Published:Updated:

``இதுதானா உங்க `டக்'கு மிஸ்டர் எடப்பாடி?''

``இதுதானா உங்க `டக்'கு மிஸ்டர் எடப்பாடி?''
``இதுதானா உங்க `டக்'கு மிஸ்டர் எடப்பாடி?''

``எந்த அரசும் செய்யாத சாதனையைச் செய்துள்ளது, அம்மாவின் வழியில் செயல்படும் எனது அரசு. கஜா புயல் பாதித்த பகுதிகள் அனைத்துக்கும் நிவாரண உதவிகள் உடனடியாகப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் குறைசொல்கின்றன. கேரளாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் நிவாரணப் பணிகளில் இணைந்து பணியாற்றின. இங்கே அந்த நிலை இல்லை....'' என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கஜா புயலின் கோரத்தாக்குதலால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள், குறிப்பாக 6 மாவட்டங்களில் கருமாதி நடந்து கொண்டிருக்கும்போது, சொந்த மாவட்டமான சேலத்தில் போய் உற்சாகமாக பல நிகழ்ச்சிகளிலும் வெள்ளை வேட்டி மடமடக்க பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஐந்து நாள்களுக்குப் பிறகு கருமாதி வீடுகளை எட்டிப்பார்க்க வந்திருக்கிறார்...இப்படி வாய் திறந்திருக்கிறார்.

வியாழன் நள்ளிரவு தொடங்கி, வெள்ளிக்கிழமை நண்பகல் வரையிலும் கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கிக்கொண்டு மக்கள் அலறித்துடித்த அபய ஒலி எதுவும் காதில் விழாததுபோல, சேலத்துக்குப் பறந்துபோனார் பழனிசாமி. போனதில் தவறில்லை. ஆனால், அங்குப் போய் இறங்கிய நிமிடத்திலிருந்தே சோகச் செய்திகள் சுழற்றியடிக்க ஆரம்பித்தனவே... கொஞ்சமும் எதிர்பாராதவகையில், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களையும் கஜா சுழற்றத் தொடங்கியதே... இந்தச் செய்திகளெல்லாம் தமிழகத்தின் முதல்வரான பழனிசாமியின் காதுகளுக்கு வராமலா போயிருக்கும்? சரி, சேலம் நிகழ்ச்சிகளின்போது, புயல் பாதித்த பூமிக்குச் செல்லவில்லையா என்று மீடியாகாரர்கள் கேட்ட பிறகாவது சுதாரித்திருக்கலாம். ஆனால், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் செல்லமுடியவில்லை என்று சர்வசாதாரணமாக பதில் சொன்னதை எந்த ரகத்தில் சேர்ப்பது?

`உண்மையில் முதலமைச்சருக்கு எந்தத் தகவலும் வருவதில்லை. பி.ஜே.பி-யின் கைப்பொம்மையாகத்தான் உட்கார்ந்திருக்கிறார்' என்று சொல்லப்படுவதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பழனிசாமி. கஜா புயல் முன்னேற்பாடுகளின்போது, முதலமைச்சரைவிட, தலைமைச் செயலாளர்தான் முன்னிலையில் இருந்தார். அவர் தனியாக ஒரு கூட்டத்தைப்போட்டு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல எதையும் கண்டுகொள்ளாமல் சேலத்துக்குக் கிளம்பிவிட்டார் பழனிசாமி.

புயலின் கோரக்கரங்கள் நடத்தியிருக்கும் தாக்குதல் என்னவென்று பக்கத்து தோட்டத்திலிருப்பவர்களுக்குக்கூடத் தெரியாத நிலையில், சேலத்தில் உட்கார்ந்து கொண்டு, `புயலால் பெரிதாக பாதிப்பில்லை... எந்த ஒருவருக்கும் உணவு கிடைக்கவில்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை' என்றெல்லாம் அறிக்கை விட்டார் பழனிசாமி. இதையெல்லாம் அங்கிருந்தபடி எப்படித்தான் கண்டுபிடித்தாரோ?! உண்மையில், புயல்சீற்ற பூமியின் நிலவரம் ஒரு துளிகூட அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை அல்லது தெரிந்துகொள்ள அவர் அக்கறை காட்டவில்லை என்பதைத்தான் அவரின் இந்தப் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.

இவர்தான் இப்படியென்றால், இவருடைய அமைச்சரவை சகாக்களும் ஆளாளுக்கு அறிக்கைகளைவிட ஆரம்பித்தனர். கஜா புயல் கடற்கரையைவிட்டு அகலாத நிமிடத்திலேயே, `பெரிய பாதிப்பு இல்லை' என்று ஊடகங்களிடம் ஓதினார் வேதாரண்யத்தைப் பூர்வீகமாகக்கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன். உண்மையில் புயல் தன் காலைப் பதித்த பூமியே வேதாரண்யம்தான். அந்த ஊரிலேயே பாதிப்பு இல்லை என்று எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு மணியன் பேட்டி கொடுக்கிறார் என்றால் மக்களுக்குக் கோபம் வராதா? அதனால்தான் தங்கள் ஊருக்கு வந்தவரை ஓடஓட விரட்டியடித்தனர் மக்கள். இப்படித்தான் பல ஊர்களிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும் துரத்தியடிக்கப்படுவது இன்றுவரை தொடர்கிறது. இதற்குப் பதிலடியாகப் போராடும் மக்களை போலீஸ் துணையோடு தாக்கிக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், அதிகாரிகளும். பலர் மீது வழக்குப்போட்டு வதைத்துக்கொண்டிருக்கின்றனர்.

நடந்திருப்பது இயற்கை சீற்றம். அதற்கு யாரையும் குறை சொல்லமுடியாது. இத்தனைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பழனிசாமி அரசைப் பலரும் பாராட்டவே செய்தனர். அப்படியிருக்க, புயலுக்குப் பிறகு நிலைமை மாறக் காரணம், அதிகாரம் இருக்கிறது என்கிற மமதையில் முதல்வர் உட்பட அமைச்சர்கள் ஆளாளுக்கு வெளியிட்ட அறிக்கைகள்தாம். ரத்தச் சகதியாகக் கிடப்பவனைக் காப்பாற்ற முன்வராவிட்டாலும் பரவாயில்லை. `ஒண்ணுமில்ல, உடம்பு முழுக்கத் தக்காளி சட்னிதான்' என்று கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் சொல்லும்போது கோபப்படாமல் எப்படி இருப்பார்கள் மக்கள். 

இந்தக் கோபம்தான், பழனிசாமியை மேலும் கலங்க வைத்திருக்கிறது. புயல் கடந்த பூமியைத் தரைமார்க்கமாகச் சுற்றிவந்தால், மக்களிடம் சிக்கிக் கொள்வோம் என்று பயந்து, ஹெலிகாப்டர் மூலமாக வட்டமடித்திருக்கிறார் பழனிசாமி. குறிப்பிட்ட சில இடங்களில் இறங்கி, அ.தி.மு.க.வினர் மட்டுமே புடைசூழ நின்று போஸ் கொடுத்துவிட்டுப் புறப்பட்டிருக்கிறார். மறந்தும்கூட பொதுமக்கள் யாரும் அவருக்கு அருகில் அனுமதிக்கப்படவில்லை (கிரவுட அண்டவிடாதீங்க அண்ணனுக்கு அலர்ஜி).

இந்தக் கொடுமைகளை எல்லாம்கூட சகித்துக் கொள்ளலாம். கடைசியாக அவர் கூறியிருப்பதைத்தான் துளிகூட சகிக்கமுடியவில்லை. இப்படிப்பட்ட நபரையெல்லாம் நாம் முதல்வராகப் பெறுவதற்கு என்ன பாவம் செய்தோமோ என்றுதான் நெஞ்சு கொதிக்கிறது. ``பிரதமரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டிருக்கிறோம். அநேகமாக நாளை மறுநாள் (நவம்பர் 22) சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது மத்திய அரசிடம் நிவாரண உதவிகளைக் கேட்போம்" என்று கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் கூறியிருக்கிறார் பழனிசாமி. இவர் கூறுவது, துக்கவீட்டுக்கு ஓடோடி வரவேண்டியவர்களை, `வெற்றிலை பாக்குவைத்து அழைத்துவரப்போகிறேன்' என்று சொல்வதுபோல இருக்கிறது, 

தமிழகமும் இந்தியாவில்தான் இருக்கிறது. இந்த நிமிடம்வரை மத்திய அரசின் சார்பில் யாருமே புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வந்து பார்க்கவில்லை புயல்கடந்த பூமியை. முதலமைச்சரே ஐந்து நாள்களுக்குப் பிறகு வரும்போது, மற்றவர்களைக் கேட்பதில் அர்த்தம் இல்லைதான். ஆனால், மத்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறதே. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஓடோடி வந்து சுற்றிப்பார்த்திருக்க வேண்டும். உத்தரகாண்ட, கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டபோது ஓடோடிச் சென்று பார்த்த பிரதமர் நரேந்திர மோடிக்கு.. தமிழகம் வருவதற்கு என்ன தயக்கம்? ஆயிரம் குறைகள் இருந்தாலும், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? டக்கென்று இந்நேரம் பிரதமரும், ஜனாதிபதியும் ஓடோடி வந்திருப்பார்கள். புயல் கடந்த பூமியை வலம் வந்திருப்பார்கள். ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என்று நிவாரணத் தொகையையும்  அறிவித்திருப்பார்கள். ஆனால், இங்கு உட்கார்ந்திருப்பது, அவர்கள் பிடித்து வைத்த பொம்மையாயிற்றே. அந்தப் பொம்மையின் `டக்'கு இதுதான்!
-மேகலாஸன்