Published:Updated:

என்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே?
என்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே?

என்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே?

பிரீமியம் ஸ்டோரி

‘‘அகில இந்தியக் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தவிருக்கிறார் ஸ்டாலின். முதலில் அவர் தன் கட்சியில் மாவட்ட அளவில் செயல்படும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிடட்டும்” என்று குமுறுகிறார்கள் தி.மு.க-வின் கீழ்மட்ட நிர்வாகிகள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீதான விமர்சனங்களைவிடவும் அதிகமான விமர்சனங்களை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்துவருகிறார். ‘‘சட்டமன்றத்திலும், வெளியிலும் பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்பட வில்லை. பெரும் புகார்களை இந்த ஆட்சி சந்தித்துவரும் நிலையில், கருணாநிதி செயல் படும் நிலையில் இருந்திருந்தால் இந்த ஆட்சியையே கவிழ்த்திருப்பார்’’ என வெளிப்படை யாகப் பலரும் பேசும் நிலை உள்ளது. கட்சியிலும் ஸ்டாலின் செயல் தலைவர் பொறுப்புக்கு வந்த பிறகு அவரது செயல்பாடு குறித்துப் பல விமர்சனங்கள் இருந்துவருகின்றன. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சந்தித்த நான்கு தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் எளிதாக  தி.மு.க வெற்றிபெற்றுவிடும் என்றிருந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

என்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டெபாசிட்டை இழந்து தி.மு.க தோற்றபிறகு, ஸ்டாலின் அதிரடி காட்டினார். ஆர்.கே.நகர் தோல்விக்காக களையெடுப்பு வைபவங்களை நடத்திய அவர், ‘கழக உடன் பிறப்புகளுடன் கள ஆய்வு’ சந்திப்புகளை நடத்தி, தமிழகம் முழுவதும் கட்சிக்குப் புத்துணர்வு தர முடிவெடுத்தார். மாவட்ட வாரியாக இந்தக் களஆய்வு நடந்தது. கட்சியினர் புகார் கொடுக்க, புகார்ப் பெட்டியும் அப்போது வைக்கப்பட்டது. இதன்மூலம் மாவட்ட அளவில் கட்சியில் உள்ள குறைபாடுகளைக் களைவதற்கு வாய்ப்பு கிட்டும் என்று கருதினார். ஆனால், மாவட்டச் செயலாளர்களால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை வைத்தே இந்தக் கள ஆய்வு நடத்தப்பட்டதால், அவர்களில் பலர் மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லவில்லை.

கள ஆய்வு முடிவுகளை ஆராய என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஆய்வுக் குழுவை மாவட்டவாரியாக அனுப்பி வைத்தார் ஸ்டாலின். ஆனால், இந்தக் குழு எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய போதிய அவகாசம் ஸ்டாலினுக்குக் கிடைக்கவில்லை. தன்னைச் சுற்றி ஒரு நெருக்கமான வட்டத்தை ஸ்டாலின் வைத்துள்ளார். துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி என அந்தப் பட்டியலில் இருப்பவர்களைத் தாண்டி யாரும் ஸ்டாலினிடம் நெருங்க முடியாது என்ற நிலைதான் இப்போதும் உள்ளது.

‘‘ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் நிற்கும் கார்களைவிட, அதே ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுவின் வீட்டில் நிற்கும் கட்சியினர் கார்களின் எண்ணிக்கை அதிகம். அந்த அளவுக்கு வேலு கை கட்சியில் ஓங்கியுள்ளது’’ என்கிறார் சீனியர் நிர்வாகி ஒருவர்.

‘‘‘தனக்கு வேண்டியவர்கள் தவறே செய்தாலும், அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்துவருகிறார். ஆனால், திறமை இருந்தும், மக்கள் செல்வாக்கு இருந்தும், தனக்குப் பிடிக்காதவர்கள் என்ற காரணத்தினால், தி.மு.க-வின் முன்னணியினர் பலரை ஓரம்கட்டி வைத்துள்ளார் ஸ்டாலின். பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முத்துசாமி என ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கருணாநிதியின் அரசியல் வெற்றிக்குக் காரணம் அவர் கட்சிக் காரர்களை ஒருங்கிணைத்த பாங்குதான். ஒரு மாவட்டத்தில் இரண்டு கோஷ்டிகள் இருந்தால், இரண்டு அணியினரையும் ஒரேமாதிரி நடத்துவார். ஆனால், மாவட்டச் செயலாளர்களை எதிர்ப்பவர்களைத் தன் எதிரிபோல ஸ்டாலின் கருதுகிறார். தனக்குப் பிடிக்காதவர்கள் என்றால்கூட, அவர்கள் கூறும் கருத்தைக் கேட்க கருணாநிதி ஒருபோதும் தயங்கியது கிடையாது. ஆனால், ஸ்டாலின், தனக்குச் சால்வை அணிவிக்க வருபவர்களை யும் தள்ளிவிடும் மனப்பாங்கு உள்ளது’’ என்று வருத்தப் படுகிறார்கள் தி.மு.க-வினர்.

என்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே?

‘‘கொங்கு மண்டலம், தி.மு.க-வுக்கு வீக்கான பகுதியாக உள்ளது. கள ஆய்வு அடிப்படையில் அங்கு மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்தார். ஆனால், ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் பொறுப்பிலி ருந்து நீக்கப்பட்ட காந்திசெல்வனையே மீண்டும் நாமக்கல்லுக்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளார். பொங்கலூர் பழனிசாமி மட்டுமே கொங்குமண்டல தி.மு.க-வில் பெயர் அறிந்த நபராக இருந்துவந்தார். அவர்மீது பெரும் அதிருப்தி எழுந்ததால், அவரை இப்போது ஒதுக்கி வைத்துள்ளார். ஆனால், கொங்குமண்டலத்தில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒரு வலிமையான நபரை இதுவரை ஸ்டாலினால் அடையாளம் காண முடியவில்லை. கட்சி வேலைகளைச் சிறப்பாகச் செய்யும் ஈரோடு முத்துசாமியையும் ஓரம்கட்டி வைத்துள்ளார்கள். கொங்கு மண்டலத்தை வலிமையாக்க எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சியை இன்னும் பலவீனமாகவே ஆக்கிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த கோவை பிரமுகர் ஒருவர். 

இதே நிலைதான் தென் மாவட்டங்க ளிலும். ‘‘தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தைப் போலவே தேவேந்திரகுல வேளாளர் வாக்குவங்கியும் கணிசமாக உள்ளது. இந்த இரு சமூகங்களையும் கவரும்விதமான நிர்வாக அமைப்பு, தென் மாவட்டங்களில் இல்லை’’ என்று வருந்துகிறார், திருநெல்வேலி பகுதி தி.மு.க பிரமுகர் ஒருவர்.

தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சில நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டார் ஸ்டாலின். அதனால், கட்சிக்குள் உற்சாகம் பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், இரண்டு பகுதிகளிலும் எதிர்ப்புகள்தான் அதிகம் கிளம்பின. எதிர்ப்பாளர்கள் அறிவாலயத்துக்குப் படையெடுத்து வந்தபோது, அவர்களைச் சந்தித்துப் பேசக்கூட ஸ்டாலின் தயாராக இல்லை. ‘‘தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு அடையாளமாக இருக்கும் ஒரே பெரிய கட்சி தி.மு.க-தான். ஆனால், ஜெ. பாணியில் ஸ்டாலின் கட்சியை நடத்தப் பார்க்கிறார்’’ என்கிறார் தி.மு.க தலைமைக்குழு உறுப்பினர் ஒருவர்.

கட்சியினர்மீது வரும் சில புகார்கள் பற்றி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை வைத்து விசாரித்தார் ஸ்டாலின். ஆனால், ‘‘பாரதிமீதே அடுக்கடுக்கான புகார்கள் உள்ளன. அவற்றை யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள ஸ்டாலின் தயாராக இல்லை’’ எனக் குமுறுகிறார் வடமாவட்ட எம்.எல்.ஏ ஒருவர். 

இப்போது மற்றொரு குமுறலும் தி.மு.க-வினரிடம் எழுந்துள்ளது. கட்சியின் பூத் கமிட்டிகளை ஆராய 12 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட குழுவை ஸ்டாலின் நியமித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் உள்ள சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பணியை தி.மு.க செய்கிறது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 20 பேர்களை நியமித்துவருகின்றனர். பூத் கமிட்டி அமைக்கும் பணி முறைப்படி நடக்கிறதா என்று பார்த்துவந்து தலைமைக்குத் தெரிவிக்கவே இந்தச் சிறப்புக் குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார்.

என்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே?

ஆனால், இந்தக் குழுவில் உள்ள பலரும் கட்சியில் மிகவும் ஜூனியர்கள். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பல்லாவரம் கருணாநிதி, மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, கன்னியாகுமரி ஆஸ்டின், ரிஷிவந்தியம் கார்த்திகேயன், திருவிடைமருதூர் கோவி.செழியன், காஞ்சிபுரம் எழிலரசன், பென்னாகரம் இன்பசேகரன், செங்கம் மு.பெ.கிரி, ஆற்காடு ஈஸ்வரப்பன், திரு.வி.க நகர் தாயகம் கவி, எழும்பூர் ரவிச்சந்திரன் ஆகியோரே அவர்கள்.

‘‘இந்த 12 பேரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா தவிர மற்றவர்கள் யாரும் செல்வாக்கானவர்கள் இல்லை. மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் பலர், கட்சியில் சீனியர்கள். பூத் கமிட்டி அமைக்கும் விஷயத்தில் அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதை இவர்கள் எப்படிக் கேள்வி கேட்க முடியும்?’’ என்று கேட்கிறார், முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், கட்சியில் ஓரம்கட்டப்பட்டிருப்பவர்களை யெல்லாம் அழைத்து ஆலோசனை செய்து கட்சிக்கு வலிமை சேர்க்க ஸ்டாலின் முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் உள்ளது.

என்ன செய்யப்போகிறார் செயல் தலைவர்?

- அ.சையது அபுதாஹிர்
படம்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு