பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

விடாது கறுப்பு!

விடாது கறுப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
விடாது கறுப்பு!

பா.முகிலன் - ஓவியம்: ஹாசிப்கான்

மோடி ஆட்சிக்கு வந்தால் கறுப்புப் பணம் முழுவதுமாக ஒழிக்கப்படும், சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் அத்தனையும் மீட்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என்கிற முழக்கங்கள் அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தன. ஆனால், முன்பைவிட சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு 50 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என அதிரவைக்கிறது சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கை.

இதில், 2017-ம் ஆண்டில் வெளிநாடுகளைச் சேர்ந்தோரின் பணம் ரூ.100 லட்சம் கோடி அளவிற்குத் தங்களது நாட்டு வங்கிகளில் குவிந்துள்ளதாகவும், குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பணம் 50 சதவிகிதம் அளவிற்கு (7000 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் டெபாசிட் உயர்வு 2017-ம் ஆண்டு வாடிக்கையாளர்களின் முதலீடுகள் வழியாக 3,200 கோடி ரூபாய், மற்ற வங்கிகளின் மூலமாக 1,050 கோடி ரூபாய், நம்பகமானவர்கள் வாயிலாக 2,640 கோடி ரூபாய் என்ற கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிகம்.

“இந்த முதலீடுகள் அனைத்தும் முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை அல்லது கறுப்புப்பணம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவதில் தாராளக் கொள்கையை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகப்படுத்தினார். 40 சதவிகிதப் பணம் இந்த வகையில் செல்கிறது. இதன்மூலம் தனிநபர், ஆண்டுக்கு 2,50,00 டாலர் கொண்டு செல்ல முடியும். இதனால்கூட டெபாசிட் அதிகரித்திருக்கலாம். ஆனால், முறைகேடான பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு எதிராக நிச்சயம் கடும் நடவடிக்கை இருக்கும்” என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். 

விடாது கறுப்பு!

`நாம்தான் கறுப்புப்பணம் என்றாலே சுவிஸ் வங்கியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டி ருக்கிறோம். உண்மையில் கறுப்புப்பணம் அதிகம் போவது இங்கிலாந்து, அமெரிக்காவுக்குத்தான்’ என்று அதிர வைக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

“தற்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக வெளியிடப்பட்ட தகவல் பெரிதாகப் பேசப்படுகிறது. இந்தத் தகவல் அனைத்தும் பொய். இந்தியாவிலிருந்து ஏராளமான பணம் கொள்ளையடித்துக் கொண்டு செல்லப்படுகிறது. அப்படி இருக்கையில், 7,000 கோடி ரூபாய் என்பது பெரிய விஷயமே இல்லை. நம் ஊரில் சாதாரண அமைச்சரிடமே குறைந்தது 5000 கோடி ரூபாய் கொள்ளையடித்த பணம் இருக்கும். இந்த அடிப்படையில் பார்த்தால் எவ்வளவு பணம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப்பணம் இந்தியாவிலிருந்து சென்று வெளிநாட்டில் குவிந்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம். இந்தியாவிலிருந்து என்னென்ன பொருள்கள் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, என்னென்ன பொருள்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகின்றன என்பது குறித்த தகவல்கள் இருக்கின்றன. அவற்றைப் பொருத்திப் பார்த்தாலே எவ்வளவு பேர் எந்த அளவு பொய்க்கணக்கு தெரிவித்துள்ளார்கள் என்பது தெரிந்துவிடும். அப்படிச் சொல்லப்படும் பொய்க்கணக்கு அனைத்துமே கறுப்புப்பணம்தான். இவ்வாறாகப் பதுக்கப்படும் கறுப்புப்பணமே வருடத்திற்குச் சராசரியாக 50,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். இந்தப் பணமெல்லாம் வெளிநாட்டுக்குப் போய்விட்டு, மீண்டும் இந்தியாவுக்கு வரக்கூடியது. இது தவிர, உள்நாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணமெல்லாம் தனிக் கணக்கு. புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்தியாவிலிருந்து கறுப்புப்பணம் அதிகம் செல்வது சுவிட்சர்லாந்துக்கு அல்ல; இங்கிலாந்துக்குத்தான். மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் அதிகமாகச் செல்கிறது. சுவிட்சர்லாந்தில் 7,000 கோடி ரூபாய் இருப்பதாகச் சொல்வதெல்லாம் ஒரு துளிதான்” என்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.

“கறுப்புப் பண விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அதனைக் கண்காணித்துவருகிறது. ஆனால், எதிர்பார்த்த பலன் வரவில்லை. அரசாங்கத்தினாலோ, அதிகாரிகளாலோ இந்த விஷயத்தில் எதுவுமே செய்ய இயலவில்லை. இதற்கு முந்தைய, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கறுப்புப்பண ஒழிப்பு தொடர்பாக நடவடிக்கை எதுவுமே எடுக்கவில்லை. ஆனால், மோடி அரசு நடவடிக்கை எடுக்க முன்வந்தது. ஆனால், 4 வருடங்களாகியும் கறுப்புப்பண விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு எதுவுமே பெரிதாகச் செய்துவிடவில்லை. இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்றோ, அவர்கள் வைத்திருக்கும் பணமெல்லாம் கறுப்புப்பணம் என்றோ சொல்லிவிட முடியாது. அதேபோன்று உள்நாட்டில் உள்ள பணமெல்லாம் வெள்ளைப்பணம் என்றும் சொல்லிவிட முடியாது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் கடைப்பிடித்து வரும் தாராளமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படையில் சில சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் பலர் தங்கள் பணத்தை வெளிநாடுகளில் வைத்திருக்கலாம்.

இன்றைக்கு ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிவடைந்துள்ளது. 2014-ல் உள்ள ரூபாய் மதிப்பையும் இன்றைய ரூபாய் மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அதிலேயே சுமார் 10 - 15 சதவிகித மதிப்பு குறைவடைந்துள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால், முன்னர் போட்டு வைத்திருந்த தொகையின் மதிப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கும். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர் ஒருவர் தனது பாஸ்போர்ட்டைக் காண்பித்துப் பணம் போடுகிறார் என்றால், அவர் தனது பணம் குறித்து எந்த அதிகாரியின் கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக உள்ளார் என்றுதான் அர்த்தம். ஆனால், சுவிஸ் வங்கிகளில் பணம் போடுபவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்துப் போடுவதில்லை. அதற்கான அவசியமும் சுவிஸ் வங்கிகளில் இல்லை. அந்த வங்கிகளில் எண்களின் அடிப்படையில்தான் (Numbered Account) ஒருவருக்குக் கணக்குத் தொடங்குவார்கள். அதாவது, ஒருவரது பெயரில் அல்லாமல் அவருடைய பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி போன்ற வேறு ஏதாவது ஒன்றின் விவரத்தின் அடிப்படையில்தான் கணக்குத் தொடங்குவார்கள். எனவே, சுவிஸ் வங்கிகளில் பணம் போடுபவர்கள் மேற்கூறிய விவரங்களைத் தெரிவிப்பது என்பது மிலிட்டரி ஹோட்டலுக்குச் சென்று தயிர்சாதம் சாப்பிடுவது போன்றுதான். எனவே, கறுப்புப்பணத்துக்குப் பெயர், முகவரி இருந்தால் அது கறுப்புப்பணமே அல்ல.

 இதுநாள் வரை கறுப்புப்பண ஒழிப்பு தொடர்பாக மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதற்கான பலன்கள் இன்னும் வரவில்லை. அத்துடன் கறுப்புப்பணம் ஒழிப்பு தொடர்பான தாக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல அரசு இன்னும்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார் எம்.ஆர்.வெங்கடேஷ்.

சுவிஸ் வங்கி அறிக்கையும் அதைத்தொடர்ந்து எழுந்திருக்கும் சர்ச்சைகளும் இந்த அரசுக்கான சிறிய நினைவூட்டல். கறுப்புப்பணத்தை முற்றிலும் ஒழிப்போம் என்று சூளுரைத்து அரியணையில் ஏறி நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இப்போதுவரை அரசு கறுப்புப்பண ஒழிப்பில் என்ன செய்திருக்கிறது என்பதைத் திரும்பிப்பார்த்து, தூங்கிக்கொண்டிருக்கிற முயற்சிகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும். இல்லையென்றால், இப்போது அதிகரித்திருக்கிற அளவு அடுத்த ஆண்டு இரட்டிப்பாகும்!

புதிய பணக்காரர்களால் கறுப்புப்பணம் அதிகரித்திருக்கலாம்

ரெஜி தாமஸ்

- பொருளாதார நிபுணர் மற்றும் பங்குச் சந்தை அனலிஸ்ட்

விடாது கறுப்பு!

“ சுவிஸ் வங்கியின் தற்போதைய விதிகளின்படி, அங்கு பணம் டெபாசிட் செய்பவர்கள், தாங்கள் போடும் பணத்துக்கு ஏற்றபடி குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஏனெனில், நெகட்டிவ் வட்டி விகிதத்தில் செயல்படக் கூடிய நாடு அது. சுவிட்சர்லாந்து மட்டுமல்ல, நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட இன்னும் நான்கைந்து நாடுகளும் இதுபோன்று உள்ளன. இந்தியா போன்று வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து சம்பாதிக்கக்கூடிய நாடு அல்ல அது. மாறாக நாம் போடும் பணத்துக்கே கட்டணம் போன்று செலுத்த வேண்டிய நிலை. அப்படி இருக்கையில், உதாரணத்துக்கு ஒருவர் 10 மில்லியன் டாலர் சுவிஸ் வங்கியில் போடுகிறார் என்று வைத்துக்கொண்டால், அவர் அதற்குக் குறைந்தபட்சமாக 2.5 சதவிகிதம் கட்டணமாக  2,50,000 டாலர் செலுத்த வேண்டும். அப்படி அவர்களுக்குக் கட்டணமாகச் செலுத்துவதற்குப் பதிலாக அந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, அதற்குண்டான வரியைச் செலுத்திவிட்டு அந்தப் பணத்தை அனுபவித்துவிட்டுப் போகலாமே? எனவே, அங்குள்ள பணம் எல்லாமே கறுப்புப்பணம் எனச் சொல்ல முடியாது.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டுடன் நாம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 2019-ம் ஆண்டு முதல் இந்தப் பண டெபாசிட் குறித்த தகவல்களை அந்த நாடு இந்தியாவிடம் பகிர்ந்துகொள்ள உள்ளது. அப்படி அந்தத் தகவல் கிடைத்தால் இந்தப் பணம் கறுப்புப்பணமா அல்லது வெள்ளைப்பணமா என்பதும் தெரிந்துவிடும். ஆனால், ரேங்கிங் அடிப்படையில், அதாவது பணம் பதுக்கியவர்கள் பட்டியலின்படி பார்த்தால், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் ரேங்க் ஓரளவு குறைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இன்னொரு பக்கம் செல்வந்தர்கள் குறித்த அறிக்கை (Wealth Report) வெளியாகியுள்ளது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், வரலாற்றிலேயே மில்லியனர்கள் அதிகமாக உருவாகப்போகும் நாடாக இந்தியா இருக்கப்போகிறது என்பதுதான். தற்போது அந்தப் பட்டியலில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்றாலும், இனிமேல் இந்தியா அதில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டுகூட 27% இந்திய மில்லியனர்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மில்லியனர்கள் என்று சொன்னால் அவர்கள் வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்களாகக்கூட இருக்கலாம். அந்த மாதிரியானவர்கள் தங்கள் பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பதில் தவறேதும் இல்லை” என்கிறார் ரெஜி தாமஸ்.

எனக்கு வந்தால் ரத்தம்; உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி

பீட்டர் அல்போன்ஸ்

- தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்

விடாது கறுப்பு!

சுவிஸ் வங்கிகளில் உள்ள பணமெல்லாம் கறுப்புப்பணம் அல்ல என்று தற்போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சொல்கிறார். இது, ‘எனக்கு வந்தால் ரத்தம்... உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி’ என்பதுபோல்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தால் அது கறுப்புப்பணம். ஆனால், பா.ஜனதா ஆட்சியில் இருந்தால் அது வெள்ளைப் பணம். மேலும், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணமும் 14,000 கோடி ரூபாயிலிருந்து 7,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக ஒரு வாதத்தை முன்வைக்கி றார்கள். அப்படி 7,000 கோடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருந்தால் அது எங்கே போனது? ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாகச் சொன்னார்களே? அப்படி யார் கணக்கிலாவது போட்டிருக்கி றார்களா? மேலும் இப்போது சுவிஸ் வங்கிகளுக்குச் சென்றுள்ள 7,000 கோடி ரூபாயை மூலதனம் என்று சொல்கிறார்கள். அப்படியானால், இவர்களுக்குத் தெரியாமல் அந்தப் பணம் போயிருக்காது என்பதால், அது யாருடைய பணம் என்று சொல்ல வேண்டும். ‘சிலரைச் சில நாள்கள் ஏமாற்றலாம், பலரைப் பல நாள்கள் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் எல்லா நாள்களுக்கும் ஏமாற்ற முடியாது’ என்று சொல்வார்கள். பா.ஜனதா தற்போது அந்த நிலையில்தான் இருக்கிறது.