சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன?

அமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன?

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

மோடி பிரதமர் ஆனதும், 2014 ஜூலை 9-ம் தேதியன்று பி.ஜே.பி-யின் தேசியத் தலைவரானார் அமித் ஷா. நான்கு ஆண்டுகள் முடிந்து, அவர் பதவியேற்ற தினமான அதே ஜூலை 9-ம் தேதியில்தான் சென்னையில் கர்ஜனை செய்துவிட்டுப் போயிருக்கிறார் அமித் ஷா.

 அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது பி.ஜே.பி. அதற்கான பிளானை நிறைவேற்றவே அமித் ஷா தமிழகம் வந்து போயிருக்கிறார். ‘தமிழகத்தில் சில தொகுதிகளையாவது கைப்பற்றிவிட வேண்டும்’ என்பதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். அதற்காக பூத் வாரியாகப் பொறுப்பாளர்களைக் களமிறக்கி இருக்கிறார்கள். ‘மகா சக்தி’, ‘சக்தி கேந்திரம்’ என்கிற வாக்குச்சாவடி முகவர்களை மாநிலவாரியாகச் சந்தித்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார் அமித் ஷா. தமிழகத்தின் 15 ஆயிரம் பூத் பொறுப்பாளர்களை அமித் ஷா சந்தித்திருக்கிறார். பூத்வாரியாக மேற்கொள்ள வேண்டிய அசைன்மென்ட்கள்,

அமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன?

மாநில பி.ஜே.பி-யினருக்குத் தரப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தொகுதிவாரியாக ஒவ்வொரு சாதியினரின் எண்ணிக்கை உள்பட அனைத்து விஷயங்களையும் இந்தப் பொறுப்பாளர்கள் கணக்கெடுத்திருக்கிறார்கள். இதனைவைத்து, வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது பி.ஜே.பி. இதன் சகோதர அமைப்புகளான இந்து முன்னணி, வி.ஹெச்.பி., ஆர்.எஸ்.எஸ், போன்ற அமைப்புகளின் துணையோடு, காஸ் இணைப்பு முதல் இலவசத் திட்டங்கள் வரை, மத்திய - மாநில அரசுகள் மக்களுக்கு அளித்துவரும் நலத்திட்டங்களில் எவையெல்லாம் மக்களுக்குப் போய் சேரவில்லை... அல்லது மக்களுக்கு எவையெல்லாம் தேவையாக இருக்கின்றன என வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். மக்கள் அப்போது தெரிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஓட்டுகளாக மாற்ற நினைக்கிறது பி.ஜே.பி.

இந்த பூத் நிர்வாகிகள் யோசனை இப்போது உருவானதல்ல. மோடி பிரதமரான சில மாதங்களிலேயே அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு 17.16 கோடி பேர் வாக்களித்தனர். இதனால் 282 எம்.பி-க்கள் பி.ஜே.பி-க்கு கிடைத்தனர். ‘கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தினால், அடுத்த தேர்தலில் 300 எம்.பி-க்கள் கிடைப்பார்கள்’ என்பதுதான் பி.ஜே.பி-யின் கணக்கு. கட்சியை வலுப்படுத்துவதற்காக, தேசிய அளவில் 10 கோடி உறுப்பினர்கள் சேர்க்கைத் திட்டத்தை 2014-ல் கொண்டு வந்தார் மோடி. இந்த ‘மிஸ்டுகால் உறுப்பினர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவைக்கு விசிட் அடித்தார் அமித் ஷா. அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித் ஷா, ‘‘எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில்தான் தேர்தல் நேரத்தில் அதிக ஊழல் நடைபெறுகிறது. இதனை முறியடிக்க பூத் வாரியாக உறுப்பினர்களை வலிமையாக்க வேண்டும்’’ எனச் சொன்னார். அதுதான் இப்போது ‘சக்தி கேந்திரம்’ ஆக உருவெடுத்திருக்கிறது.

அதன்பின் 2016 சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கருத்து தெரிவித்த அமித் ஷா, ‘‘வெற்றி கிடைக்காவிட்டாலும், தமிழகத்தில் எங்கள் வாக்குவங்கி குறையவில்லை’’ என பெருமைப்பட்டார். அந்தத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு கிடைத்த வாக்கு சதவிகிதம் 2.84. அதற்கு முந்தைய 2011 சட்டசபைத் தேர்தலில் கிடைத்த வாக்கு சதவிகிதம் 2.22. அதாவது 0.62 சதவிகிதம்தான் உயர்ந்திருந்தது. 2016 சட்டசபைத் தேர்தலில் 188 தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி., ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. 180 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. பி.ஜே.பி. வாங்கிய மொத்த ஓட்டுகள் 12.28 லட்சம். அதற்கு முந்தைய ஆண்டு பி.ஜே.பி-யில் சேர்க்கப்பட்ட 24 லட்சம் உறுப்பினர்களில், பாதி பேர்கூட பி.ஜே.பி-க்கு ஓட்டுப் போடவில்லை.

அமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன?

அந்தத் தேர்தலில் ஆர்.கே. நகரில் போட்டியிட்ட பி.ஜே.பி. வேட்பாளர் எம்.என்.ராஜா வாங்கிய வாக்குகள் 2,928. ஜெயலலிதா மறைவால், அதே ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளர் கரு. நாகராஜன் பெற்ற வாக்குகள் 1,417. பொதுத்தேர்தலைவிட இடைத்தேர்தலில் பி.ஜே.பி-யின் ஓட்டுகள் இன்னும் சரிந்து போனது. நோட்டாவோடு போட்டியிடும் அளவுக்குப் புதிய அத்தியாயம் எழுதியது பி.ஜே.பி.

இப்படியான பின்புலத்தில்தான் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பூத் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது 65,484 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களை அணுகவும், தேர்தலின்போது பூத்-தில் பணியாற்றவும் ஒரு வாக்குச்சாவடிக்கு மூவர் வீதம் 1,96,452 பொறுப்பாளர்கள் தேவை. ஒருவர் என்றாலும்கூட 65,484 வாக்குச்சாவடிகளுக்கும் முழுமையாகப் பொறுப்பாளர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்படும். இந்தச் சூழலில் எப்படி தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்யப்போகிறது பி.ஜே.பி.?

அமித் ஷா அஸ்திரங்கள் எடுபடுமா?

‘காங்கிரஸைக் கரைத்துவிட வேண்டும்’ என ஒவ்வொரு மாநிலமாகக் குறிவைத்து, அமித் ஷா நடத்திய அரசியல் சதுரங்கத்தில் பெரும்பாலான மாநிலங்களில் தாமரை மலர்ந்திருக்கிறது.

பி.ஜே.பி. படைத்த இந்த வரலாற்று வெற்றிக்குப் பின்னால் அமித் ஷாவின் பங்கு உண்டு. தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் இப்போதே பாய்ச்சல் காட்டி வருகிறார். ஆனால், தொடர் வெற்றிகளைக் குவித்துவந்த அமித் ஷாவின் வியூகம், சமீபகாலமாக எடுபடவில்லை. ஆட்சியைப் பிடித்தாலும் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதல் அடி விழுந்தது. மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச சட்டசபையைக் கைப்பற்றிய பி.ஜே.பி., அங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் மண்ணைக் கவ்வியது. ‘34 நாட்கள்... 28 மாவட்டங்கள்... 59 பொதுக்கூட்டங்கள்... 57,135 கி.மீ. பயணம்’ என கர்நாடகாவே கதியென இருந்த அமித் ஷாவின் ஃபார்முலா, கர்நாடகாவில் கைக்கூடவில்லை. ஓரளவுக்கு செல்வாக்கு மிகுந்த கர்நாடகாவில்கூட கால்பதிக்க முடியாத நிலையில் தமிழகத்தில் பி.ஜே.பி. எந்த தைரியத்தில் வெற்றி பெறும் எனத் தெரியவில்லை.

அமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன?

யாருடன் கூட்டணி?

 ‘‘ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு’’ என்று அமித் ஷா சொன்னது, பொதுமக்களால் உற்றுநோக்கப்பட்டது. இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு, மத்திய பா.ஜ.க.வின் விரலசைவுக்கு ஏற்பதான் செயல்படுகிறது என்பது ஊருக்கே தெரிந்த ரகசியம். ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. அரசுமீது ஊழல் குற்றச்சாட்டுகளை அமித் ஷா சுமத்தினால்,  அதைத் தமிழக மக்கள் நம்புவார்களா என்பது கேள்விக்குறிதான்.

‘‘செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி பற்றி பேசுவோம்’’ என சொல்லியிருக்கிறார் அமித் ஷா. அவர் யாருடன் பேசுவார் என்பது ஊரறிந்ததுதான். ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்காக பி.ஜே.பி-யின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’’ என முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும். மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும், பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் சேர்ந்து ரஜினியைக் கைக்குள் போட்டு, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுதான் திட்டம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்தத் திட்டத்துக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர் நியமனம் என்கிற திரைக்கதை எழுதப்படுகிறது. இதே பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க ரஜினியும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று நேர் கோடுகள் ஒரு புள்ளியில் இணைந்தால் அதிசயம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கப்போவதாகச் சொல்லப்படும் பா.ஜ.க. ஏன் இப்போது அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறது, ரஜினி தெளிவான முடிவெடுத்து கட்சி தொடங்கிவிடுவாரா, அப்படியே கட்சி தொடங்கி ரஜினி - பா.ஜ.க. கூட்டணி அமைந்தாலும் அது தமிழக மக்களிடம் எடுபடுமா என்று ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.

வியூகங்கள் யார் வேண்டுமானாலும் வகுக்கலாம். ஆனால் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிவது மக்கள் தீர்ப்பில்தான் இருக்கிறது.