Published:Updated:

மார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’? - மல்லுக்கட்டும் சங் பரிவார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’? - மல்லுக்கட்டும் சங் பரிவார்
மார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’? - மல்லுக்கட்டும் சங் பரிவார்

மார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’? - மல்லுக்கட்டும் சங் பரிவார்

பிரீமியம் ஸ்டோரி

பி.ஜே.பி-க்குப் போட்டியாக ராமாயணப் பாராயணம் செய்வதிலும், கிருஷ்ண ஜெயந்திக்கு ஊர்வலம் நடத்துவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபடுவதாகக் கேரள மாநில சங் பரிவார் அதிரடி புகார் கிளப்பியிருக்கிறது.

ஆடி மாதத்தை மலையாளத்தில் ‘கற்கிடக’ மாதம் என்கிறார்கள். இந்த மாதத்தில் ராமாயணப் பாராயண வழிபாடு நடப்பதால், இதை ‘ராமாயண மாதம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மாதத்தில், தினமும் அந்தி சாயும் வேளையில் வீடுகளில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ராமாயணம் படிப்பது பாரம்பர்ய வழக்கம். மாதத்தின் கடைசி நாளில், ராமரின் பட்டாபிஷேகம் குறித்துப் பாராயணம் செய்வார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’? - மல்லுக்கட்டும் சங் பரிவார்

வீடுகளில் பாராயணம் செய்வதைத் தாண்டி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான ஷேத்திர சம்ரக்ஷண சமிதி சார்பில் வருடம்தோறும் பொதுநிகழ்ச்சியாக ராமாயணப் பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் போட்டியாக, கேரளத்தை ஆளுகிற மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘சமஸ்கிருத சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்த ஆண்டு ராமாயணப் பாராயணம் நடத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

திருவனந்தபுரம் மாவட்ட பி.ஜே.பி தலைவரான சுரேஷ், “மார்க்சிஸ்ட் கட்சியினர், ‘ராமன் என்று ஒருவர் வாழ்ந்ததில்லை, அது கட்டுக்கதை’ என்று கூறி ராமாயணத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். அவர்கள் இன்று, இந்து மதத்தின் பல சடங்குகளையும் கையிலெடுத்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது ‘பாலகோகுலம்’ என்ற பெயரில் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட சிறுவர்களின் ஊர்வலத்தை நாங்கள் நடத்திவருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இப்போது, நாராயண குரு ஜெயந்தி போன்றவற்றையும் அவர்கள் நடத்துகிறார்கள். இனி அவர்கள் சிவப்புக் கொடியை மாற்றி காவிக்கொடியை பிடிக்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள்” என்றார்.

இதை மறுத்துள்ளார், மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன். அவர், ‘‘மார்க்சிஸ்ட் கட்சி, ராமாயண மாதத்தைக் கொண்டாடவிருக்கிறது என்று அவதூறு பரப்புகிறார்கள். சமஸ்கிருத சங்கம் என்பது எங்கள் அமைப்பு அல்ல. அது, ஒரு சுயேச்சையான அமைப்பு. ராமனையும் ராமாயணத்தையும் வைத்துக்கொண்டு இந்துக்களிடம் உணர்வைத் தூண்டுகின்றனர் என்பதை அம்பலப்படுத்தவே, விழிப்பு உணர்வுக் கருத்தரங்கம் நடத்த அது முடிவு செய்திருக்கிறது. சமஸ்கிருத சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் ஒரு கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது. அதில் சமஸ்கிருதப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தினோம் என்பது தவறு. மதச் சடங்குகள் எதிலும் எங்கள் கட்சி பங்கேற்காது” என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’? - மல்லுக்கட்டும் சங் பரிவார்

சமஸ்கிருத சங்கத்தின் அமைப்பாளரான திலகராஜ், “புராணங்களிலும் இதிகாசங்களிலும் உள்ள விஷயங்களை வலதுசாரி சக்திகள் தவறான அர்த்தப்படுத்துகிறார்கள். அதற்கு எதிராகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். முற்போக்கு, மதச்சார்பற்ற சிந்தனைகொண்ட அறிஞர்கள், வரலாற்றாளர்கள், கல்வியாளர்களைக் கொண்ட அமைப்பு இது” என்றார். ஆனாலும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவான பலரும் இந்த அமைப்பில் இடம்பெற்றிருப்பதும், இவர்கள் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருப்பதும் வலதுசாரி அமைப்புகளை எரிச்சலடையச்  செய்துள்ளது.

- ஆர்.சிந்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு