Published:Updated:

களைகட்டும் கோஷ்டி மோதல்... குற்றாலத்துக்கு குஷி டூர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
களைகட்டும் கோஷ்டி மோதல்... குற்றாலத்துக்கு குஷி டூர்!
களைகட்டும் கோஷ்டி மோதல்... குற்றாலத்துக்கு குஷி டூர்!

விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை வியூகம்

பிரீமியம் ஸ்டோரி

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க-வுக்குள் அதிகாரப் போட்டியும் கோஷ்டி மோதலும் களைகட்டிய சூழலில், அமைச்சர் விஜயபாஸ்கர் தங்களைப் பழிவாங்குவதாக ஒரு தரப்பினர் குமுறிவருகிறார்கள்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என அணிகள் பிரிந்தபோது, முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அறந்தாங்கி ராஜநாயகம், புதுக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றார்கள். இரு அணிகளும் இணைந்த பிறகும், புதுக்கோட்டை அ.தி.மு.க-வில் கோஷ்டி மோதல் நீடித்துவருகிறது. இன்னமும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை விஜயபாஸ்கர் ஓரங்கட்டுவதாகக் குமுறுகிறார்கள்.

ஜூலை 5-ம் தேதி, ராஜசேகரனுக்கு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் பதவியும், கார்த்திக் தொண்டைமானுக்கு இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பொறுப்பும் அறிவிக்கப்பட்டன. அதனையடுத்து, பதவிகள் வழங்கியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மாவட்டம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. போஸ்டர் ஒட்டிய ஈரம் காய்வதற்குள், ராஜசேகரனிடமிருந்து புதிய பொறுப்பு பறிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளதாகவும், தனக்கு வேண்டாதவர்களை விஜயபாஸ்கர் பழிவாங்குவதாகவும் புதுக்கோட்டை அ.தி.மு.க-வில் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

களைகட்டும் கோஷ்டி மோதல்... குற்றாலத்துக்கு குஷி டூர்!

இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ராஜசேகரனும் அமைச்சர் விஜயபாஸ்கரும் மிக நெருக்கமாக இருந்தவர்கள். 2012-ல் நடந்த புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின்போது, விஜயபாஸ்கர் அமைச்சராக இல்லை. இடைத்தேர்தலுக்காக வந்த அமைச்சர்களைக் கவனிக்கும் பொறுப்பை ராஜசேகரனிடம் கொடுத்திருந்தார் விஜயபாஸ்கர். அந்த வகையில் ஓ.பி.எஸ் குடும்பம், ராஜசேகரனுக்கு நெருக்கமானது. அடுத்து, விஜயபாஸ்கர் அமைச்சரானார். ராஜசேகரன் புதுக்கோட்டை நகர்மன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ராஜசேகரன் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து, அவரை வெற்றிபெற வைத்தார் விஜயபாஸ்கர். அடுத்த சில வருடங்களில், இவர்கள் இருவருக்கும் இடையிலான ஈகோ, மோதலாக வெடித்தது.

தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என விஜயபாஸ்கர் நினைத்தார். அந்த நேரத்தில், ஓ.பி.எஸ் அணி உருவானது. கார்த்திக் தொண்டைமான், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், ராஜசேகரன் ஆகியோர் ஓ.பி.எஸ் அணிக்கு மாறினர். அப்போது, இரண்டு கோஷ்டிகளுக்குமான மோதல் இந்த மாவட்டத்தில்தான் பெரிதாக இருந்தது.

சில மாதங்களில் அணிகள் இணைந்தன. மீண்டும் விஜயபாஸ்கர் ஆதிக்கம் செலுத்தியதுடன், அணி மாறியவர்களைப் பழிவாங்க ஆரம்பித்தார். லோக்கல் விழாக்களில் உட்கார நாற்காலிகள் வழங்காமல் அவமதிப்பது தொடர்ந்தது. இந்நிலையில்தான், கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜசேகரனுக்கும் கார்த்திக் தொண்டைமானுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத விஜயபாஸ்கர், தலைமையிடத்தில் பொங்கியுள்ளார். மறுநாளே, ராஜசேகரனின் பொறுப்பு பறிக்கப்பட்டது” என்றார்கள்.

எதிர் அணியினரைப் பழிவாங்கும் விஜயபாஸ்கர், இன்னொரு பக்கம் தன் ஆதரவாளர்களை ‘கூவத்தூர்’ பாணியில் குஷிப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளார். ஜூலை 12-ம் தேதி இரவு, அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்து, 500-க்கும் மேற்பட்ட தன் ஆதரவாளர்கள், தனக்குச் சாதகமான புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கவைத்து, மூன்று வேளையும் கறிவிருந்து படைத்துள்ளார். புதுக்கோட்டை நகர டி.எஸ்.பி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குற்றாலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

களைகட்டும் கோஷ்டி மோதல்... குற்றாலத்துக்கு குஷி டூர்!

இந்தச் சூழலில், ‘முத்தரையர்களுக்கு அ.தி.மு.க-வில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. கட்சிப் பொறுப்புகளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என்று புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே சிலர் பேனர் வைத்தனர். அது, கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பதவிப் பறிப்பு குறித்து ராஜசேகரனிடம் கேட்டதற்கு, “அ.தி.மு.க-வில் அணிகளோ, பிளவோ இல்லை. தலைமைக்குக் கட்டுப்பட்டு உண்மையாக இருக்கிறோம். அதன் விளைவாகவே, கட்சித் தலைமை எனக்குப் பொறுப்பு வழங்கியது. பின்னர், பொறுப்பு எடுக்கப்பட்டுள்ளது. யாருக்கு எப்போது என்ன தரவேண்டும் என்று கட்சித் தலைமை முடிவெடுக்கும். அதை ஏற்கிறேன். தனிமனித விருப்புவெறுப்பு, கட்சிக்கு அப்பாற்பட்டது” என்றார்.

விஜயபாஸ்கர் ஆதரவாளர்களோ, “சில வருடங்களுக்கு முன்புவரை விஜயபாஸ்கருக்கு எதிராகச் செயல்பட்ட நகரச் செயலாளர் பாஸ்கர், முன்னாள் அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் இப்போது விஜயபாஸ்கர் பக்கம் உள்ளனர். யாருடனும் விஜயபாஸ்கர் பகைமை பாராட்டுவதில்லை. கட்சிக்காரர்களை வெளியூர் அழைத்துச்சென்று மகிழ்ச்சியாக வைத்திருப்பது புதுக்கோட்டை மாவட்ட அரசியலுக்குப் புதிதல்ல. இதை, தி.மு.க-வினரும் பலமுறை செய்துள்ளார்கள். பல நெருக்கடிகளைத் தாண்டி, மாவட்டத்தில் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மெனக்கெடுகிறார்” என்றனர்.

ஓஹோ!

- சி.ய.ஆனந்தகுமார்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு