பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

எஸ்.சந்திரன், பாலக்காடு.

‘நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளாரே?


‘நீட் தேர்வு கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்க்க நல்ல மொழிபெயர்ப்பாளர்களை தமிழக அரசு தரவில்லை’ என்று தொடர்ந்து மத்திய அரசு சொல்லிவருகிறது. இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல், தமிழக அரசு மௌனமாக இருக்கிறது. தமிழில் தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மாணவர்கள்தான் அதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.மாதவன், கிருஷ்ணகிரி.

‘தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது’ என நீண்ட புகார்ப் பட்டியல் வாசித்த அ.தி.மு.க., கடைசியில் மத்திய அரசை ஆதரித்து வாக்களித்ததே?

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று சொல்லிவிட்டபிறகு அழவா முடியும்?

இர.சத்யராஜ், ராஜேந்திரம். 

கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் ஐ.ஏ.எஸ் அறிக்கையின் தற்போதைய நிலை என்ன?


ஆட்சியாளர்கள்மீது நம்பிக்கை இல்லை என்பதற்காகத்தான், மேலூர் கிரானைட் குவாரிகளில் நடந்த மோசடிகளைக் கிளறி உண்மையைக் கண்டறிவதற்காக சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றமே நியமித்தது. ஆனால், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யாத தமிழக அரசு, அந்த விசாரணைக்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ, அவ்வளவும் கொடுத்தது. எல்லாவற்றையும் மீறி, தன் பணிகளைக் கிட்டத்தட்ட அவர் முடித்துவிட்டார். அதுதொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டார். பொதுவாக, அரசாங்கம் போடும் கமிஷன்களில்தான் தீர்வு கிடைக்காது. இப்போது, நீதிமன்றம் நியமித்த கமிஷனிலும் தீர்வு கிடைக்கவில்லை.

‘காய்ந்துபோன பூமியெல்லாம், வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ந்துபோய்விட்டால், துன்பப்படுபவர்கள் எல்லாம் தங்கள் கவலையைத் தெய்வத்திடம் முறையிடுவார்கள். ஆனால், அந்தத் தெய்வமே கலங்கி நின்றால், அந்தத் தெய்வத்துக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?’ என்று சொல்வதைத் தவிர, வேறு எதுவும் தோன்றவில்லை.

எம்.கண்ணையன், அரியலூர்.

2,000 ரூபாய் கள்ளநோட்டு பிடிபட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. ஆனால், ‘கள்ளநோட்டே அச்சடிக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது புதிய 2,000 ரூபாய் நோட்டு’ என்றார்களே... அதெல்லாம் பொய்யா?


தினம் தினம் மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தீவிரவாத அமைப்புகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழல் இருக்கும்போது, இதைத் தவிர்க்க முடியாது. காப்பானைவிட கள்ளன் பெரியவன்.

கே.கலைமணி, ஆர்.கன்னையன், ஈமெயில்

செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாகத் தூர்வாரினாலே சென்னையின் தண்ணீர்த் தேவையை ஓரளவு சமாளிக்கலாம். ஏன் ஒரு கட்சியும் இதைப்பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை?


செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், வீராணம் ஆகிய ஐந்து ஏரிகளை வைத்துக்கொண்டே ஓராண்டில் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குத்தான் சென்னைக்கு முழுமையாகத் தண்ணீர் வழங்க முடிகிறது. செம்பரம்பாக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு சென்னையின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்கமுடியாது. தூர்வாரிப் பராமரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், செம்பரம்பாக்கம் மட்டும் போதாது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கும் ஏரிகளை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றினாலே தண்ணீர்ப் பிரச்னை என்பது துளிகூட இருக்காது. ஆனால், ஆக்கிரமிப்பு செய்வதே அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கமும்தானே!

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னை, நெற்குன்றம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். தற்போது, அதே ஏரிக்குள் நீதிபதிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இப்போது சொல்லுங்கள்... இதைப் பற்றிப் பேசி என்ன பயன்?

கழுகார் பதில்கள்!

ஏ.மயில்சாமி, திருப்பூர்.

இரும்புப் பெண்மணி, தைரியசாலி என்றெல்லாம் புகழப்பட்ட ஜெயலலிதா, 30 ஆண்டு காலம் ஒரு குடும்பத்தின் கைப்பிடியில்... குறிப்பாக, சசிகலாவின் பிடியில் இருந்ததன் மர்மம்தான் என்ன?


ஜெயலலிதா ஒன்றும் தெரியாத அப்பாவி என்பது போலவே பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவே வேண்டி விரும்பி செய்துகொண்ட ஏற்பாடுகள்தான் அனைத்தும். தான் ராணி போல வாழ ஆசைப்பட்டார் ஜெயலலிதா; அதற்கு உதவியாக சசிகலா நின்றார். ஒருவரை நல்லவராகக் காட்டிக்கொள்ள, கெட்டவர் ஒருவர் தேவைப்படுகிறார். ஜெயலலிதாவுக்கு அப்படித் தேவைப்பட்டார் சசிகலா. ஒரு கட்டத்தில் சசிகலாவின் குடும்பமே ஜெயலலிதாவை வைத்து வளர்ந்துவிட்டது. பொதுமக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதாகச் சொன்ன ஜெயலலிதா நினைத்திருந்தால், எந்த நிமிடத்திலும் சசிகலாவை வெளியேற்றி இருக்கமுடியுமே... ஒரு முறை அல்ல, இரண்டு முறை அப்படி வெளியேற்றவும் செய்தாரே? எனவே, சசிகலாவின் பிடியில் அவர் இருந்தார் என்று சொல்வது அர்த்தமற்றதாகவே இருக்க முடியும்.

க.நா.இராமகிருஷ்ணன், சென்னை-93.

இன்றைய ஊழல் பற்றிப் பேசும்போது, நேற்றைய ஊழல் மறந்துபோகிறதே?


அடுத்தடுத்து ஊழல்கள் குவிந்து கொண்டே இருந்தால்தானே, முந்தைய ஊழல்களை மறக்கடிக்க முடியும்? அந்த அளவுக்கு அழகாகத் திட்டம் போட்டு உழைக்கிற அதிகார, அரசியல் வர்க்கத்தை நீங்கள் பாராட்டியே ஆகவேண்டும்.

டி.உம்மிடி, சென்னை-69.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்கிற பெயரில் ‘பை‘ கொண்டுவருமாறு வாடிக்கையாளர்களைக் கடைக்காரர்கள் அறிவுறுத்துகின்றனர். பை எடுத்துவராதவர்களிடம், பாலிதீன் கேரி பேக்கைக் காசுக்குத் தருகிறார்கள். ஆக, இதுவும் கடைக்காரர்களுக்கான வருமானமாக இருக்கிறதே தவிர, பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியாகத் தெரியவில்லையே?

வெறும் கையோடு வருபவர்களிடம், துணிப்பையைத் தந்து, அதற்கான பணத்தை வசூலிப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், இதை எல்லாக் கடைகளிலும் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், துணிப்பைதான் தருவேன் என்று சூழல் அக்கறையோடு இருக்கும் கடைக்காரர், ஈ ஓட்டிக் கொண்டுதான் இருக்க முடியும். வரும் ஜனவரி மாதம் பிளாஸ்டிக் தடை முழுமையாக அமலுக்கு வரும்போது, இந்த விஷயத்தில் அரசாங்கம் தன் கவனத்தைத் திருப்ப வேண்டும். 

கே.ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.

தோற்போம் என்று தெரிந்திருந்தும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தின் நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் வீணடிப்பது முறையா?


முறைப்படிதான் செய்கிறார்கள்... ஆனால், சிலரை மோடி முறைத்துக்கொண்டதற்காகவே இதைச் செய்வதுதான் நகைப்புக்குரியதாகவும், வேதனைக்குரியதாகவும் இருக்கிறது.

கழுகார் பதில்கள்!

ஆர்.கே.சுரேஷ், போரூர்.

மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் படாமலேயே இருப்பதற்கு யார் காரணம்?


ஆணாதிக்க மனப்பான்மைதான் காரணம். வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, இந்த அண்டவெளியில் இருக்கும் ஒவ்வொரு துளியிலும் அவர்களுக்கான இடத்தை யாரும் மறுப்பதற்கு அதிகாரமில்லை. ஆனாலும், ஆண் என்கிற திமிர்கொண்டு பல தளங்களிலும் அடக்கிவைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இது நீண்டநாள்களுக்கு நீடிக்காது. முதலில் 33 என்பதை நிறைவேற்றுவதோடு, அடுத்த கட்டமாக 50 என்பதையும் உடனடியாகக் கையில் எடுக்க வேண்டும். இதன் மூலமாக, இப்போதே பெண்களுடன் சமரசம் செய்துகொண்டால், எதிர்காலத்தில் ஆண்கள் தப்பிக்கலாம். இல்லையென்றால், ஆணடிமைத்தனம் என்றொரு காலம் உருவாகிவிடும். பிறகு ஆண்கள் எல்லாம் இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம், உண்ணாவிரதம் என்று நிற்கிற காலம் வரும். கற்பனை செய்து பார்த்தாலே... சிரிப்பாகவோ, பயமாகவோ இருக்கிறதுதானே. ஆண் திமிர் கொண்டவர்களே, உடனே உணருங்கள்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு