பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

எஸ்.வெங்கட்ராமன், கோவை.

பேரிடர் மேலாண்மைப் பயிற்சி என்று சொல்லி, கோவை கல்லூரியில் அநியாயமாக ஒரு மாணவியைச் சாகடித்துள்ளார்களே?


கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவி லோகேஸ்வரி பயத்தில் மறுத்தபோதும், அவரை பயிற்சியாளர் ஆறுமுகம் இரண்டாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டது கொலைக்குற்றத்துக்கு ஈடான கொடூரம். இந்தப் பயிற்சியைத் தருவதற்குப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திடமிருந்து அனுமதி பெற்றதாக, கல்லூரி நிர்வாகம் ஒரு கடிதத்தைக் காண்பிக்கிறது. ஆனால், ‘எங்களுக்கு இப்படி பயிற்சி நடப்பது குறித்துத் தெரியாது’ என்கிறது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட கலெக்டர், காவல்துறை, தீயணைப்புத்  துறை என எல்லோரும் சொல்லிவைத்தது போல இதே பதிலைச் சொல்கிறார்கள். இப்படி கல்லூரிக்குள் நடப்பது எதுவுமே யாருக்குமே தெரியாது என்கிறார்களே... இப்படி ஒரு கல்லூரி இருப்பதாவது அரசுக்குத் தெரியுமா?

நடராஜன், சென்னை-62.

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி?


தமிழக அரசின் எதிர்ப்பு ‘நானும் ரவுடிதான்’ என்று வடிவேலு பேசும் வசனத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. உண்மையில், அதை இவர்கள் எதிர்க்கிறார்களா என்று தெரியவில்லை. காவிரி விஷயத்தில், கர்நாடக மற்றும் தமிழகத்தில் காவிரி மற்றும் கிளையாறுகளின் குறுக்கே உள்ள அணைகளின் கட்டுப்பாட்டைக் காவிரி மேலாண்மை வாரியத்தின் (ஆணையம்) பொறுப்பில் விடவேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதே மத்திய அரசு, அதை ஏற்கவில்லை. இப்போது மட்டும், அணைகள் பாதுகாப்பு என்கிற பெயரில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருக்கும் அணைகளின் பொறுப்புகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏற்பாடு செய்கிறார்கள்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், ‘இந்தியாவின் நீர்க்கொள்கை’ என்கிற பெயரில் விவசாயத்துக்கான தண்ணீருக்கும் ரேஷன் வைப்பதுபோலப் பல்வேறு விதிமுறைகளை உருவாக்கினார்கள். இதன்மூலமாகத் தண்ணீரையும் தனியார் மயமாக்கும் வேலைகள் தொடங்கின. அவர்களால் நிறைவேற்ற முடியாததை, தற்போது பி.ஜே.பி நிறைவேற்றப் பார்க்கிறது. நதிகளைத் தனியார் பொறுப்பில் விட்டத் தென் அமெரிக்க நாடுகளின் கதி தெரிந்திருந்தும், இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றப் பார்ப்பது... தற்கொலைக்குச் சமமானதே!

கழுகார் பதில்கள்!

வி.நிகமத் அலி, அடியக்கமங்கலம்.

ஜெயலலிதா மரணத்துக்குப்பின் செல்லூர் ராஜு அல்லது திண்டுக்கல் சீனிவாசன் இவர்களில் யாராவது ஒருவர் முதல்வராகி இருந்தால்?


அட, என்ன ஓர் அற்புதமான யோசனை. இது நிறைவேறாமல் போய்விட்டதே! தமிழகமே தினம் தினம் காமெடி சேனலை மிஞ்சும் காட்சிகளை ‘லைவ்’வாகப் பார்த்துக் குதூகலித்திருக்கும். நாட்டில் நடக்கும் அநியாய, அக்கிரமங்களையெல்லாம் மக்கள் மறக்கவும் வாய்ப்பாக இருந்திருக்கும். மீதி இருக்கும் நாள்களுக்கு இந்த இருவரில் ஒருவரை முதல்வராக்க, கவர்னர் பன்வாரிலாலுக்கு சிபாரிசு செய்வோம்.

காந்திலெனின், திருச்சி.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு என்ன மாதிரி அரசியல் தேவைப்படுகிறது?

எப்போதைய சூழலிலும் நல்அரசியல்தான் தேவை. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பிருப்பதுபோலத் தெரியவில்லை. கொள்கைகளையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்ட அரசியல் கட்சிகள்தான் பெரும்பாலும் களத்தில் நிற்கின்றன. புதிதாகப் புறப்பட்டு வந்தவர்களும் நம்பிக்கை தரவில்லை. கமல்ஹாசனையே எடுத்துக்கொண்டால், முதலில் தி.மு.க-வுடன் நெருக்கம் காட்டினார்; தற்போது காங்கிரஸ் பக்கம் தாவியிருக்கிறார்; கூடவே, கம்யூனிஸ்ட்களையும் தொட்டுக்கொள்கிறார்; பி.ஜே.பி-யையும் பெரிதாகப் பகைத்துக்கொள்வதில்லை. ‘எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று திராவிடக் கட்சிகளை அன்று காமராஜர் சொன்னார். அது, இன்று அனைத்துக் கட்சிகளுக்குமே பொருந்துகிறது. 

கழுகார் பதில்கள்!

கே.எஸ்.ராகவன், கும்பகோணம்.

‘மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், நாடு இந்து பாகிஸ்தானாக மாறும்’ என காங்கிரஸின் சசி தரூர் கூறுகிறாரே?

அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. உலக அளவில் கடுமையாக விமர்சிக்கப்படும் பாகிஸ்தானிலேயே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரின் மகளும் தண்டிக்கப்பட்டுள்ளார். இங்கே அப்படியா இருக்கிறது? அப்படி இருந்திருந்தால், இந்நேரம் இவரும் இவர் கட்சியின் தலைவர்கள் பலருமே உள்ளே அல்லவா போயிருப்பார்கள்?

அடடே... கேள்வியை நான் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை போலிருக்கிறதே!

எ.இந்திரன், சென்னை-62.

பெரும்பாலும் வங்கி மோசடி மற்றும் கொள்ளைகளுக்கு, சம்பந்தப்பட்ட வங்கி உயரதிகாரிகளே காரணமாக இருக்கிறார்களே... இனி வங்கிகளை நம்பமுடியுமா?


பூட்டை உடைத்து வங்கியில் கொள்ளை என்கிற செய்திகள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டன. கொள்ளையர்களுடன் அதிகாரிகளும் கைகோத்துக்கொண்டதுதான் காரணம். ‘அப்பா ஏற்கெனவே கடன் பாக்கி வைத்திருப்பதால், மகளுக்குக் கல்விக் கடன் கொடுக்க முடியாது’ என்று நீதிமன்றம் வரை போய் சட்டம் பேசுகின்றன வங்கிகள். இதே வங்கிகள்தான், எந்த உத்தரவாதமும் கோராமல் ஆயிரமாயிரம் கோடிகளை சில நபர்களுக்கு மட்டும் அள்ளிக்கொடுக்கின்றன. திருப்பித் தரும் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல், திரும்பத் திரும்பக் கொடுக்கின்றன. அவர்களில் பலரும் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும்வரை வேடிக்கை பார்த்துவிட்டு, பிறகு புகார் படிக்கின்றன.

எளிய மக்களுக்கு வங்கிகள்மீது இருக்கும் நம்பிக்கை இப்போது காணாமல் போயிருக்கிறது. ஆனாலும், நமக்கு வேறு வழியில்லை. வங்கிப் பரிவர்த்தனை இல்லாத வாழ்க்கை இனி இருக்கவே முடியாது என்கிற சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. அவர்களோடுதான் நாம் குப்பை கொட்டியாக வேண்டும்.

கே.எஸ்.மதியழகன், ஆற்காடு.

உச்ச நீதிமன்றத்தின் அன்றாட அலுவல்களை நேரடி ஒளிபரப்பு செய்ய தலைமை நீதிபதி ஒப்புதல் கொடுத்துள்ளாரே?


நல்ல விஷயமே. ஆனால், இது இத்துடன் நிறுத்தப்படக்கூடாது. கேரள முதல்வரின் அறைக்குள் நடக்கும் கூட்டங்கள், பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை நேரடி ஒளிபரப்பில் மாநில மக்கள் பார்க்க முடியும். ஆனால், இங்கே முதல்வரின் அறைக்குள் என்ன நடக்கிறது என்பது அமைச்சர்களுக்கே தெரியாது. ஜெயலலிதா போய் எடப்பாடி பழனிசாமி வந்தபிறகும்கூட, இதுதான் நிலைமை. பல மாநிலங்களில் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இதைச் செய்ய ‘நிதி இல்லை’ எனக் காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது அரசு. ஆந்திராவில் எல்.இ.டி திரையில் ஒளிபரப்பி, வெளிப்படையாக டெண்டர் விடுகிறார்கள்.  
 
அனைத்து நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் என அனைத்து அரசு அலுவலகங் களிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அரசு சார்ந்த முக்கியமான நிகழ்வுகள், முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டங்கள் எல்லாம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவேண்டும். இப்படிப்பட்ட வெளிப்படையான நடைமுறைகள் தான், தவறுகளையும் ஊழல்களையும் தடுக்கும்.

கழுகார் பதில்கள்!

ப பாலசுப்பிரமணியம், தத்தமஞ்சி.

முதலமைச்சர் எடப்பாடியாரின் ராசி நிறம் நீலமோ? புதிய பேருந்துகள், அரசுப் பள்ளிகளின் சீருடை என பலவும் தற்போது நீல நிறத்துக்கு மாறுகின்றனவே. ஜெயலலிதாவின் பச்சை நிறத்தை மறைப்பது, பச்சைத் துரோகமல்லவா?

நீங்கள் பொய்யா சொல்லப்போகிறீர்கள்!

சாந்தி மணாளன், கருவூர்.

தமிழக லோக் ஆயுக்தா, வடிவேலுவின் சூனா பானா போல ஆகிவிட்டதே?


ஆடுகளைத் திருடிய வடிவேலு, யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காக ஊர்ப்பஞ்சாயத்தில் நிகழ்த்தும் காமெடிக் காட்சிகள் மனக்கண்ணில் வந்து வந்து மறைகின்றன. கோர்ட் சொன்னதால் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றவும் வேண்டும்; ஆனால், அந்தச் சட்டப்பிரிவுகளில் சிக்கியும் கொள்ளக்கூடாது என்பதற்காக ‘கடுமை’யாகவே உழைத்துள்ளனர். இந்தப் பஞ்சாயத்தைக் கலைக்க பட்டபாடு, இந்த சூனா பானாக்களுக்குத்தானே தெரியும்!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு