Published:Updated:

ராமதாசை கைது செய்யக் கோரி 2ஆம் தேதி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

 ராமதாசை கைது செய்யக் கோரி 2ஆம் தேதி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
ராமதாசை கைது செய்யக் கோரி 2ஆம் தேதி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
 ராமதாசை கைது செய்யக் கோரி 2ஆம் தேதி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை சாதி வெறியைத் தூண்டிவரும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி வரும் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அண்மைக் காலமாக பா.ம.க.வினர், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான திட்டமிட்டு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். வட மாவட்டங்களில் தலித் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சாதி சக்திகளை ஒருங்கிணைத்து, ஏழை எளிய தலித் மக்களுக்கெதிராகத் தூண்டிவிடும் ஆபத்தான போக்குகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றனர்.

கடந்த 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் பா.ம.க. நடத்திய விழாவில் அப்பாவி வன்னிய இளைஞர்களுக்கு சாதிவெறியை ஊட்டியுள்ளனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள்.

மரக்காணம், கழிக்குப்பம் கிராமங்களில் தலித் மக்களின் 15 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சேட்டு என்பவர் பலியாகியுள்ளார். ஏகாம்பரம் என்பவர் உயிருக்குப் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பல இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர். கூனிமேடு என்னுமிடத்தில் இஸ்லாமியர்களும், பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்துகளும் கொளுத்தப்பட்டுள்ளன. வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

நேற்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர்கள் இருவர் ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாதி வெறியைத் தூண்டிவரும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 2ஆம் தேதி அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

முற்போக்கு சக்திகள், ஜனநாயக சக்திகள் யாவரையும் ஒருங்கிணைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விடுதலைச் சிறுத்தைகளின் இந்த அறப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கிட வேண்டுகிறோம்.

இவ்வாறு தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.