சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இதுவும் ஜெயில்தான்!

இதுவும் ஜெயில்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
இதுவும் ஜெயில்தான்!

தமிழ்ப்பிரபா, ஸ்ரீராம் - படம்: ப.சரவணகுமார்

சைதாப்பேட்டையிலிருந்து 100 அடி தூரம் நடந்தால் அமைந்தகரை. அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில் சிந்தாதிரிப்பேட்டை. பக்கத்துத் தெரு புதுப்பேட்டை. அதற்குப் பக்கத்தில் ஆயிரம் விளக்கு. இப்படி யாராவது சொன்னால் நம்புவீர்களா? ஆனால், இதை உண்மையாக்கி யிருக்கிறது தமிழக அரசு. நகரமயமாதலுக்காகவும் சாலை விரிவாக்கத்துக்காகவும், சென்னையில் உள்ள விளிம்புநிலை மக்களின் பெரும்பகுதியைப் பெரும்பாக்கத்தின் `8 அடுக்குக்குள்’ சுருட்டிவைத்திருக்கிறது.

அந்த மக்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகச் செய்துகொடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகச் சென்றபோது, நாம் கேட்டதெல்லாம் துயரக் கதைகளை மாத்திரமே.

இதுவும் ஜெயில்தான்!

ஓ.எம்.ஆரில் உள்ள சத்யபாமா கல்லூரி அருகே உள்ள சாலையில் நுழைந்தால் பரந்து விரிந்திருக்கின்றன பல அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஆயிரம் விளக்கு, சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, அமைந்தகரை என ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் தனித்தனியாக பிளாக்குகள் இருக்கின்றன.

இங்கு குடியமர்த்தப்பட்ட பிறகு இந்த மக்கள் ஆண்டாண்டுக்காலமாகச் செய்துகொண்டிருந்த வேலை, குழந்தைகளின் கல்வி எல்லாம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ``அங்க இருக்கச்சொல்லோ வீட்டு வேலை, ஆபீஸ் வேலை செஞ்சிகினு இருந்தோம். எங்கள ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யச் சொன்னா... அது எங்களுக்குப் பழக்கமே இல்லை தம்பி. அப்டியும் நிறைய ஜனங்க அந்த வேலைக்குப் போயினுதான்கிறாங்க. இப்டி பக்கத்துல இருக்கிற ஐ.டி கம்பெனி, அப்பார்ட்மென்ட் வீடுகளுக்குக் கழுவுற வேலை செய்றதுக்குத்தான் எங்களை யெல்லாம் இங்க ஒண்ணா வெச்சிருக்காங்களோ இன்னவோ!” என்ற பெண்மணியின் வார்த்தைகளை, அவ்வளவு சாதாரணமாகக் கடந்துபோக முடியவில்லை.

அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிக் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. இடையிடையே கற்களை வைத்து அதன்மீது கால்வைத்துதான் கடந்து போகிறார்கள்.

இதுவும் ஜெயில்தான்!

``எங்களை 25 நாளுக்கு முன்னாடி அள்ளிக்கினு வந்து இங்க போட்டாங்க. என்ன, ஏது, எப்டி இருக்கோம்னு ஒருத்தர்கூட வந்து பார்க்கல. மொத பத்து நாளு கரன்ட்டே இல்ல. வூடு ஒழுங்காவே ரெடியாவுல. அதுக்குள்ள எங்களக் கொண்டுவந்து விட்டாங்க. என் பேரனுக்கு போன வாரம் முடியல. இங்க இருக்கிற ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனேன். 3,500 ரூபா செலவு” என்ற பெண்மணியைத் தாண்டித்தான் உள்ளே நுழைந்தோம்.

லிஃப்ட்டில் ஏறும் பகுதி முழுக்க, குப்பை கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பூச்சுவேலைகூட முழுமையடையவில்லை. `` `வந்த உடனே எதுக்கு லிஃப்ட் கேட்கறீங்க? அதுக்கெல்லாம் நாளாவும்’னு சொன்னாங்க. எட்டு மாடி வீடு. படிக்கட்டுலதான் ஏறி இறங்கணும். அதுகூடப் பரவாயில்லை தம்பி, படிக்கட்டுக்கு லைட் போடலாம்ல. கம்பிங்க எல்லாம் வெளிய நீட்டிக்கினு இருக்குது. எவ்ளோ பேர் தடுக்கி விழுறாங்க தெரியுமா?” என்கிறார் ஒருவர்.

பெரும்பாக்கம், சுமார் 25,000-த்துக்கும் மேற்பட்ட சென்னைவாசிகள் குடியிருக்கும் பகுதி. இவ்வளவு பெரிய ஜனத்திரள் இருக்கும் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றுகூட இல்லை. இங்கிருந்து செம்மஞ்சேரிக்கு வர வேண்டும். அங்கும் போதிய மருத்துவ வசதிகள் கிடையாது.

``எங்க அப்பாவுக்குத் திடீர்னு நெஞ்சு படபடன்னு ஆகிடுச்சு பிரதர். இங்கிருந்து செம்மஞ்சேரிக்குக் கூட்டிக்கினு போனோம். அங்க `முடியாது. ராயப்பேட்டை இல்லாட்டி ஜி.ஹெச்சுக்குக் கூட்டிட்டுப் போங்க’ன்னு சொன்னாங்க. காசு இருந்தா பக்கத்துல இருக்கிற குளோபலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. என்ன பண்றதுன்னு தெரியலை. பெரும்பாக்கத்துல இருந்து ஜி.ஹெச்சுக்குக் கூட்டிட்டுப் போறதுக்குள்ள அப்பா இறந்துட்டார் பிரதர்.” - கிளெமென்ட் என்கிற அந்த இளைஞருக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை.

இதுவும் ஜெயில்தான்!

கிளெமென்ட்டின் அப்பாவைப்போல சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் நிறைய பேர் இறந்துள்ளனர் என்பது அங்கு உள்ளவர்களிடம் தொடர்ந்து உரையாடும்போது தெரியவந்தது.

குழந்தைகள் படிக்க முறையான ஒரு பள்ளிக்கூடம்கூட இங்கு இல்லை. ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள பெட்டி பெட்டி வீடுகளையே பள்ளிக்கூடம் மாதிரி வைத்து, அதையே வகுப்பறைகளாக்கிப் பாடம் நடத்துகிறார்கள். போதிய காற்றும் வெளிச்சமும் இல்லாமல் வியர்வை வழிந்தபடி குழந்தைகள் பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள். மதிய உணவு சாப்பிட இடமில்லை.

``சார்... இவ்ளோ பசங்க சாப்பிடுறாங்கள்ல, இவங்களுக்குக் கை கழுவக்கூட தண்ணி இல்லை” என ஒரு குழந்தையின் அம்மா அங்கலாய்த்ததும் ``அட, கை கழுவுற தண்ணிக்குப் போயிட்டா பாரு இவ! புள்ளைங்க குடிக்கவே இங்க தண்ணி கிடையாது தம்பி. உங்களுக்குச் சாகணும்னு விருப்பம் இருந்தா, தோ அப்டியே எட்டி அந்த கக்கூஸுக்குள்ளே போயிப் பாருங்க. அது உள்ளே எப்டி பசங்க போவும்? என் பொண்ண எல்லாம் ஒன் பாத்ரூம்னாகூட அப்டியே அடக்கிவெச்சு வீட்டுக்கு வந்து போவச் சொல்லியிருக்கேன்” என்றார் ஒரு பெண்மணி.

சென்னையிலிருந்து கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் என மக்களைக் கட்டாயப்படுத்தி இடம்பெயரவைக்கும்போது பள்ளிக் குழந்தைகளில் நிறைய ‘டிராப் அவுட்’ ஆகிறார்கள். இங்கேயும் அது தொடர்கிறது.

இதுவும் ஜெயில்தான்!

இது தொடர்பாக மேலும் நாங்கள் பல தகவல்கள் அங்கே சேகரிப்பதற்கு முன், காவலர்களுக்கு விஷயம் தெரிந்து எங்களை விசாரித்தார்கள். அவர்கள் போன பிறகு ஒரு பாட்டி சொன்ன செய்திதான் சுவாரஸ்யம். ``நைனா, இவ்ளோ ஜபர்தஸ்தா வந்துட்டுப் போறாங்களே... ஏன் இங்கயே போலீஸ் ஸ்டேஷன் கட்டியிருந்தா இன்னா? போலீஸ் ஸ்டேஷன் போவணும்னா இங்கிருந்து பள்ளிக்கரணை போவணும். இங்கிருந்து போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கு ஆட்டோவுல 150 ரூபா கேக்குறான். கம்ப்ளெயின்ட் செலவு அது இதுனு 500 ரூபாவுக்குமேல ஆவுது. இதனாலேயே நிம்மதியா ஒரு சண்டைகூடப் போட முடியிறதில்லை” என்று அவர் சொல்ல, கூடியிருந்தோர் சிரித்தனர்.

ஒரேயொரு போலீஸ் பூத் மட்டுமே அங்கே இருக்கிறது. அங்கே இருக்கும் காவலர்களிடம் புகார் தெரிவித்தாலும், அவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை எனக் கவலைப்படுகிறார்கள் மக்கள்.

``காலைல 5 மணிக்கெல்லா மீன் மார்க்கெட்ல இருக்கணும் ப்ரோ. அங்க வீடு இருக்கச் சொல்லோ 4:30-க்கு எழுந்தாக்கூட பிரச்னை இல்லை. இப்போ நைட் 3 மணிக்கு எழுந்து பேய் மாதிரி கிளம்பி வர்றோம். நடுவுல போலீஸ்காரனுங்க தொல்லை வேற” என்ற இளைஞரைப்போல், வேலை சார்ந்து பலர் அவதிக்குள்ளாகி யிருக்கிறார்கள்.

இதுவும் ஜெயில்தான்!

``குடிக்க தண்ணி, செய்ய வேலை, படிக்க ஸ்கூல்னு எல்லா அடிப்படை வசதிக்கும் போராட வேண்டியிருக்கு சார். கூவம் ஓரம் குடிசையில இருந்தோன்னாலும் ஒரு குறையும் இல்லாமத்தானே இருந்தோம். எட்டடுக்கு மாடி, எல்லா வசதியும் இருக்குதுன்னு ஆசைகாட்டி மூட்டைகட்டச் சொன்னாங்க. இங்க வந்தா ஜெயில்லகிற மாதிரி இருக்கு சார். தொரத்தி விட்டுட்டீங்க; இங்கயாவது நாங்க நிம்மதியா வாழ வழிவகை செஞ்சுகொடுங்க, அதுபோதும்” எனக் கையெடுத்துக் கும்பிட்டார் இசைவாணி என்கிற பெண்.

எங்கு சென்றாலும் புலம்பலும் இரைஞ்சலும், ஆவேசமுமாய் மக்கள் காணக்கிடைக்கிறார்கள். இவர்கள் இருக்கும் பெரும்பாக்கம் பகுதியைத் தாண்டி, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளது. பெரிய கட்டடங்கள். ஐடி நிறுவனங்கள், பன்னாட்டு உணவகங்கள், பார்ட்டி இரவுகள், கோல்ஃப் மைதானங்கள் என மின்னொளியில் ஒளிர்கின்றன. இவற்றுக்கு இடையே அடிப்படை வசதிகூட சரியாகக் கிடைக்காமல் இந்த எட்டு அடுக்கு கான்கிரீட் கட்டடங்கள் மங்கிப்போகின்றன. இவர்களின் குரல்கள், சட்டமன்றத்துக்கு அருகில் இருந்தபோதே அதிகாரிகளுக்குக் கேட்கவில்லை. இப்போது பெரும்பாக்கத்தில் இருக்கிறார்கள். இப்போது மட்டும் கேட்டுவிடுமா?