார்த்துச் சொல்கிறார்கள். யார் மாமியார் வீட்டுக்குப் போகப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியும். திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் முட்டை ரூபத்தில் சிக்கல் ஆரம்பித்துவிட்டது. அந்த முட்டை அணுகுண்டாக மாறி உங்கள் துரோகத்தின்மீது விழப்போகிறது. துரோகக் கும்பல் சட்டசபையைக் காலி செய்யும் நேரம் நெருங்கிவிட்டது’’ என்றார்.   

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்