Published:Updated:

சர்ச்சைக்குள்ளான தாஜ் மஹால் வழிபாடு - அதிகரித்த பாதுகாப்பு

சர்ச்சைக்குள்ளான தாஜ் மஹால் வழிபாடு - அதிகரித்த பாதுகாப்பு
சர்ச்சைக்குள்ளான தாஜ் மஹால் வழிபாடு - அதிகரித்த பாதுகாப்பு

உலக அளவில் இந்தியாவின்  அடையாளமாக விளங்குகிறது தாஜ் மஹால். அதன் மீதான சர்ச்சைகளும் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தாஜ் மஹாலுக்குச் சென்று தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்து அமைப்பைச் சார்ந்த பெண்கள் சிலர் கங்கைத் தீர்த்தம் தெளித்தும் ஊதுவத்தி ஏற்றி பூஜை செய்வது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.

அயோத்தியில் பாபர் மசூதி விவகாரத்தில் சர்ச்சை நீடிப்பதைப் போலவே, தாஜ் மஹால் முதலில் சிவன் கோயிலாக இருந்தது என சில இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகதான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் தாஜ்மஹாலுக்குள் நுழைந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக தங்கள் கையில் வைத்திருந்த பொருள்களை வைத்து பூஜைகளை நடத்தினர். அந்திராஷ்டிர இந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவரான மீனா தேவி திவாகர் இது குறித்து குறிப்பிடும்போது, `` முஸ்லிம்களுக்கு எல்லா நாள்களும் தாஜ்மஹாலுக்கு சென்று தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதுபோல, எங்களுக்கும் பூஜைகள் நடத்த அனுமதி வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் என இரு மதங்களைச் சார்ந்தவர்களும் அதிகமாக வசிக்கின்றன. அங்கு நடந்தேறிய இந்தச் சம்பவம்  மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தாஜ் மஹாலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.