Election bannerElection banner
Published:Updated:

எழுத்தாளர் வரவர ராவ் மகாராஷ்ட்ரா காவல்துறையால் மீண்டும் கைது... #BhimaKoregaon

எழுத்தாளர் வரவர ராவ் மகாராஷ்ட்ரா காவல்துறையால் மீண்டும் கைது... #BhimaKoregaon
எழுத்தாளர் வரவர ராவ் மகாராஷ்ட்ரா காவல்துறையால் மீண்டும் கைது... #BhimaKoregaon

\

தெலுங்குக் கவிஞரும் இடதுசாரி சிந்தனையாளருமான வரவர ராவ், சமூகச் செயற்பாட்டாளர்கள் அருண் பெரீரா, கௌதம் நவ்லஹா, வெர்னோன் கொன்சல்வேஸ் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுதா பாராத்வாஜ் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 


இவர்களிடமிருந்து பிரதமரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுவதற்கான கடிதம் கிடைத்ததாகக் கூறப்பட்டது. ‘ஆர்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் `பிரதமர் நரேந்திர மோடியை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுபோலக் கொலை செய்ய வேண்டும். எம்-4 துப்பாக்கிகள் வாங்க 8 கோடி ரூபாய் வேண்டும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 4 கோடி ரூபாய் வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்ததாக போலீஸ் தெரிவித்தது. 

இந்த ஐந்து பேருக்கும் புனே பீமா கோரேகான் கலவரத்தில் தொடர்பு உள்ளது என்றும், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறது என்றும், மேலும் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், கைதுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு செப்டம்பர் 6-ம் தேதி வரை அவர்களை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. 
இதற்கிடையே, புனே கலவர வழக்கில் வரவர ராவை மகாராஷ்ட்ரா அழைத்துச் சென்று விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. 


`ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிவரும் எங்களின் செயல்பாட்டை ஒடுக்கும் விதமாகத் திட்டமிட்டு, எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. அந்தக் கடிதமும் போலியாகக் காவல்துறையால் ஜோடிக்கப்பட்டுள்ளது” என்று வரவர ராவ், அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், `இந்த வழக்குகளிலிருந்து ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். வரவர ராவ்வை புனே அழைத்துச் செல்ல அனுமதி வழங்கக் கூடாது’ என்றும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், ஜாமீன் மறுத்ததோடு அவரை புனே அழைத்துச் செல்ல அனுமதி வழங்கியது. 

இந்த உத்தரவைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் துணை ஆணையர் பாட்டில் தலைமையில் ஹைதராபாத் காவல்துறை ஒத்துழைப்போடு ராவ் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் இதை எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் போலீஸ் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றது. 


மகாராஷ்ட்ரா துணைநிலை ஆணையர் சுஹாஸ் பவாசே, “ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை உறுதி செய்து, அரசு வழக்கறிஞரிடம் கடிதம் வாங்கிய பின்னரே, அவரைக் கைது செய்தோம். கைதுக்குப் பின் அவரை மருத்துவப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றோம். கைது குறித்து அவரது குடும்பத்தினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் தெரிவித்தோம். சட்டப்படிதான் கைது நடந்துள்ளது” என்றார். 

நவம்பர் 26 வரை காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க, புனே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு