Published:Updated:

நேரடி மானிய உதவி திட்டத்தை மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

நேரடி மானிய உதவி திட்டத்தை மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்
நேரடி மானிய உதவி திட்டத்தை மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்
நேரடி மானிய உதவி திட்டத்தை மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

சென்னை: பயனாளிகளுக்கு நேரடி மானிய உதவி வழங்கும் திட்டத்தை மாநில அரசுகள் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பயனாளிகளுக்கு நேரடியாக மானிய உதவி வழங்கும் திட்டத்தின் 2வது கட்டத்தை மத்திய அரசு 1.7.2013 முதல் செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக நான் அறிகிறேன். இதில் தமிழ்நாட்டில் அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்க்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

நேரடி மானிய உதவி திட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில அம்சங்களுக்காகவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஓரங்கட்டும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையிலும், இந்த திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். மத்திய அரசு தேவையில்லாமல் மாநிலங்களின் நிதி விஷயத்தில் தலையிடுவதற்கும், அதிகாரம் செலுத்துவதற்கும் இந்த திட்டம், வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

முன்னேறிய மற்றும் சீரிய நிர்வாகம் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவிகள், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற திட்டங்களில் நேரடியாக பணத்தை வழங்கி இத்தகைய நேரடி பணப்பரிமாற்ற முறையை ஏற்கனவே பின்பற்றி வருவதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இருப்பினும் மத்திய அரசு செயல்படுத்த உள்ள நேரடி பணப்பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும் முறையில் பிரச்னைகள் உள்ளன.

முதலாவதாக, மானிய உதவியின் அளவை பார்க்காமல், அது பயனாளிகளை எளிதில் சென்றடைவது, உரிய நேரத்தில் பொருட்கள் கிடைப்பது என்ற அடிப்படையில் பார்த்து, பொது வினியோக திட்டம், உரம் மற்றும் மண்எண்ணெய், சமையல் கேஸ் மானியம் ஆகியவற்றில் நேரடியாக மானிய உதவி அளிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

மாநில அரசை முற்றிலும் ஓரங்கட்டிவிட்டு மத்திய அரசு, பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்புவதை எதிர்க்கிறோம். இது, நல்ல நிர்வாக முறையாகவும் இல்லை. அதுபோல, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கூட்டாட்சி மற்றும் ஜனநாயக அதிகாரபரவலாக்க உணர்வை மனதில் கொண்டு செய்யப்படுவது போலும் இல்லை. 

பயனாளிகளை அடையாளம் காணுவது, சரிபார்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள மாநில அரசு தேவையான அனைத்து வசதிகளையும் வைத்துள்ள நிலையில், பணத்தை மத்திய அரசு நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவது பொறுப்பில் இருந்து ஒதுக்கிவைக்க வழிவகுக்கும். இத்தகைய நடைமுறை நல்ல நிர்வாகத்தின் அடிப்படை கொள்கையையே மீறுவது போல் ஆகும். நேரடி மானிய உதவி திட்டம், உரிய பலன் அளிக்காது.

நேரடி மானிய உதவி திட்டம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய திட்டக்குழு, மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமலேயே ஏராளமான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசால் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டு அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநில அரசுகள் தங்கள் நிர்வாகத்தை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இந்த விஷயத்தில், மாநில அரசுகள் வெறும் பார்வையாளர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறதா?.

இது ஒரு அதிகார அத்துமீறல் அதுமட்டுமல்லாமல் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கும், ஜனநாயக அதிகாரபரவலாக்க உணர்வுக்கும் முற்றிலும் மீறிய செயல் ஆகும். மத்திய அரசு 2-வது கட்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ள நேரடி மானிய உதவி வழங்கும் திட்டத்தில் பெரும்பாலான திட்டங்கள் ஒன்று சோதனை முயற்சியிலான திட்டங்கள் அல்லது மிகக்குறைந்த அளவு மானியம் கொண்ட திட்டங்கள் ஆகும். ஒருசில திட்டங்களில் மத்திய-மாநில கூட்டு நிதி உதவி திட்டங்கள். அத்தகைய திட்டங்களில் பல குழப்பங்கள் ஏற்படும். திட்டத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது? என்பதிலும் சிக்கல் ஏற்படும். உதாரணத்திற்கு ஜனனி சுரக் ஷா யோஜனா திட்டம்.

##~~##
அதேபோல், இந்திராகாந்தி சுரக் ஷா யோஜனா போன்ற மாநிலத்தில் உள்ள ஒரு திட்டத்தைப் போன்ற திட்டங்களும் நேரடி மானிய உதவி திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தால் ஏராளமான பெண்கள் அதிகளவில் உதவித்தொகை பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் ஏற்கனவே மாநில திட்டத்தின்கீழ் உதவி பெற்று வந்தவர்கள் மீண்டும் மத்திய திட்டத்தில் உதவிபெறக்கூடும். இதனால், நிதி ஆதாரம் வீணாகும். அதோடு மாநில திட்டத்தின் பயன்பாடும் குறைந்துவிடும்.
இத்தகைய சூழலில், பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தை வழங்குகிறோம் என்ற பெயரில் மத்திய அரசு இன்னொரு திட்டத்தை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, தற்போது இருப்பதைப் போன்று திட்டங்களை செயல்படுத்தும் பணியை மாநில அரசிடம் விட்டுவிடுவதுதான் நிர்வாகத்திற்கு நல்லது.
பல கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தும்போது அதற்கு ஆகும் கணிசமான செலவினத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது. கூடுதல் செலவினங்களை மத்திய அரசிடம் மாநில அரசுகள் பின்னர் பெற்றுக்கொள்கின்றன. இதுபோன்ற சூழலில், மத்திய-மாநில அரசுகள் பங்கீடு தொடர்பான பயனாளிகளின் வரையறை தயாரிப்பது சாத்தியம் அல்ல. பயனாளிகளை அடையாளம் காண்பது, சரிபார்ப்பது போன்ற பணிகளை எல்லாம் மாநில அரசு நிர்வாகம் செய்ய வேண்டி இருப்பதால் மத்திய அரசு நேரடி மானிய உதவி திட்டத்தை செயல்படுத்துவது விவேகமானதாக தோன்றவில்லை.
மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள நேரடி மானிய உதவி திட்டம், பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்பதை விட புதிதாக பல நிர்வாக பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். அதோடு பொறுப்பின்மைக்கு வழிவகுக்கும். மத்திய அரசு உண்மையிலேயே பயனாளிகளுக்கு நேரடியாக மானிய உதவி வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நினைத்தால் மாநில அரசு மூலமாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசு கண்காணிக்கலாம். பொது விநியோக திட்டம், உரம், மண்எண்ணெய் மானிய திட்டம் போன்ற திட்டங்களில் நேரடியாக பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, இந்த விஷயத்தில் ஒரு தெளிவு மற்றும் கருத்தொற்றுமை ஏற்படும் வரை மத்திய அரசு நேரடி மானிய உதவி வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் எப்படி மாநில அரசு மூலமாக விரைவாகவும், திறமையாகவும் செயல்படுத்தப்படுகிறதோ அதேபோல் நேரடி மானிய உதவி திட்டத்தையும் மாநில அரசு மூலமாக செயல்படுத்த வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்துகிறேன்.
அதுதான் நாட்டின் நிர்வாகத்தில் கூட்டு பங்குதாரர்கள் என்ற முறையில் மாநில அரசுகளுக்கு சட்டரீதியான இடத்தை அளிப்பதுடன் ஆட்சி அமைப்பில் மாநில அரசுகள் அடிமைகள் ஆகக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தாது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா  கூறியுள்ளார்.