Published:Updated:

`பா.ம.க-வைச் சேர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை!' - சீனியர் நிர்வாகிக்குத் தடைபோடும் தி.மு.க 

``2011 தேர்தலில் அவசரப்பட்டு 31 சீட்டுகளைக் கொடுத்துவிட்டு பிறகு 30 சீட்டுகளாகக் குறைத்தார் கருணாநிதி. அவர்களால் நமக்குப் பெரிதாக வாக்குகள் வரப்போவதில்லை. இறுதியில் பொருந்தாக் கூட்டணி என்ற பேச்சுதான் வரும்!''

`பா.ம.க-வைச் சேர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை!' - சீனியர் நிர்வாகிக்குத் தடைபோடும் தி.மு.க 
`பா.ம.க-வைச் சேர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை!' - சீனியர் நிர்வாகிக்குத் தடைபோடும் தி.மு.க 

`நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். ``தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க இடம்பெற வேண்டும் என்ற திட்டத்தில் சில மா.செ-க்கள் செயல்படுகின்றனர். இந்தக் கருத்தில் ஸ்டாலின் தரப்பு உடன்படவில்லை" என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

திருச்சியில் வரும் டிசம்பர் மாதம் 10-ம் தேதி `தேசம் காப்போம்' என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இந்த மாநாட்டுக்காகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து நிகழ்ச்சி அழைப்பிதழையும் கொடுத்தார். ``காங்கிரஸ் தலைமையிலான அணியில் போட்டியிடுகிறோம் என்பதை முன்னரே முதன்முதலாக உறுதிப்படுத்தியவர் திருமாவளவன். இந்த மாநாட்டின் மூலம் பா.ஜ.க-வுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி பெரியார் திடலில் அவரது பிறந்தநாள் விழா நடந்தது. அப்போது பேசிய திருமா, `இன்று நம்முடைய முதன்மையான கடமை, பா.ஜ.க-வை வீழ்த்துவது ஒன்றுதான். இதில் நமக்கு இடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட அதைப் பொருட்படுத்தாமல் பா.ஜ.க அல்லாத அனைவரும் ஒன்று திரள வேண்டும்' என்றார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் சேர்த்துதான் இப்படியொரு கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, 'பா.ஜ.க-வை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் அணி சேரலாம்' என்பதுதான் இதன் மையப் பொருள். இந்தப் பேச்சை உறுதிப்படுத்துவதுபோல, தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெறுவது தொடர்பான விவாதம் எழுந்துள்ளன" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

``பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் எனச் சில தி.மு.க மா.செ-க்கள் பேசி வருகின்றனர். அவர்களது நோக்கம், இந்தக் கூட்டணியிலிருந்து வி.சி.க-வைக் கழற்றிவிட வேண்டும் என்பதுதான். `பா.ஜ.க அல்லது காங்கிரஸ் என ஏதாவது ஒரு தேசியக் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்' என்பதுதான் அன்புமணியின் நிலைப்பாடு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வடமாவட்டங்களில் ஐந்து சதவிகித வாக்குகளை பா.ம.க வாங்கியிருந்தது. `முதல்வர் வேட்பாளர் அன்புமணி' என்ற முழக்கத்தோடு களமிறங்கியதால் கிடைத்த வாக்குகள் இவை. `நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த வாக்குகளில் சரிவு ஏற்படலாம்' என பா.ம.க நினைக்கிறது. அதனால்தான், `கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தனர். தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வருவதை வடபுலத்தைச் சேர்ந்த தி.மு.க-வின் சீனியர் நிர்வாகி ஒருவரும் சில மா.செ-க்களும் விரும்புகின்றனர். ஆனால், இந்த முயற்சிக்கு ஸ்டாலின் தரப்பில் கிரீன் சிக்னல் வழங்கப்படவில்லை. 

இதுதொடர்பாக ஸ்டாலின் தரப்புக்கு விவரித்த ஆலோசனைக் குழுவின் நிர்வாகி ஒருவர், `கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை முதல்வராக முன்னிறுத்தித்தான் பிரசாரம் செய்தோம். தற்போதுள்ள சூழலில் நம்மை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு பொதுத் தொகுதிகளில் நான்கரை சதவிகித வாக்குகளை வாங்கியது பா.ம.க. நமது கூட்டணிக்குள் வந்தால் இந்த ஆறு தொகுதிகளையும் அவர்கள் கேட்பார்கள். இந்தத் தொகுதிகளில் உள்ள நமது வாக்குகளும் அவர்களுக்குச் சென்று சேரும். இதனால் நமக்கு எந்தவித நன்மைகளும் இல்லை. திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பரப்புரையில்தான் இந்த வாக்குகளை ராமதாஸ் வாங்கினார். இதனால், அவர்களது சமூக வாக்குகள் அனைத்தும் நமக்கு வரும் என எதிர்பார்க்க முடியாது. தர்மபுரி இளவரசன் மரணத்துக்குப் பிறகு, அட்டவணை சமூக மக்கள் பா.ம.க-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இவர்களை நமது அணியில் சேர்த்துக் கொண்டால், எஸ்.சி மக்களின் வாக்குகளும் நமக்கு வந்து சேருவதற்கு வாய்ப்பில்லை' என்றவர், 

`2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நமது ஆட்சிக்கு ஜீரோ மதிப்பெண் கொடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் கூட்டணிக்கு வந்தது பா.ம.க. அதனால்தான் நம்முடைய ஓட்டுகளும் அவர்களுக்குப் போகவில்லை. அவர்களது வாக்குகளும் நமக்கு வந்து சேரவில்லை' எனக் கூறியிருக்கிறார். ஆனால், இதை ஏற்காத தி.மு.க-வில் உள்ள சில மா.செ-க்களோ, `நமது கூட்டணியில் வி.சி.க இருப்பது நல்லதல்ல. வி.சி.க-வைச் சேர்த்தாலும் கருணாநிதிக்காக நம்பக்கம் நின்ற வன்னியர்கள், இந்த முறை நம் பக்கம் நிற்க மாட்டார்கள். வன்னியர்களுக்கு எதிரானவர் ஸ்டாலின் என்ற பிம்பமும் உள்ளது' எனப் பேசியுள்ளனர். இதை ஏற்காத ஆலோசனைக்குழு நிர்வாகி ஒருவர், `இப்படியொரு கூட்டணியை விரும்புவதே கட்சியின் முக்கியமான அந்த சீனியர்தான். அவருக்கு ஏதோ எதிர்காலத் திட்டம் இருக்கிறது. பா.ம.க விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2011 தேர்தலில் அவசரப்பட்டு 31 சீட்டுகளைக் கொடுத்துவிட்டு பிறகு, 30 சீட்டுகளாகக் குறைத்தார் கருணாநிதி. அவர்களால் நமக்குப் பெரிதாக வாக்குகள் வரப்போவதில்லை. இறுதியில் பொருந்தாக் கூட்டணி என்ற பேச்சுதான் வரும். சிலர் தங்களுடைய சுயநலத்துக்காக இதுபோன்ற திட்டங்களை முன்வைக்கிறார்கள்' எனக் கூறியுள்ளனர். இதுதொடர்பான விவாதம், இப்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை" என்றார் விரிவாக. 

அதேநேரம், தி.மு.க கூட்டணியை அன்புமணி தரப்பினர்தான் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ராமதாஸ் உடன்படவில்லை என்கின்றனர் பா.ம.க வட்டாரத்தில். "இந்தக் கூட்டணி தேவையில்லை. கருணாநிதியை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட நான், ஸ்டாலினை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தை ஏற்று மேடை ஏறாமல் தனித்துப் பிரசாரம் செய்தது போலத்தான் இந்தமுறையும் நடக்கும்" என ராமதாஸ் கொதிப்பில் இருப்பதாகவும் சொல்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்.