Published:Updated:

மிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா?
மிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா?

மிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா?

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா?

‘‘நெருங்குகிறது க்ளைமாக்ஸ் என்று கூறியிருந்தார் கழுகார். ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால் ஆன்டி க்ளைமாக்ஸாகிவிடும் போலிருக்கிறதே!’’

கழுகார் உள்ளே வந்துகொண்டிருக்கும் நேரம் பார்த்து, அவர் காதில் விழுவதுபோல சொல்லிக் கொண்டிருந்தோம்.

‘‘ஆஹா, எனக்கும்கூட உளவாளிகளை வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே... நீங்கள் நினைக்கும் க்ளைமாக்ஸுக்கு பிறகு வருகிறேன்’’ என சிரித்தபடியே சொன்ன கழுகார், “தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோரின் கவனமும் கிறிஸ்டி மற்றும் எஸ்.பி.கே குழுமங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டுகளில் பதிந்திருக்க, இன்னொரு விவகாரத்தைக் கையிலெடுத்து சத்தமில்லாமல் சம்மன் அனுப்பிக் கொண்டிருக்கிறது வருமானவரித் துறை’’ என்று தொடர்ந்தார்.

‘‘என்ன அது?’’

‘‘கொஞ்ச நாள்களாக அடங்கிக் கிடந்த குட்கா விவகாரம்தான் அது. இந்த விவகாரத்தில், தமிழகத்தில் உள்ள முக்கியமான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரின் தலையும் உருண்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தமிழக போலீஸ், விவகாரத்தையே கிடப்பில் போட்டிருந்தது. பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விஷயம் சி.பி.ஐ-யின் கைகளுக்குப் போனது. ஏற்கெனவே வருமானவரித் துறையினர் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் சி.பி.ஐ களம் புகுந்தது. இந்நிலையில்தான், ஜூலை 15-ம் தேதியிலிருந்து போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் வருமானவரித் துறையிலிருந்து சம்மன் பறக்க ஆரம்பித்துள்ளது.’’

‘‘ஒரே குழப்பமாக இருக்கிறதே... சி.பி.ஐ விசாரிக்கும்போது, வருமானவரித் துறை எதற்காக சம்மன் அனுப்புகிறது?’’

மிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா?

‘‘குட்கா வியாபாரி மாதவ ராவ் குடோனிலிருந்து கைப்பற்றப்பட்ட கணக்கு நோட்டில், மாமூல் வாங்கியதாகப் பலரின் பெயர்கள் சங்கேத மொழியில் குறிப்பிடப் பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, மாதவ ராவிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அவர்களை இரும்புப்பிடியாக இறுக்குவதற்கு போதுமான ஆதாரங்களை உருவாக்குவதற்காகவே இது. ‘உங்களுக்குள் என்ன பரிவர்த்தனை’ என்று வருமானவரித் துறை கேட்கப் போகிறது. ‘விசாரணையைப் பார்த்து எந்தெந்த அதிகாரிகள் பதற்றமடைகிறார்கள்; குட்கா விவகாரத்தில் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு யார் யார் உதவி செய்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளத்தான் இந்த ஏற்பாடு’ என்று சி.பி.ஐ வட்டாரத்தில் பேசப்படுகிறது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் எஸ்.பி-யாக இருக்கிறார் அஸ்ரா கார்க். அவருக்குக்கூட தெரியாத அளவுக்கு இந்த அதிரடி ஆக்‌ஷன்களை மறைத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளும். தமிழகத்தின் சி.பி.ஐ தலைமை அலுவலக அதிகாரியாக இருக்கும் துரைகுமாருக்கும்கூட தெரியாது. அந்த அளவுக்கு இது ரகசியமாக நடந்துள்ளது.’’ 

‘‘யாராவது இந்தப் பொறியில் சிக்கியிருக்கிறார்களா?’’

‘‘மாநகரக் காவல்துறையின் குற்றப்பிரிவில் ஒரு முக்கிய அதிகாரி சிக்கியிருக்கிறாராம். இவரின் பேட்ச்மேட்களான இரண்டு அதிகாரிகள், குட்கா விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் தகவல்களைப் பரிமாறியதுடன், அவர்களுக்காக வேறு சில வேலைகளையும் முன்னெடுத்துச் செய்தாராம். ஒருவகையில் இவரும் ஆதாயம் அடைந்திருப்பதால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாகவே, அந்த இருவருக்கும் உதவியிருக்கிறார் என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான், தற்போது வருமானவரித் துறையிலிருந்து இந்த அதிகாரிக்கும் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. ‘தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதே விநாயகா’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் அந்த அதிகாரி. குட்கா விவகாரம் என்றால், எல்லோருடைய நினைவுக்கும் முதலில் வருபவர்கள்... சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் தற்போதைய போலீஸ் டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் ஆகியோர்தான். ஆனால், இந்த இருவரைப் பற்றியும் டெல்லிக்காரர்கள் எதையும் கேட்கவில்லை. மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் இரண்டு அதிகாரிகளைப் பற்றித்தான் அதிகம் விசாரிக்கின்றனர்.’’

‘‘சி.பி.ஐ பிடி இறுகும்போது, அதை உடைக்க யாரும் முயற்சி செய்யவில்லையா?’’

‘‘நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உளவுத்துறையிலிருந்து இதுபற்றிப் பேசியுள்ளனர். ‘இந்த விவகாரத்தில் நாம் யாருக்காகவும் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் விசாரணையைச் சந்திக்கட்டும்’ என்று அவர் சொல்லிவிட்டாராம்.’’

‘‘சரி, க்ளைமாக்ஸ் பற்றி இன்னும் பேசவே இல்லையே?’’

‘‘வருகிறேன்... எஸ்.பி.கே நிறுவனங்களில் நடைபெற்ற ரெய்டின் வேகம் ஜூலை 18-ம் தேதியே தணிந்துவிட்டது. அதனால்தான், கோவை விமான நிலையத்தில் முதல்வர் உற்சாகமாகப் பேசினார். கேட்காமலே பல கேள்விகளுக்குப் பதில் சொன்னார். இந்த ரெய்டு என்பதே தமிழக அரசைக் குறிவைத்துத்தான் என்று முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா? ஆனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற வகையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கும் வைக்கப்பட்ட குறிதான் இது என்கிறார்கள். பிரதமர் மோடிக்கு எதிராகக் கொம்பு சீவி விடப்படும் செல்வாக்கான அமைச்சர் அவர். தமிழக ரெய்டு விஷயம் தெரிந்து அவர் பதறியதும்தான், இதன் வேகமும் விசாரணையும் கொஞ்சம் தணிந்ததாம். அவர் ஏன் பதறினார் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் விசாரிக்கிறார்கள். வருமானவரித் துறையின் வேகம் குறைந்தது என்றாலும், அமலாக்கத் துறையும் சி.பி.ஐ-யும் அடுத்து இந்த விவகாரத்தில் இறங்கும்’’ என்ற கழுகார், கிளம்புவதற்கு முன்பாக ஒரு தகவல் சொன்னார்.

‘‘ஆர்.கே.நகரில் தினகரன், மீடியாக்களிடம் பேசியபோது, ‘ஒரு டைரி சிக்கியிருக்கிறது. அதில் அமைச்சர் ஒருவரின் பி.ஏ பெயர் இருக்கிறது. அவர் மன்னார்குடிக்கு பக்கத்து ஊர்க்காரர். பெயர் பிச்சைக்கண்ணு என்கிறார்கள். விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டார். அவரைப்பிடித்தால், கொடுக்கல் வாங்கல் விவகாரம் தெரியவரும்’ என்று சஸ்பென்ஸ் வைத்துச் சொன்னார். அந்த அமைச்சரும் டெல்டா ஏரியாக்காரர்தானாம். இந்த டைரி விவகாரம் பெரிதாக வெடிக்கக்கூடும்.’’ 

படங்கள்: அ.குரூஸ்தனம், வெ.நரேஷ்குமார்
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

அதிரடி தீர்ப்பு... அவசரமாக முடிந்த சட்டப்பேரவை!

பு
துச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி மத்திய பி.ஜே.பி அரசால் எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்ட சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டமன்றத்துக்குச் சென்றனர். அவர்களை, வாயில் காவலர்களை வைத்து வாசலுடன் திருப்பி அனுப்பியது புதுச்சேரி அரசு. முன்னதாக, ‘சட்டமன்றத்துக்குள் செல்ல மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் சுதந்திரம் உள்ளது. அதைத் தடை செய்தால், அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்” என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

மிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா?

இந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், இந்த நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது காங்கிரஸ் கட்சி. இந்த வழக்கில், ஜூலை 19-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்திருந்தனர். ஒருவேளை, நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு அமைந்துவிட்டால், தங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்று பயத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அறிவித்த தேதிக்கு முன்பாகவே நடத்தி முடித்தனர்.

இதைக் கணித்த கிரண் பேடி, பட்ஜெட் நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ’செக்’ வைத்துவிட்டார். இதற்கிடையில் இவர்கள் எதிர்பார்த்ததைப் போல ‘நியமன எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கத் தடையில்லை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. ஆனால், ‘‘ஜூலை 26-ம் தேதி கிரண்பேடி ஒப்புதல் அளித்தால் உடனே அரசு சட்டப்பேரவையைக் கூட்டித்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளத்தைப் போட முடியாது. அப்படி பேரவையைக் கூட்டினால் அதில் நியமன எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பை உருவாக்கி யிருக்கிறார் கிரண்பேடி” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

‘‘ஒற்றை முடிவு கூடாது!’’

ன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம்’ என்று ஜெயலலிதாவால் பெருமையாக வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க-வில், இப்போது ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கே படாதபாடுபடுகிறார்கள். ஜூலை 16-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதலில் பேசிய தமிழக முதல்வரும் அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “இரண்டரை கோடி உறுப்பினர்களை சேர்க்கலாம் என்று இலக்கு வைத்தோம். ஆனால், இதுவரை 89 லட்சம் உறுப்பினர்களை மட்டுமே சேர்த்துள்ளோம். இன்னும் 10 நாள்களில் உறுப்பினர் சேர்க்கையை நிறைவுசெய்யுங்கள். தினகரன் அணிக்குப் போனவர்கள் துடிப்புடன் உள்ளனர். நாம் ஆளும்கட்சியாக இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறீர்கள்” என்று கொஞ்சம் கறாராகவே பேசியுள்ளார்.

மிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா?

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “அம்மா இருந்தவரை, நமது கட்சியில் ஒற்றை முடிவு மட்டுமே இருந்தது. அம்மா சொல்வதுதான் அறிவிப்பு... அவர்கள் எடுப்பதுதான் முடிவு என்ற நிலை இருந்தது. இப்போது நிலைமை அப்படியல்ல. அதனால், வழிகாட்டுக் குழு அமைக்கப்படும் என்று சொல்லியிருந்தோம். அந்தக் குழு அமைய வேண்டும். அதுவே கட்சி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுத்து, தலைமையில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதலுக்குத் தெரிவிக்கும். அதன்படி, கட்சியின் செயல்பாடுகள் இருக்கும்” என்று பேசியுள்ளார். இது எடப்பாடிக்கு எதிர்பாராத அதிர்ச்சி.

‘‘இணைந்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் வழிகாட்டுக் குழு நியமிக்கப்படவில்லை. இதனால், பன்னீரின் ஆதரவாளர்கள் கடும் விரக்தியில் இருந்தனர். அவர்களுக்காகவே இப்போது பன்னீர் பேசியிருக்கிறார்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு