Published:Updated:

“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்?” - சீறிய எடப்பாடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்?” - சீறிய எடப்பாடி
“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்?” - சீறிய எடப்பாடி

“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்?” - சீறிய எடப்பாடி

பிரீமியம் ஸ்டோரி

“ஜெயலலிதா வீட்டில் தங்கி இருந்தவர்களின் துணையுடன், கொல்லைப்புறமாக வந்தவர்தான் தினகரன். அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்? கட்சிக்காக நான் ஆறு முறை சிறை சென்றவன். தினகரன், கட்சிக்காகச் சிறை சென்றுள்ளாரா? வேறு ஏதும் பேட்டிகள் இல்லாத காரணத்தால், ஊடகத்தினர் எப்போதும் தினகரனின் பேட்டியைப் போடுகிறீர்கள். அவரை ஒரு பெரிய தலைவர் போலவும், நாட்டுக்கு பல திட்டங்களைக் கொண்டுவந்தவர்போலவும் காட்டுகிறீர்கள்” என்று மதுரை நிகழ்ச்சியில் மீடியாக்கள்மீது பாய்ந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா ஜூலை 15-ம் தேதி விருதுநகரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார் என்று தெரிந்ததும், மதுரையில் தனித்தனியாக சில நிகழ்ச்சிகளுக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார்கள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமாரும் செல்லூர் ராஜுவும். மதுரை பாண்டி கோயில் திடலில் பிரமாண்டமான சைக்கிள் பேரணிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அதைத் தொடங்கிவைத்துப் பேசியபோதுதான், தினகரனை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி. “நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரப் பயணத்தை மதுரை மண்ணிலிருந்து தொடங்கிவிட்டோம். நாம் கேட்காமலேயே தற்போது தண்ணீர் கிடைக்கிறது. பெய்யும் மழையால் அணைகள் நிரம்பியுள்ளன. இதுவே நம் வெற்றிக்கு எடுத்துக்காட்டு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நமக்கு வெற்றி கிடைக்க இயற்கையே உதவிசெய்கிறது’’ என்றார் எடப்பாடி உற்சாகத்துடன். அந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாம் ஒன்றாக இணைந்து கழகத்தையும், ஆட்சியையும் தொண்டர்களின் வழிகாட்டுதலுடன் நடத்திவருகிறோம். நமக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றார்.

“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்?” - சீறிய எடப்பாடி

மதுரை பைபாஸ் சாலையில் ரூ.54 கோடி செலவிலான புதிய மேம்பாலத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இது அமைச்சர் செல்லூர் ராஜு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுடன் எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் சிரித்துப் பேசினார்கள். பரவையில் செல்லூர் ராஜுவால் கட்டப்படவுள்ள மாநகர அ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்கும் எடப்பாடி அடிக்கல் நாட்டினார். இந்த இரண்டு மணி நேர நிகழ்ச்சிக்காக ஃப்ளெக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், மைக் செட் அலறல்கள் என்று மதுரையைத் திணறவைத்துவிட்டார் செல்லூர் ராஜு.

‘விருதுநகர் நிகழ்ச்சிக்குப் போயிட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம்னு பாத்தா, இவங்க ரெண்டு பேரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செஞ்சு இம்சை பண்றாங்க...’ என எடப்பாடி நொந்துகொண்டாராம்.

விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் நடத்திய கல்வித்திருவிழாவில் கலந்துகொண்ட முதல்வர், ‘‘இன்று அரசியலுக்கு வருவோர், காமராஜரின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். ‘பெண்ணை மணக்காமல், மண்ணை மணந்தவர்’ என்று சொல்லி காமராஜருக்கு வாலி பெருமை சேர்த்துள்ளார். கொங்கு மண்டலத்தில், காமராஜருக்கு நல்ல மதிப்பு உண்டு. காரணம், அனைத்து கிராமங்களிலும் பள்ளிகளை ஏற்படுத்தி, பலர் படித்துச் சிறப்பு பெறக் காரணமாக இருந்தவர் காமராஜர். நானும் கிராமத்தில் பிறந்தவன். அந்தச் சிறப்புக்கு உரியவர்களில் நானும் ஒருவன்’’ என்றார். அந்த நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனையாளர் விருதை பி.ஹெச்.பாண்டியனுக்கு எடப்பாடி வழங்கினார்.

“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்?” - சீறிய எடப்பாடி

விருதுநகரில் காமராஜர் மணி மண்ட பத்துக்கோ, காமராஜர் வாழ்ந்த வீட்டுக்கோ எடப்பாடி செல்லவில்லை. மாறாக, மகாஜன சங்க விழாப் பந்தலில் வைக்கப்பட்ட காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

அ.தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது, “சைக்கிள் பேரணியில் பங்கேற்கும் அனைவ ருக்கும் புத்தம் புதிய சைக்கிளும் சீருடையும் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. சைக்கிள்களில் மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்யும் அவர்களுக்கு, தினமும் மூன்று வேளை உணவும், தினப்படி 500 ரூபாயும் வழங்கப்படுகின்றன. இதற்காக, ரூ.50 லட்சம் செலவுசெய்கிறாராம் ஆர்.பி.உதயகுமார்” என்றனர்.

முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளையொட்டி, அனைத்து நாளிதழ்களிலும் முழுப் பக்க விளம்பரம் கொடுத்திருந்தார் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன்.

சென்னை-சேலம் எட்டுவழி பசுமைச்சாலை போலவே, மதுரையில் அமைய உள்ள நான்குவழிச் சாலைக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நான்குவழிச் சாலைக்காக, தங்கள் பகுதியில் விவசாய நிலங்களை எடுப்பதால், முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரைக்கு அருகிலுள்ள பண்ணைப்பட்டி என்ற ஊரில், மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியிருந்தனர். காவல்துறையினர் அந்த ஊருக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

- செ.சல்மான், அருண் சின்னதுரை
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், வி.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு