பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?
பிரீமியம் ஸ்டோரி
News
‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

ஜோ.ஸ்டாலின் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

எம்.ஜி.ஆர் தலைமை!

‘நான்தான் தி.மு.க; தி.மு.கதான் நான்!’ என லாயிட்ஸ் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 1972 அக்டோபர் 8-ம் தேதி முழங்கினார் எம்.ஜி.ஆர்! தி.மு.க-விலிருந்து அவர் நீக்கப்பட்டதும் நடைபெற்ற கூட்டம் அது. அதில் அப்படிப் பேசிய எம்.ஜி.ஆர், அடுத்த ஒன்பதே நாள்களில், அ.தி.மு.க-வை ஆரம்பித்தார். ‘அண்ணாயிசமே’ அ.தி.மு.க-வின் கொள்கை என்றார். கறுப்பு-வெள்ளை-சிவப்பு என்ற மூன்று நிறப்பட்டைகளுக்கு நடுவில் தாமரைப் பூ அச்சிடப்பட்ட, அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றக் கொடியைக் கொஞ்சம் மாற்றினார். கொடியின் நடுவில் இருந்த தாமரைப்பூவை நீக்கிவிட்டு, அண்ணாவின் படத்தை வைத்தார். அதை அ.தி.மு.க கொடியாகப் பறக்கவிட்டார்.எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்கு ரசிகர்களாக இருந்தவர்கள், எம்.ஜி.ஆர் என்ற தலைவருக்குப் பின்னால் அ.தி.மு.க தொண்டர்களாகத் திரண்டனர்.

தமிழக அரசியல் களத்தில் இருந்த மற்ற கட்சிகளின் தொண்டர்களுக்கும், எம்.ஜி.ஆரின் பின்னால் அணிவகுத்த அ.தி.மு.க தொண்டர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. அ.தி.மு.க-வுக்கு முந்தைய கட்சிகளின் தொண்டர்களுக்குத் தலைமையைத் தாண்டிய அரசியல் உண்டு; ஆனால், அ.தி.மு.க தொண்டனுக்குத் தலைமையே அரசியல்! தலைமை சொல்வதே கொள்கை; தலைமை வகுப்பதுதான் கட்சியின் பை-லா சட்டம்!

1987-ல் நிகழ்ந்த எம்.ஜி.ஆர் மரணம் இந்த ராணுவக் கட்டுக்கோப்பைக் குலைத்துப் பார்த்தது.

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

ஜெயலலிதா தலைமை!

அ.தி.மு.க-வைக் கட்டுப்படுத்தி, ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற ஆர்.எம்.வீரப்பன் ஆலோசனை நடத்தினார்; நாவலர் நெடுஞ்செழியன் ‘நான்தான் முதல்வர்’ என ஆவர்த்தனம் செய்தார். இவர்கள், இரண்டுபேரும் முட்டிக்கொண்டிருந்த நேரத்தில், “நான் முதல்வரானால் என்ன?” என்று கேட்டு, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆர்.எம்.வீரப்பன், ஜானகியின் தலைமையைப் பொறுத்துக் கொண்டார்; நாவலர் ஆட்டத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஆனால், ஜெயலலிதா எதிர்த்து நின்றார். ‘நான்தான் அ.தி.மு.க;

அ.தி.மு.க-தான் நான்’ என்று தனி அணியாகப் பிரிந்து போனார்; கட்சி கலகலத்தது; அ.தி.மு.க இரண்டாகப் பிளந்தது; அந்த நேரத்தில், ஜானகி ஆட்சி கலைந்து, சட்டமன்றத் தேர்தல் வந்தது. 1989-தேர்தலில், தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா 32 எம்.எல்.ஏ-க்களோடு எதிர்க்கட்சித் தலைவரானார். ஜானகி, அரசியல் ஆட்டத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு யார் கட்சியின் தலைவர் என்ற கேள்விக்கும் அப்போதே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு, இறக்கும்வரை கட்சிக்கு ஜெயலலிதா மட்டுமே நிரந்தரப் பொதுச்செயலாளர். எம்.ஜி.ஆர் என்ன பாணியில் கட்சியை நடத்தினாரோ... அதைவிட இறுக்கமாக ஜெயலலிதா அந்தக் கட்சியை வழிநடத்தினார்.

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

மன்னார்குடி நிழல் தலைமை!

எம்.ஜி.ஆர் காலத்தில் நிர்வாகிகள் தேர்வுக்குக் கட்சிக்குள் தேர்தல் வைக்கப்பட்டது. அதில், தொண்டர்களின் ஆதரவைப் பெற்று வென்றவர்கள் அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் ஆவார்கள். பிறகு, அவர்களே எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள் எனப் பதவி பெறுவார்கள். பொறுப்பேற்பார்கள். ஆனால், ஜெயலலிதா காலத்தில் எல்லாம் நியமனப் பதவிகளாக ஆனது. திடீரென்று தலைமைக் கழகத்திலிருந்து அறிவிப்பு வரும், அதில் ‘இவர் நீக்கப்பட்டு... இன்னார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தகவல் இருக்கும். நீக்கியவருக்கு, ஏன் நீக்கப்பட்டோம் என்று தெரியாது. புதிதாகச் சேர்க்கப்பட்டவருக்கும், ஏன் சேர்க்கப்பட்டோம் என்று தெரியாது. நீக்கப்பட்டவரும், ஏன் என்று கேட்கமாட்டார். சேர்க்கப்பட்டவரும், எதனால் என்று கேட்கமாட்டார். கிளைச் செயலாளர் பொறுப்பு முதல் அமைச்சர் பதவி வரை அந்தக் கட்சியில் கடந்த 30 ஆண்டுகளில் எல்லாம் நியமனங்களாகவே நடைபெற்றன. இந்த நியமனங்களைச் செய்தது, ஜெயலலிதாவுக்குப் பின்னால் இருந்த மன்னார்குடி நிழல் தலைமை!

ஜெயலலிதா கட்சி முடிவுகள் எல்லாவற்றையும் மன்னார்குடிக் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டுக் கட்சியை நடத்தினார். அந்தக் குடும்பம் திரைமறைவில், ஜெயலலிதா சொன்னதையும் செய்தது; சொல்லாததையும் செய்தது. அந்தக் குடும்பத்தின் ஆதிக்கம் எந்தளவுக்கு இருந்தது என்றால், மற்ற கட்சிகள் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும்போதே, 234 தொகுதிகளுக்கும் எம்.எல்.ஏ வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் அளவுக்கு இருந்தது. இது ஜெயலலிதாவுக்குத் தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பதைவிட, சசிகலாவுக்குத் தெரிந்துதான் நடந்தது என்பதுதான் முக்கியமானது. சசிகலாவும் மன்னார்குடிக் குடும்பமும் சொல்வதுதான் தலைமைக் கழகத்திலும் நடந்தது. தலைமைச் செயலகத்திலும் நடந்தது. ஆனால், அனைத்தும் ஜெயலலிதாவின் பெயர் பொறித்த லேபிளை ஒட்டி நடந்ததால், அதை அ.தி.மு.க-வில் யாரும் எதிர்க்கத் துணியவில்லை.

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

எடப்பாடி-பன்னீர் தலைமை!

ஜெயலலிதா மறைந்தபிறகு திரைமறைவில் இருந்தவர்கள், திரைக்கு முன்னால் வந்தார்கள். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். வரலாறு மீண்டும் திரும்பியது. ஜானகியை எதிர்த்து ஜெயலலிதா தனி அணி கண்டதுபோல், சசிகலாவை எதிர்த்து, ஓ.பி.எஸ் தனி அணியாகப் போனார். ஆனாலும், எல்லா எதிர்ப்புகளையும் மீறி, கட்சியைக் கைப்பற்றி, முதல்வர் நாற்காலிக் கனவில் இருந்த சசிகலாவை, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சிறையில் தள்ளியது. சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியே தொடர்ந்தது. சசிகலாவின் தலைமையை காலாவதியாக்கி, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தலைமை உருவானது. அதை எதிர்த்து தினகரன் தனி அணியாகப் பிய்த்துக் கொண்டு போனார். போனவர் தனிக் கட்சியையும் ஆரம்பித்துவிட்டார். இப்போது, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்று எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் அறிவிக்கும் அளவுக்கு, அ.தி.மு.க-வைச் சொந்தம் கொண்டாடி ஒவ்வொரு நாளும் ஒருவர் கட்சி ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார்; ஜெ.தீபாவின் கணவர் மாதவன், எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். சசிகலாவின் தம்பி திவாகரன், ‘அண்ணா திராவிடர் கழகம்’ என்றொரு கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க தொண்டன் திசை தெரியாமல் திகைத்து நிற்கிறான். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க-வின் நிலை என்னவாகும்?

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

எதிர்காலம்?

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே பல பொறுப்புகள் வகித்துவிட்டு, தற்போது கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருக்கும் மூத்த தொண்டர் ஒருவரிடம் பேசினோம்.

“என்னைப் போன்ற அ.தி.மு.க தொண்டர்கள் கட்சியின் இன்றைய நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம். எங்களால் இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை நிலவுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களிடம் பேசியதில், அவர்கள் யாரும் இப்போது இருப்பவர்களில் எவரையும் தலைவராக ஏற்கவில்லை என்பதுதான். நன்றாகக் குறித்துக்கொள்ளுங்கள், இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்தும், மொத்தமாக இல்லாமல் போய்விடும். இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். கட்சியில் இன்றைக்குத் தலைவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டிருப்பவர்களைத் தொண்டர்கள் தூக்கியெறிவார்கள்.

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் உள்ளிட்டவர்களை, எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் மட்டுமல்ல...

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?அ.தி.மு.க தொண்டர்களும் ஏற்கவில்லை; இதுதான் இன்றைய நிதர்சனம்; இவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்கள், அ.தி.மு.க தொண்டன் என்ற உணர்வோடு எப்போதும் இருப்பான். தி.மு.க எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையால் உரமேற்றி வளர்க்கப்பட்ட அவனால், தி.மு.க-வில் போய் இணைய முடியாது. இந்த மண்ணுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத தேசியக் கட்சிகளிலும்  இணைந்து எங்கள் தொண்டர்களால் பணியாற்ற முடியாது.  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை உயிருக்கு உயிராக நேசித்து, அந்தக் காரணத்தால் அ.தி.மு.க தொண்டனாகி, தலைமுறை தலைமுறையாக இரட்டை இலையையும், எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்ட தொண்டர்கள் யாரும் ரஜினி, கமல் போன்ற நடிகர்களையும் ஏற்கமாட்டார்கள்.

இந்தக் கட்சிக்குள் ஒரு புரட்சி நடக்கும். தங்களை யார் வழிநடத்த வேண்டும் என்பதைத் தொண்டர்களே முடிவு செய்வார்கள். அல்லது, இந்தத் தொண்டர்களை வெற்றிகரமாக யாரால் ஒருங்கிணைத்து வழிநடத்த முடிகிறதோ அவரே கட்சியின் புதிய தலைமையாக உருவெடுப்பார்.தினகரன் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன். அவர் விரைவில் பெரா வழக்கில் கைதாகி, சிறைக்குப் போய்விடுவார்” என்றார்.

முன்பு எம்.எல்.ஏ-வாக இருந்து தற்போது பிரிந்து கிடக்கிற எந்தத் தலைமையின் கீழும் பணியாற்ற முடியாமல் ஒதுங்கி இருக்கும் அ.தி.மு.க தொண்டர் அவர், வேதனையோடு பேசினார்.

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

“1993-லிருந்து இந்தக் கட்சியில் நூறு சதவிகிதம் நியமனம் மூலம்தான் பதவிகள் கொடுக்கப்பட்டன. அந்த நியமனங்களைச் செய்தது, சசிகலா குடும்பம்தான். இப்போது துணை முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வத்தை இந்தக் கட்சிக்குக் கொண்டு வந்ததும் சசிகலா குடும்பம்தான்; அவருக்கு அமைச்சர் பதவியும் பிறகு முதலமைச்சர் பதவியும் கிடைப்பதற்குக் காரணமாக இருந்ததும் சசிகலா குடும்பம்தான். அதுபோல, இன்றைக்கு இருக்கும் அமைச்சர்களில் ஆரம்பித்து, முதலமைச்சராக இருக்கும் எடப்பாடியும் சசிகலா குடும்பத்தின் தயவால்தான் இந்தப் பதவியைப் பெற்றார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து வழிநடத்தும் தகுதி இப்போது அந்தக் குடும்பத்தில் தினகரனுக்குத்தான் இருக்கிறது. அதை இப்போது பத்திரிகைகளும் மாற்றுக் கட்சிக்காரர்களும் ஒத்துக் கொள்கின்றனர். அதுபோல, அ.தி.மு.க தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் மட்டுமல்ல... இன்றைக்கும் அமைச்சர்களாக இருப்பவர்க ளுக்கும் அதே எண்ணம்தான் இருக்கிறது. ஆனால், இப்போதே அந்த எண்ணத்தை வெளிப்படையாகச் சொன்னால், கட்சியில் தங்களுடைய இடம் கேள்விக்குறியாகிவிடும்; அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைத்து அமைதியாக இருக்கின்றனர். ஆனால், ஆட்சி கவிழ்ந்ததும், பெரும்பாலான தொண்டர்கள் தினகரனைத்தான் ஆதரிப்பார்கள். ஆனால், அவர் தனியாகத் தொடங்கியுள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குப் போகமாட்டார்கள். மாறாக, அ.தி.மு.க-வுக்கு அவர் தலைமையேற்கும் சூழல் வந்தால், அப்போது அவரை ஆதரிப்பார்கள். ஏனென்றால், எங்களுக்கு இந்தக் கரை வேட்டியும், இரட்டை இலைச் சின்னமும்தான் உயிர்!’’ என்றார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் சாதாரணத் தொண்டராக ஆரம்பித்து, இப்போதும் கட்சியின் தலைவிதியை மாற்றும் முக்கியமான பொறுப்பில் இருப்பவர். அதிருப்தியால் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அவரிடம் பேசினோம். பெயர் போடவேண்டாம் என்றார். “ஜெயலலிதா, தனக்குப் பிறகு, இந்தக் கட்சிக்குத் தலைவர் யார் என்பதைச் சொல்லவில்லை. அதனால்தான் இன்று தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக இருக்கிறான். அப்படித் தடியெடுத்து ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றியதாக நினைப்பவர்கள், தங்கள் குடும்பத்தை மட்டுமே வளர்க்கிறார்கள். எடப்பாடி குடும்பம் பணம் சம்பாதிக்கக் கட்சியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது; ஓ.பி.எஸ் குடும்பம் பணமும் பதவியையும் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மற்ற அமைச்சர்கள் தங்கள் சக்திக்குத் தக்க ஆதாயம் தேடுகின்றனர். ஆனால், இவர்கள் யாரும் தொண்டர்களை மதிப்பதில்லை. தொண்டர்களுக்கு எதையும் செய்துகொடுப்பதும் இல்லை. தொண்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குக்கூட கட்டிங் கேட்கிறார்கள்’’ என்று ஆதங்கத்தோடு பேசினார்.

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணியிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வின் பிரச்னையே விசித்திரமானது. அந்தக் கட்சிக்கு இன்றைக்குத் தலைமை இல்லை; எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் போன்றவர்கள் அந்தக் கட்சியின் மூத்த அமைச்சர்கள். அவர்களைக் கட்சியின் தலைமையாக எந்தத் தொண்டனும் ஏற்கவில்லை. கட்சியைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு மாவட்டச் செயலாளர் அதிகாரத்தில்தான் இருக்க முடியும்; தொண்டர்களும் அவர்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு இருந்த ஆளுமைத் திறன் இவர்களுக்கு ஒருபோதும் வராது. பொன்னுக்குப் பதில் பூ என்கிற தகுதியில்கூட இவர்கள் இல்லை. 50 சதவிகிதம் அல்லது 40 சதவிகிதம் பாஸ் மார்க் வாங்கும் தகுதியில்கூட இவர்களின் அரசியல் ஆளுமை இல்லை. அதனால், இவர்களை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒரு கட்டத்தில், இந்தக் கட்சி விரும்பினாலும், விரும்பா விட்டாலும் டி.டி.வி.தினகரன் பக்கம் போவதற்கான வாய்ப்புகளே 90 சதவிகிதம் இருக்கின்றன. அவர்மீது வழக்குகள் இருக்கின்றன. ஆனால், ஜெயலலிதாமீதும் வழக்குகள் இருந்தன. ஆனாலும், அவர் அந்தக் கட்சியைக் கட்டுக் கோப்பாக வழிநடத்திச் சென்றார். அதைப்போல தினகரனாலும் செய்ய முடியும்’’  என்றார்.

‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...!’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?மூத்த நிர்வாகிகள் தொண்டர்களின் இந்தக் கருத்துகளோடு, இப்போது (இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆதரவு) அ.தி.மு.க-வில்  மாவட்டச் செயலாளராக உள்ள பாலகங்காவைச் சந்தித்தோம். “கட்சியில் எந்தக் கட்டுக்கோப்பும் கலையவில்லை. அம்மா இருக்கும்போதே, கட்சியை அழிக்க எதிர்க்கட்சிகளின் முயற்சி அதிகமாக இருந்தது. இப்போது அது அதிகமாகியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டியும் இந்த ஆட்சி நின்று கொண்டிருக்கிறது. தினகரன் சம்பந்தமே இல்லாமல், கட்சிக்குச் சொந்தம் கொண்டாடுகிறார். 2007-லிருந்து 2016 வரை அவர் கட்சியிலேயே இல்லை. அவர் கட்சிக்கே வாரிசாக வர வேண்டும் என்று முயற்சி செய்கிறார். கட்சியை ஒரு பக்கம் எங்களைப் போன்றவர்கள் கட்டுக்கோப்பாக வைத்து, ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பிரச்னைகள், எதிர்ப்புகளைச் சமாளித்துக்கொண்டிருக்கிறோம். இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் ஓடும். பிறகு, எல்லாம் சரியாகிவிடும். அ.தி.முக.வை யாராலும் எதுவும் செய்ய முடியாது’’ என்றார்!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய வாக்குவங்கியை வைத்துக்கொண்டிருக்கிற பலம் வாய்ந்த கட்சி, குழப்பத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கிய அந்த வாக்குவங்கியைக் கைப்பற்ற தேசியக் கட்சிகள்  முதல், நேற்று தொடங்கப்பட்ட சிறிய கட்சிகள் வரை முயற்சி செய்கின்றன. சிதறிக் கிடக்கும் தொண்டர் கூட்டம் தலைவனுக்காகக் காத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க எதிர்கொண்ட அதே நிலை! அன்று யாருமே எதிர்பார்த்திடாத இடத்திலிருந்து ஜெயலலிதா என்கிற ஒருவர் தோன்றி, கட்சியை மீட்டெடுத்தார்... இதோ இன்றும் அப்படி ஒரு மேஜிக் நடக்கும் என்று அ.தி.மு.க தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.