சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்!”

“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்!”

த.கதிரவன் - படம்: ப.சரவணகுமார் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

#GobackAmitShah - ‘பா.ஜ.க-வின் பிக்பாஸ்’ அமித்ஷாவையும் விட்டுவைக்கவில்லை தமிழக நெட்டிசன்கள்!

இணையதளங்கள்தாம் இப்படி இடையூறு செய்கிறதென்றால், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயும் தலைமைப் பதவியைக் குறிவைத்துத் தகராறுகள் வரிசை கட்டுகின்றன. இந்நிலையில், ‘தமிழக பா.ஜ.க-வின் பிக்பாஸ்’ அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் ‘தாமரையை மலர வைக்கும் திட்டங்கள்’ குறித்து விசாரித்தோம்....

“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்!”

‘‘அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மறைமுகக் கூட்டணி அமைத்துச் செயல்படுகிறது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?’’

‘‘தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கு எப்போதெல்லாம் பிரச்னைகள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் தி.மு.க மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சியான தி.மு.க., ஆளுங்கட்சிக்குக் கடும் நெருக்கடி கொடுக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், சத்தமே இல்லாமல், தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்துவிட்டனர். அதன்பின்னரும் சட்டசபைக்குச் செல்லாமல், ‘மாதிரி சட்டமன்றம்’ எனக்கூறி ஒரு வாரம் நாடகம் நடத்தினார்கள்.

பின்னர், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றிய சூடு தணிந்தபிறகு மீண்டும் சட்டசபைக்குள் வருகிறார்கள். அதன்பின்னரும்கூட, அரசை இக்கட்டான நிலைமைக்கு உள்ளாக்கும்வகையில் எந்தவொரு பிரச்னையிலும் தி.மு.க கேள்வி கேட்கவில்லை!’’

‘‘துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அ.தி.மு.க அரசைக் கண்டித்து, தலைமைச் செயலகத்திலேயே தி.மு.க-வினர் தர்ணாப் போராட்டம் நடத்தினார்களே?’’


‘‘தர்ணாப் போராட்டம் நடத்துவதற்காகவா எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கொடுத்து மக்கள் இவர்களைச் சட்டசபைக்குள் அனுப்பிவைத்தார்கள்? ஒவ்வொரு முறையும் இவர்கள் தர்ணாப் போராட்டம் நடத்துவதும், தொட்டில் கட்டிவைத்தது மாதிரி போலீஸார் தூக்கிக்கொண்டு வந்து வெளியே போடுவதுமாக... இந்தக் கண்துடைப்பு வேலைகளையே எத்தனை நாள்களுக்குச் செய்துகொண்டிருப்பீர்கள்?

இதுமட்டுமல்ல... பரிகாரத்துக்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மு.க.ஸ்டாலின் சென்றார் எனச் சொல்கிறார்கள். அங்கேயும்கூடத் தனது நெற்றியில் தெய்வச் சின்னத்தை இடுவதற்கு அனுமதி அளித்த ஸ்டாலின், உடனே அந்தச் சின்னத்தை அழித்து தெய்வத்தையே அவமரியாதை செய்கிறார். இதே தவற்றை வேறு யாராவது செய்திருந்தால், கோயில் நிர்வாகம் - இந்து அறநிலையத் துறையைக் கையில் வைத்திருக்கும் அ.தி.மு.க அரசாங்கம் அவர்களை சும்மா விட்டிருப்பார்களா?

இப்படி தி.மு.க - அ.தி.மு.க இடையிலான இந்த அனுசரிப்புகளுக்கான பின்னணி என்னவென்றுதான் நான் கேட்கிறேன்.’’

‘‘எல்லாம் வல்ல இறைவனை மனிதனால், அவமானப்படுத்த முடியுமா? ‘தெய்வத்துக்கே பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று நீங்கள் சொல்வதே இறைவனை அவமானப்படுத்துவதாகாதா?’’

‘‘அதாவது, தெய்வத்தை யாரும் அசிங்கப்படுத்த முடியாது... ஆனால், அவமானப்படுத்த முடியும்! எந்த மதத்தைச் சேர்ந்த கடவுளும் ‘எனக்கு இந்த மரியாதை வேண்டும்’ என்று கேட்பதில்லை. ஆனாலும் அவரவர் மதத்துக்கு ஏற்றபடி தெய்வத்துக்குச் செய்யக்கூடிய மரியாதையைச் செய்து வருகிறார்கள். அந்த மரியாதையை அவமானப் படுத்தும்போது, அது தெய்வத்தையே அவமானப்படுத்திவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். அதையேதான் நானும் சொல்கிறேன்... ‘பரிகாரம் தேடிப்போன மு.க.ஸ்டாலின், பரிகாரம் செய்யவேண்டிய நிலைமைக்கு சாமியைக் கொண்டுவந்து விட்டுவிட்டார்’ என்று.’’

‘‘தமிழிசை சௌந்தர்ராஜனின் தலைவர் பதவி நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக பா.ஜ.க-வுக்குள்ளேயே பலத்த எதிர்ப்புகள் கிளம்புகின்றனவே..?’’

‘‘இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் இறுதி முடிவு.’’

‘‘ ‘டி.வி பேட்டிகளுக்கு மட்டும்தான் தமிழிசை தலைவர். அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கட்டுப்பாட்டில்தான் தமிழக பா.ஜ.க செயல்படுகிறது’ என்கிறார்களே..?’’


‘‘பா.ஜ.க-வின் நடைமுறை என்ன என்பது எங்கள் கட்சியில் அனைவருக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரையில், கட்சி நிர்வாகத்தில் நான் தலையிட்டதே கிடையாது.’’

“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்!”

‘‘அத்திக்கடவு அவினாசித் திட்டம், இனயம் துறைமுகம் போன்ற திட்டங்கள் எல்லாம் கிடப்பில் கிடக்கும்போது, ‘சேலம் டு சென்னை எட்டு வழிச்சாலை’ திட்டத்தைச் செயல்படுத்துவதில் மட்டும் இவ்வளவு அவசரம் ஏன்?’’

‘‘அங்கே இருக்கக்கூடிய போக்குவரத்து நெருக்கடியை வைத்து, திட்டத்தை வேகப் படுத்தியிருப்பார்கள். என்னைப் பொறுத்த வரையில், கன்னியாகுமரி துறைமுகத் திட்டம் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று. அதற்காக ‘எட்டுவழிச்சாலை கூடாது’ என்பதல்ல... அதுவும் வேண்டும்.’’

‘‘மத நம்பிக்கையைக் கூறி ‘சேதுசமுத்திரத் திட்ட’த்துக்குத் தடைகோரும் பா.ஜ.க., ரத்தமும் சதையுமான மக்கள் போராட்டங்களை அலட்சியம் செய்து, எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பது நியாயம்தானா?’’

‘‘சேது சமுத்திரத் திட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், அதுகுறித்து விரிவாகப் பேசமுடியாது. அவரவர் மதத்தினருக்கான நம்பிக்கைகள் என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை உதாசீனப்படுத்துவதற்கோ அல்லது கொச்சைப் படுத்துவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது.

ராமர் பாலத்தைப் பற்றி இன்றைக்கு அமெரிக்க விஞ்ஞானிகள்கூட ஆராய்ச்சி செய்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட விஷயத்தைத் தகர்ப்பதற்கு நமக்கு எப்படி உரிமை இருக்க முடியும்?’’

‘‘ஜனநாயக அமைப்பான ‘மக்கள் அதிகார’த்தையே ‘பயங்கரவாதிகள்’ என்கிறீர்கள். உங்கள் அகராதியில் பயங்கரவாதிகள் என்றால் என்னதான் அர்த்தம்?’’

‘‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் அமைப்புகள் எல்லாமே பயங்கரவாத அமைப்புகள்தான்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், காவல்துறை, நீதிமன்றம் மற்றும் தலைவர்கள்மீது நம்பிக்கை இழக்க வைப்பது, புதிய திட்டங்கள் வரவிடாமல் பார்த்துக் கொள்வது, ‘தொழிற்சாலைகள் அழிவை ஏற்படுத்துபவை’ எனப் பிரசாரம் செய்து முடக்குவது, புதிய தொழிற்சாலைகளை வரவிடாமல் தடுப்பது, அந்நிய சக்திகளுக்கு பலம் கொடுக்கக்கூடிய வகையில் உள்நாட்டிலேயே செயல்பட்டுக் கொண்டிருப்பது, மக்கள் விழிப்படைந்துவிடக் கூடாது எனத் தொடர்ந்து பொய்யான வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருப்பது, இதன் மூலம் மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி, அதன் தொடர்ச்சியாக, ‘இனி புரட்சி செய்தால்தான் நன்மை உண்டாகும்’ என்ற மனப்பான்மையை இளைஞர்களிடையே உருவாக்கி, தங்களின் மோசமான திட்டங்களுக்குள் மக்களைக் கொண்டு வருவது போன்ற வேலைகளைச் செய்துவருபவர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள்தான்!’’

‘‘தமிழகத்தில் பா.ஜ.க நேரடியாக ஆட்சி செய்யாத சூழ்நிலையிலும்கூட, பா.ஜ.க பிரமுகரான எஸ்.வி. சேகரைக் கைது செய்ய காவல்துறை தயங்குகிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்னவாகும் என்பதற்கு இதையே ஒரு சோற்றுப் பதமாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?’’


‘‘இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது. தமிழகத்தில், காவல்துறையை யார் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறாரோ அவரிடம் கேட்க வேண்டும்.எஸ்.வி. சேகரைக் கைது செய்யக்கூடாது என்று நாங்கள் எங்காவது சொல்லியிருக்கிறோமா?’’

‘‘பெரியாரியத்தின் பகுத்தறிவுத் தத்துவங்களும் திராவிடக் கட்சிகளின் செல்வாக்கும்தான் தமிழகத்தில், பா.ஜ.க காலூன்றத் தடையாக இருக்கின்றனவா?’’

‘‘இப்படி இதுநாள்வரையிலும் தடை இருப்பதாக நம்பப்பட்ட விஷயங்கள் அனைத்தும் வீண் பழிச்சொல் என்று நிரூபிக்கப்பட்டு உடைத்தெறியப்பட்டு விட்டது.

எது பகுத்தறிவு..? இறை நம்பிக்கையை ஒழித்துக்கட்டிவிட்டவர்களுக்கு மனசாட்சி கிடையாது; எப்படி வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம். அடுத்தவன் செத்தாலும் பரவாயில்லை, தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதைத்தானே இங்குள்ள திராவிடக் கட்சிகள் பகுத்தறிவுக் கொள்கை களாக வைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழைச் சொல்லிப் பிழைத்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற இயக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டியவை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். எனவே, திராவிட இயக்கச் சிந்தனைகள் ஒழிக்கப்பட வேண்டும்!’’

‘‘தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் தவறு செய்யத் துணிந்தவர்கள் என்கிறீர்கள். சிறைச்சாலைக் கைதிகளில் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கை கொண்டவர்கள்தானே..?’’


‘‘இல்லை... தமிழகத்தில் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று கணக்கிட்டால், ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே இருப்பார்கள். ஆனால், இதே விகிதாசாரப்படி சிறைச்சாலைக்குள் கணக்கிட்டால், தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கையானது மூன்று அல்லது நான்கு விழுக்காடாக இருக்கும். இதைச் சவால் விட்டே சொல்கிறேன்! ஏனெனில், அவர்களுக்குப் பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கிடையாது.’’

‘‘ ‘கோ பேக் மோடி’யைத் தொடர்ந்து ‘கோ பேக் அமித்ஷா’வும் டிரெண்டிங் ஆகியிருக்கிறதே. அப்படியானால் தமிழர்கள் பா.ஜ.க-வை வெறுக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?”

“திராவிடக் கட்சிகளின் ஊழல் ஆட்சியால் தமிழகத்தில் இருள் சூழ்ந்திருக்கிறது. எனவே இவர்களுக்கு வெளிச்சத்தைக் கண்டு பயம். தர்மத்தின் ஆட்சியை பா.ஜ.க கொண்டு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே திட்டமிட்டுச் செயற்கையான டிரெண்டிங்கை உருவாக்குகிறார்கள்.”