பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

பி.மணி, வெள்ளக்கோவில்.

‘விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக மாற்றுவதே என் இலக்கு’ என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறாரே... இது நடக்கக் கூடியதுதானா?


முதலில் இம்மாதிரியான விவசாயிகளுக்கு அனுகூலம் செய்யும் முயற்சியைப் பாராட்டுவோம். கடினமான இலக்குதான். ஆனால், செய்யமுடியும். நாடு முழுக்க என்ன பயிரிடுகிறார்கள்... எப்போதெல்லாம் பயிரிடுகிறார்கள்... எவ்வளவு பயிரிடுகிறார்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான தரவுகளும் திரட்டப்பட வேண்டும்; தேவையைக் கருத்தில்கொண்டு விளைபொருள்களின் உற்பத்தி பரப்பைக் கூட்டவும் குறைக்கவும் விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும்; சந்தையில் நிகழும் சிண்டிகேட் மோசடிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; நெல், கோதுமை போல அரசாங்கமே நேரடிக் கொள்முதல் மூலமாக விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விலை நிலவரம் நாடு முழுக்க ஒரே மாதிரியாக இருப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இடுபொருள்களின் விலை கூடியவரை அதிக வேறுபாடு இல்லாமல் செய்யவேண்டும். இப்படி ஏகப்பட்ட ‘வேண்டும்’களை உள்ளடக்கியது இது. ஏற்கெனவே தனியார் அமைப்புகள் சில, சிறிய அளவில் இந்த முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக இயங்கவும் செய்கின்றன. அவர்களின் அனுபவத்தைக் கேட்டறிந்தால்... 2022-ல் சாத்தியமே!

கழுகார் பதில்கள்!

ஆர்.குமார், மதுரை.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, தன் கட்சிக்காரர்கள் மத்தியில் கதறி அழுதிருக்கிறாரே?


‘முதல்வர் நாற்காலியில் நான் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கவில்லை. கூட்டணி அரசை நடத்துவதன் வலி எனக்குத்தான் தெரியும். சிவபெருமான் விஷம் அருந்தியதுபோல, நான் அந்த வலியை விழுங்கியுள்ளேன்’ என்று கட்சிக்காரர்கள் நடத்திய பாராட்டு விழாவில் பேசி அழுதிருக்கிறார் குமாரசாமி. மங்களூரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கலந்துகொண்ட சில பெண்கள், ‘எங்களுக்கு குமாரசாமி முதல்வர் இல்லை’ என்று கூறியது தன் மனதைப் புண்படுத்திவிட்டதாக அவர் சொல்கிறார். ஆட்சியில் அமர்ந்த தனக்கு அவகாசம்கூட கொடுக்காமல் விமர்சனம் செய்வது ஏன் என்பது அவரின் கேள்வி. ‘‘குமாரசாமி ரொம்ப நாள் வருத்தப்பட வேண்டியதில்லை. சீக்கிரமே கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் வரும்’’ எனக் கிண்டல் செய்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.  

பாபு கே.ஆர்.கே, இமெயில்.

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் விடும் எச்சரிக்கைகள் அதிகமாகிக்கொண்டே போவதைக் கவனித்தீரா... அரசின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதைத்தானே இது காட்டுகிறது?


‘கோயில்களில் இருக்கும் சிலைகளைப் பாதுகாக்க, உடனடியாகப் பாதுகாப்பு அறைகளைக் கட்டவேண்டும்’ என்பது உள்பட நிர்வாக விஷயங்களில் பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது. ஓர் ஆண்டுக்கு மேலாகியும், அவை கிடப்பிலேயே இருக்கின்றன. சிலைத்திருட்டு தொடர்கிறது. இப்படி அதிஅவசியமாக தேவைப்படும் பல்வேறு விஷயங்களில் கையைக் கட்டிக்கொண்டுவிடுகிறது எடப்பாடி பழனிசாமி அரசு. அதேசமயம், தேவையற்ற விழாக்களில் மட்டும் தீவிரம் காட்டுகிறார்கள். அதனால்தான், ‘தலைமைச் செயலாளரைக் கூண்டில் ஏற்றிக் கண்டனம் தெரிவிக்க வேண்டியிருக்கும்’ என்று உச்சபட்சமாகக் கோபத்தைக் காட்டியுள்ளது உயர் நீதிமன்றம்.

கழுகார் பதில்கள்!

ஏ.பி.மதிவாணன், சென்னை.

தன்னுடைய கொளத்தூர் தொகுதியில் அடிக்கடி நலத்திட்ட உதவிகளை வாரி வழங்குகிறார் மு.க.ஸ்டாலின். மற்ற எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?


ஸ்டாலின் தன்னை கொளத்தூர் தொகுதியின் முதல்வராக நினைத்துக்கொண்டிருக்கிறார் போல! அதனால்தான் எந்த விஷயம் என்றாலும், அவர் கொளத்தூர் தொகுதிக்குப் போய்விடுகிறார். அவர் தமிழ்நாட்டில், அரசியல் சட்டம் அங்கீகரித்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருக்கிறார். அது அவருக்கு ஞாபகம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட தமிழகத்தில் பாதி தொகுதிகளை வென்று தன் கைவசம் வைத்திருக்கும் தி.மு.க., எதிர்க்கட்சிக்கான பணிகளைச் சரிவர நிறைவேற்றவே இல்லை என்பதுதான் பரவலான குற்றச்சாட்டாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் கவர்னருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதில்தான் மும்முரம் காட்டிவருகிறார்கள். மடியில் கனம் இருப்பவர்தானே பயப்பட வேண்டும்? கவர்னரின் ஆய்வைப் பற்றி முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் கவலைப்பட வேண்டும். அவர் எதிர்க்க வேண்டியது எடப்பாடியையா, பன்வாரிலால் புரோஹித்தையா?  

அருண்குமார், இமெயில்.

தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?


முந்தைய கேள்விக்கான பதிலின்படி, அவர் எவ்வாறு பயணிக்கிறார் என்பதைப் பொறுத்தே அந்த வாய்ப்பு அமையும்.

அர்ஜுன் கோவிந்தசாமி, இமெயில்

‘முடிந்த அளவு தமிழைப் பயன்படுத்துங்கள். ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுங்கள்’ என்று தமிழக பிரபலங்களின் நேர்காணலின்போது மலேசிய தமிழ் வானொலி வேண்டுகோள் வைத்துள்ளதாமே?


நல்ல வேண்டுகோள். அடிக்கடி வாட்ஸ்அப்பில் பார்க்கும் ஒரு தகவலில், ‘உங்களுக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கலாம். ஆனாலும், வங்கி ஏ.டி.எம்-களில் தமிழைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். அப்போதுதான், தொடர்ந்து அந்த இயந்திரத்தில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான வசதியை விட்டு வைத்திருப்பார்கள். குறைந்த அளவிலானவர்களே தமிழைப் பயன்படுத்தினால், ஒரு கட்டத்தில் அதை நீக்கிவிடுவார்கள். தமிழ் மட்டுமே தெரிந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று அழகாகக் கூறப்பட்டுள்ளது. நாமும் தமிழைப் பயன்படுத்தலாமே!

கே.தண்டபாணி, திண்டுக்கல்.


‘வாழும் காமராஜரே’ என்று டி.டி.வி.தினகரனுக்கும் போஸ்டர்கள் போட ஆரம்பித்துவிட்டனரே?

காமராஜர் திரும்பி வரமாட்டார் என்ற தைரியம் இதுவரை காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமே இருந்தது. இப்போது அ.ம.மு.க-வுக்கும் வந்திருக்கிறது.

கழுகார் பதில்கள்!

ஆர்.ஜெயவேல், கோயம்புத்தூர்.

நடிகர் கமல்ஹாசனைப் போலிப் பகுத்தறிவுவாதி என்று விளாசுகிறாரே தமிழிசை சௌந்தர்ராஜன்?


அரசியலிலிருந்து மதத்தைத் தள்ளிவைப்பது போலவே, தனிப்பட்ட நம்பிக்கைகளையும் தள்ளிவைத்துவிட வேண்டும். நாகரிகமற்ற தனிநபர் தாக்குதல்களை எவருமே செய்யக் கூடாது. அதுதான் கமல்ஹாசன், ‘நான் மூடநம்பிக்கையை ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை. ஏழ்மையையும் ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே!

க.பூமிபாலன், கோவை.

பொதுக்கழிப்பிடங்களைச் சுத்தமாக வைக்க முடியாததற்குக் காரணம் அரசா, மக்களா?

எல்லாக் கிராமங்களிலும் பாழடைந்த ஒரு நினைவுச்சின்னம்போல பொதுக் கழிப்பிடம் ஒன்று இருக்கும். கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருக்கத் தண்ணீர் தேவை; தண்ணீரே இல்லாமல் கழிப்பறை கட்டி, அதை உருப்படாமல் செய்துவிடுகிறது அரசு. அப்போதுதானே இன்னொரு இடத்தில் புதிதாக வேறொன்றைக் கட்டிக் காசு பார்க்க முடியும்!

பொதுவாகவே பொதுக்கழிப்பிடங்களை அரசும் பராமரிப்பதில்லை; அப்படியே பராமரித்தாலும், அதைப் பொதுமக்களும் பின்பற்றுவதில்லை. ‘இது நம்முடைய வரிப்பணத்தில் உருவானது’ என்ற உரிமையும் பொறுப்பு உணர்வும் நம் மக்களிடம் அவ்வளவாக இல்லை. இந்தியாவில் சட்டங்களுக்குக் குறைவில்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்தும் அமைப்புகள்தான் யுகம் யுகமாகத் தூங்கிவழிகின்றன. செல்வாக்கு இருந்தால் எந்தத் தப்பையும் செய்யலாம் என்கிற நிலை இருக்கும்போது எதையுமே ஒழுங்குபடுத்த முடியாது.

திருமூர்த்தி, இமெயில்.

நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் அதிகம் செல்வாக்கு இருப்பதாக பி.ஜே.பி நம்புகிறதோ?


நோட்டாவைவிட கூடுதல் ஓட்டு வாங்கித் தந்துவிட்டாலே, பி.ஜே.பி-யை விட அதிக செல்வாக்கு இருப்பதாகத்தானே அர்த்தம்!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு