Published:Updated:

“டோக்கன் கொடுத்தவர்கள் அ.தி.மு.க-வினர்தான்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“டோக்கன் கொடுத்தவர்கள் அ.தி.மு.க-வினர்தான்!”
“டோக்கன் கொடுத்தவர்கள் அ.தி.மு.க-வினர்தான்!”

“டோக்கன் கொடுத்தவர்கள் அ.தி.மு.க-வினர்தான்!”

பிரீமியம் ஸ்டோரி

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், தொகுதிக்கு வரும்போதெல்லாம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சுதந்திரமாகச் சென்றுவரும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ-வுக்கு, தன் சொந்தத் தொகுதியான ஆர்.கே.நகருக்குள் செல்வது பெரும்பாடாக இருக்கிறது. நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஜூலை 18-ம் தேதி ஆர்.கே.நகருக்குச் சென்றார் தினகரன். இதற்குமுன் ஆர்.கே.நகரில் தினகரன் முற்றுகையிடப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியதால், பாதுகாப்பு கேட்டு முன்கூட்டியே போலீஸுக்குக் கடிதம் கொடுக்கப் பட்டிருந்தது. அதனால், அவரது அலுவலகம் முன்பாக, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

“டோக்கன் கொடுத்தவர்கள் அ.தி.மு.க-வினர்தான்!”

தன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு காரில் தினகரன் வந்திறங்கினார். காலையிலிருந்தே காத்திருந்த ஒரு கும்பல், 20 ரூபாய் நோட்டுகளை உயரே காட்டியவாறு, ‘இருபது ரூபாய் இங்கே... இருபதாயிரம் எங்கே?’ என்று கோஷமிட்டது. அவ்வளவுதான். அடுத்த நிமிடம், எங்கிருந்தோ பாய்ந்துவந்த கற்கள், அந்தக் கும்பலின் நடுவே விழுந்தன. அ.தி.மு.க-வைச் சேர்ந்த கோபிநாத் என்ற இளைஞரின் மண்டை உடைந்தது. நாலாபுறமும் இருந்து கற்கள் பாய்ந்துவர, அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பொதுமக்களில் பலர், அதில் சிக்கிக்கொண்டனர். பெண் போலீஸார் இருவர், பொதுமக்களில் ஒருவர் என மேலும் மூவரைக் கற்கள் பதம் பார்த்தன.

நிலைமை மோசமாகவே, கூடுதல் போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த எண்ணூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா மீதும் கல் விழுந்தது. அவருக்குத் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. மயக்க நிலைக்குப்போன இன்ஸ்பெக்டர் பிரேமாவை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு வேறுவழியின்றி, ஆயுதப்படைப் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஒருபுறம் கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்க, தனது அலுவலகத்தில் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார் தினகரன். “என்னைத் தொகுதிக்குள் வரவிடாமல் அ.தி.மு.க-வினர் தடுக்கிறார்கள். இருபது ரூபாயைக் காட்டிப் போராட்டம் நடத்தியவர்கள், பொதுமக்கள் அல்ல. அவர்கள், அ.தி.மு.க-வினர். என் பெயரைச் சொல்லி டோக்கன் வழங்கியவர்களும் அவர்கள்தான். எனக்கு எதிராக என்ன நடந்தாலும், நான் தொகுதிக்குள் வருவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த வன்முறை குறித்து கோர்ட்டில் முறையிடுவேன்” என்றார் தினகரன்.

பின்னர், தினகரனைப் பாதுகாப்பாக வேறுவழியில் அவரின் ஆதரவாளர்கள் அழைத்துச்சென்றனர். தினகரனுடன் வந்திருந்த வெற்றிவேல், “தினகரனை எதிர்க்க வந்தவர்கள், கற்களை வைத்திருந்தனர். இது, மதுசூதனன் ஆதரவாளர்களின் வேலை” என்றார்.

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனனிடம் பேசியபோது, “என் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. முழு ஓய்வில் இருக்கிறேன். எங்கே யார் சண்டை போட்டாலும், என்னைக் காரணம் காட்டுவதையே வேலையாகச் சிலர் வைத்துள்ளனர். அதற்கு, நான் என்ன செய்ய முடியும்?” என்றார்.

இந்தக் கலவரத்தின் பதற்றத்தால், அந்தப் பகுதி முழுவதும் சுமார் ஆறு மணி நேரம் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. ‘வி.ஐ.பி தொகுதி’ என்று சொல்லப்படும்      ஆர்.கே.நகர் அவ்வப்போது அடிதடி நகராக மாறிவருகிறது.

- ந.பா.சேதுராமன்
படங்கள்: வீ.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு