Published:Updated:

`பாலுக்கு அழும் குழந்தையாக மக்கள் இருக்கிறார்கள்!' - தமிழிசை உருக்கம் #CycloneGaja

`பாலுக்கு அழும் குழந்தையாக மக்கள் இருக்கிறார்கள்!' - தமிழிசை உருக்கம் #CycloneGaja
`பாலுக்கு அழும் குழந்தையாக மக்கள் இருக்கிறார்கள்!' - தமிழிசை உருக்கம் #CycloneGaja

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கு நேரிடையாக சென்று திரும்பியிருக்கிறார் தமிழக பி.ஜே.பி. தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். 31 ஊர்களில் புயல் ஏற்படுத்திய பேரழிவுகளை நேரில் பார்த்ததோடு, அங்கிருந்த மக்களிடமும் விசாரித்திருக்கிறார். அவர் நேரில் பார்த்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...


``கனத்த இதயத்தோடு பேசுகிறேன். துவம்சம் செய்திருக்கிறது கஜா. கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது. முதலில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்குச் சென்றேன். அங்கே, கழிப்பறைக்குப் போன பெண் மகேஷ்வரி கணவன் முன்னால் சுவர் இடிந்து விழுந்து மரணம் அடைந்ததாக கேள்விப்பட்டு, குடும்பத்தினரைச் சந்தித்தேன். வேறு சில ஊர்களில், சாய்ந்து கிடந்த தென்னம்பிள்ளையை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டுப்புள்ளைகளோடு சேர்த்துதான் தென்னையையும் வளர்த்துவந்தோம் என்று சொன்னார்கள். அவர்கள் வீட்டில் துக்கம் நடந்துவிட்டதைப்போலவே மரம் விழுந்ததை நிஜமாகவே ஃபீல் பண்ணினார்கள். தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இளங்கோ கண்ணீர் விட்டு அழுதார். ஆயிரம் தென்னம்பிள்ளைகளை இழந்துட்டு தனி மரமாக நிற்கிறேன்னு சொன்னாரு. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை?... என்றவரிடம் 

மாநில அரசு தரப்பில் புயலுக்கு முன்னே பேரிடர் நிர்வாகம் உஷாராக நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால், புயலுக்குப் பிறகு, மீட்பு நடவடிக்கையில் ஸ்ட்ராட்டிங் டிரபிள் என்று சொல்லப்படுகிறதே?.

ஸ்ட்ராட்டிங் டிரபிள் என்பதைவிட ரீச்சிங் டிரபிள் இருக்கிறது. அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. இது நிஜம். ஆனால், புயலுக்குப் பிறகு,  உள்ளே போய் அதிகாரிகள் பார்க்கலை. பாலுக்கு அழும் குழந்தையாக மக்கள் இருக்கிறார்கள. அரசாங்கத்தின் மீது எதிர்ப்பு என்பதைவிட எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், உயிர் பிழைத்தவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இன்னும் அதிகமான முயற்சிகளை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் உதவிகள்... ஒரு பஞ்சாயத்து தலைவர் அதிகாரம் படைத்தவராக இருந்தால்...அவரது ஊருக்கு இரண்டு ஜெனரேட்டர்கள் போய்விடுகிறது. பாமரர்கள் வசிக்கும் பகுதிக்கு போகவில்லை. அதாவது,  சில ஏரியாவுக்குப் போயிருக்கிறது. வேறு சில ஏரியாவுக்குப் போகலை. சில எம்.எல்.ஏ-க்கள் அவர்களுக்கு ஓட்டு விழும் ஏரியாக்களுக்கு எடுத்துக்கிட்டுப்போனார்கள். பாமர மக்கள் இருக்கிற ஊர்களுக்கு சரிவர சப்ளை போகவில்லை. இந்த பாகுபாட்டை நான் சென்றபோது பார்த்தேன். அதிராம்பட்டினத்தில் மக்கள் மறியலில் ஈடுபட்டிருந்தார்கள். அதனால், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள்... என்று யாருமே போகலை. ஒரே டிராபிக் ஜாம். நான் 100 வாகனத்துக்குப் பின்னால இருந்து இறங்கிப் போய் விசாரித்தேன். இரண்டரை கிலோ மீட்டர் நடந்து கூட்டிக்கிட்டுபோனாங்க. `எங்க ஊருக்குள்ளே யாராவது வந்து பாருங்க. எவ்வளவு மோசமான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதை வந்து பாருங்கள்' என்று அழைத்தார்கள். குடிக்கும் நீர் தொட்டியைப்பார்த்தால், சாக்கடை கலந்து வருகிறது. வீடுகளில் தீப்பெட்டி இல்லை. எல்லா தீப்பெட்டிகளும் தீர்ந்துபோய்விட்டன. ஒரு சொட்டு தண்ணீர் குடிக்க இல்லாத கிராமம் அது. இதுமாதிரி பல கிராமங்கள் இருக்கின்றன. மீட்பு நடவடிக்கையில் மேலும் அதிகாரிகள் அங்கெல்லாம் போக வேண்டும். 

இன்றைக்கு புதுக்கோட்டைக்கு முதல்வர் விசிட் போனார். கள நிலவரத்தை பாதிக்கப்பட்டவர்கள் நேரிடையாகச் சொல்ல முற்பட்டும், போலீஸார் நெருங்கவிடவில்லையாமே?

அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால், துவார் கிராமத்துக்கு நான் போனேன். `மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்காங்க. உங்கள் மீது கல்லெறிவார்கள். திரும்பிப்போங்க' என்றார்கள். சில அதிகாரிகளின் எண்ணம்... போகக்கூடாது என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். இருக்கட்டும் என்று போனேன். கோபமாகப் பேசினார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள்.  பாரத் பெட்ரோலிய இயக்குநர் இரண்டு லாரியில் தண்ணீர் அனுப்பினார்கள். பிஸ்கட் அனுப்பினார்கள். என்னால் முடிந்தது. ஒரு கிராமத்துக்கு தண்ணீர். கிராமத்து மக்கள் கோபமாக இருக்கும்போது, அவர்களைத் தவிர்த்துவிட்டுப்போகக்கூடாது.  பாலுக்காக அழும் குழந்தையாக அவர்களை பார்க்கணுமே தவிர அதிகாரத்துக்காக அழும் குழந்தையாக அதிகாரிகள் பார்க்கக்கூடாது. போராட்டம் நடத்துகிறவர்களைச் சமாதானப்படுத்தாமல், எங்களைப் போன்றவர்களைத் திரும்பிப் போ; திரும்பிப் போ என்று அப்புறப்படுத்துவது வேதனையாய் இருக்கிறது. 

மாநில அரசு சரி! மத்திய அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?... நாலு நாள்கள் ஆச்சே? 

மாநில அரசுதான் எல்லாத்தையம் சரிசெய்யணும். மீட்புப்பணிக்கு மத்திய அரசு உதவி செய்திருக்கிறார்கள். விமானப்படை, கப்பல் படை... உதவி செய்திருக்கிறார்கள். ராணுவம் எப்போ வருவாங்கன்னா...உயிர் இழப்பு...தத்தளித்துக்கொண்டிருந்தா... வருவாங்க. தென்னம்பிள்ளை விழுந்துகிடக்கிறது என்றால், அவர்கள் என்ன செய்யமுடியும்? இரண்டாயிரம் கோடியை அறிவிச்சா போதுமா? என்ன செய்யப்போகிறோம். தமிழக முதல்வர் 1000 கோடி அறிவிச்சிருக்கார். நான் நேரில் போய்ப் பார்த்தேன். அங்கே உடனே சில தேவைகள் இருக்குன்னு புரிஞ்சிகிட்டு எந்த இடத்துக்கு என்ன மாதிரி உதவி வேணும் என்பதை நான் விசாரித்து பத்து லட்ச ரூபாயை நிவாரணத்தொகையாக அறிவித்தேன். நான் எங்கேயுமே போகாமல் வெறும் செக்கை மட்டும் கொடுத்தால்... அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் போய்ச் சேராது. அதுபோலத்தான் மாநில அரசு அந்த வேலையைச் செய்கிறது.  அதுமுடிந்தவுடன், மத்திய அதிகாரிகள் வந்து உண்மையான தேவைகளை கணக்கிட்டு அனுப்புவாங்க. இது எப்பவுமே உள்ள நிர்வாகம்தான். ஆனா.. தமிழ்நாட்டில் எல்லாத்தையும் அரசியலா ஆக்குகிறார்கள். முதல்ல... குறை சொல்கிறவர்கள் களத்தில் இறங்குங்கள். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுங்கள்.  தேர்தல் சமயத்தில் ஓட்டுக்கேட்கும்போது எல்லா கட்சியினரும் திரண்டு போகிறோம். ஆனால், மக்களுக்கு பிரச்னையின்னா... பலரும் போவதில்லை. இந்த மனநிலை மாற வேண்டும். மீட்பு நிவாரணப் பணிகளில் தென்படும் குறைகளைச் சொல்லாதீர்கள். குறையைத் தீர்த்து வையுங்கள். அரசாங்கமே எல்லாத்தையும் சரிசெய்யணும்னா...அது எப்படி சாத்தியமாகும்? 


டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற விவகாரங்களில் மத்திய அரசை மக்கள் எதிர்க்கிறார்கள். அதனால், தற்போது கஜா புயல் நிவாரணப் பணிகளில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதாக சிலர் பேசுகிறார்களே... நான்கு நாள்கள் ஆகியும் மத்திய குழுவினர் இன்னும் வரவில்லை. மத்திய ராணுவம் மீட்புப்பணிக்கு வரவில்லை. பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ புயல் பாதித்த பகுதிகளுக்கு விசிட் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதையெல்லாம் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே? 

அப்படியெல்லாம் ஏதுமில்லை. எண்ணெய் நிறுவனங்கள் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். புயல் சேதங்களைப் பார்க்க மத்தியக் குழு நிச்சயம் வருவார்கள். நிர்வாக ரீதியான வழிமுறை இருக்கிறது. நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். பிரதமர், உள்துறைச் செயலாளர் எல்லாம் புயல் சேதம் குறித்து மாநில அரசுடன் பேசியிருக்கிறார்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நான் சில உதவிகளைக் கேட்டேன். உடனே அவர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசியிருக்கிறார். எங்கள் கட்சியின் தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் போகிறார்கள். மாநில பி.ஜே.பி சார்பில் உடனடியாக 100 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப்பணியை கவனிக்க அங்கே போகிறார்கள். நானும் மீண்டும் போகப்போகிறேன். நான், பொன்னார் போனோம். சி.பி.ஆர் அடுத்து போகிறார்.  அவசரமான சூழ்நிலையில், கோரிக்கை வைக்கலாம். ஆனால், குறைகளையே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி. பாஸிட்டிங் அப்ரோச்சில் போக வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

நீங்கள் விசிட் போனபோது, மக்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டம் நடத்துகிறார்களா அல்லது, வேறு யாராவது தூண்டிவிடுகிறார்களா? 

சிலர் தூண்டிவிடுகிறார்கள். மக்களைக் குழப்பிக்கொண்டிருந்த ஒருவரை கையைப்பிடித்து, `ஐயா, குழப்பாதீங்க' என்று கேட்டுக்கொண்டேன். `ஒரு மணிநேரத்தில் தண்ணீர் கொண்டுவருகிறேன்' என்றேன். அங்கிருந்த ஒருவர் மட்டும், `இன்னைக்கு குடுப்பீங்க. நாளைக்கு குடுப்பீங்களா? நாங்க எழுந்திருக்கமாட்டோம்' என்கிறார். நான் சமாதானப்படுத்தினேன். உடனே மக்களைப் பார்த்து, `இவுங்கெல்லாம் இப்படித்தான் சொல்லுவாங்க. நமக்கு தண்ணீர் கிடைக்கணும்னா... அப்படியே உட்காருங்க' என்கிறார். பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் போகும் நோக்கில் ஒருசிலர் இப்படி செய்கிறார்கள். அதிராம்பட்டினத்தில், ஊருக்குள்ளே அழைத்தார்கள். போய்ப் பார்த்தேன். திடீரென.. `கலெக்டரை வரச் சொல்லுங்கள். அவர் வந்தபிறகு, நாங்கள் ரோட்டைவிட்டு எழுந்திருக்கிறோம்' என்று மாற்றிப் பேசினார்கள். ஆனாலும், நான் கலெக்டரிடம் பேசினேன். அவரும் வி.ஏ.ஒ.-வை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். நான் விசிட் போனது முற்றுப்புள்ளி அல்ல! இனி, தொடர்கதையாக இருக்கும். இப்போது என் நிவாரண உதவிப் பணிகளை துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறேன்'' என்றார்.