Published:Updated:

கேள்வி கேட்ட மக்கள்..! தகாத வார்த்தையால் திட்டிய அ.தி.மு.க. பிரமுகர்?

இந்தியச் சமூகத்தின் ஜனநாயகம், கேள்விகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிறது. மக்களின் நிலையைத் தீர்மானிக்கும் இடமாக நாடாளுமன்றத்தின் கேள்வி நேரங்கள்தாம் விளங்குகின்றன.

கேள்வி கேட்ட மக்கள்..! தகாத வார்த்தையால் திட்டிய அ.தி.மு.க. பிரமுகர்?
கேள்வி கேட்ட மக்கள்..! தகாத வார்த்தையால் திட்டிய அ.தி.மு.க. பிரமுகர்?

ஜா புயல் கடந்த 15-ம் தேதி கரையைக் கடந்தது, அப்போது  ஏற்பட்ட பாதிப்புகளால் தமிழகத்தின் டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானார்கள். புயலுக்குப் பிறகான மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்களின் தலைமையில் குழுக்களை அமைத்துள்ளார் தமிழக முதல்வர். ஆனாலும் அமைச்சர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை எனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் உச்சமாக எதிர்த்துக் கேள்வி கேட்ட மக்களை, அதிமுக பிரமுகர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

ஓராண்டுக்கு முன்பு இதே நவம்பர் மாதத்தில் ஒகி புயல்  தாக்கியது. ஒகியால் தென் தமிழக மாவட்டங்களில் உள்ள மீனவக் கிராமங்கள் பாதிப்புக்குள்ளாயின. ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்தும் காணாமலும் போன கொடூரமான சம்பவங்கள் அரங்கேறின. புயல் பற்றியான செய்திகளை மீனவர்கள் கடலுக்குள் செல்லும் முன்பாகவே சொல்ல முடியாமல் போனது இழப்புகளுக்கான முக்கியக் காரணமாக அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஒகி புயலுக்குப் பிறகான மீட்புப் பணிகள் வேகமாக நடக்கவில்லை. முறைப்படி நடந்திருந்தால் இன்னும் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் எனப் பாதிக்கப்பட்ட மக்களும் போராட்டங்களை நடத்தினர்.

கஜா சம்பந்தமாக தமிழக அரசு, புயல் ஏற்படுவதற்கு முன்பாகவே  சில நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அலுவலகங்களில் வேலை செய்பவர்களை மாலை நான்கு மணிக்கு முன்பாகவே வீடு திரும்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகின. புயல் வீசும் பகுதிகளில் பேருந்துகளை  இயக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்பாகவே புயல்பற்றியான அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் பல பகுதிகளில் நிகழ இருந்த அசம்பாவிதங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன. ஆளுங்கட்சியின், புயலுக்கு முன்பான இந்தச் செயல்பாடுகளை தமிழகத்தின் எதிர்க்கட்சிகள்கூடப் பாராட்டின.

ஆனால் புயலுக்குப் பிறகான அரசின் செயல்பாடுகள் ஒழுங்கானதாக அமைந்துவிடவில்லை. பல பகுதி மக்கள் உணவுகளின்றி, குடிக்கச் சுத்தமான குடிநீர் கிடைக்காதவர்களாகவும் உள்ளனர். மக்களின் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் அந்த மக்களின் வாழ்வியலைப் பெரிதும் பாதித்துள்ளது. ஒகி புயலின் மீட்புப் பணிகளில் ஏற்பட்ட அதே தாமதம் கஜா புயலின் மீட்புப் பணியிலும் தொடருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணப் பணிகள் எதுவும் நடக்கவில்லை எனத் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்ய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிவாரணப் பொருள்களோடு சென்றிருந்தார். அப்போது மக்கள்  அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினர். விழுந்தமாவடி பகுதியைச் சேர்ந்த மக்கள் அமைச்சரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை, மக்கள் சூழ்ந்துகொண்டதால் வேறு வழியின்றிச் சுவர் ஏறிக் குதித்து வெளியேறினார். அதேபோல், மன்னார்குடி அருகே உள்ள வடசேரியைச் சார்ந்த பகுதிகளுக்குச் சென்ற அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை அந்தப் பகுதி மக்கள் சூழ்ந்துகொண்டனர். தங்களின் வாழ்வாதாரத்தை எடுத்துச் சொன்ன அவர்கள்  நிவாரணப் பணிகள் பற்றியான கேள்விகளையும் எழுப்பினர். அப்போது கோபமடைந்த வைத்திலிங்கம், மக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியச் சமூகத்தின் ஜனநாயகம், கேள்விகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிறது. மக்களின் நிலையைத் தீர்மானிக்கும் இடமாக நாடாளுமன்றத்தின் கேள்வி நேரங்கள்தாம் விளங்குகின்றன. இந்தச் சம்பவங்கள் அமைச்சர்களின் ஒழுங்காகச் செயல்படாத தன்மையைக் காட்டுகின்றன. இந்தச் சம்பவங்கள் குறித்துப் பேசிய தி.மு.க. வழக்கறிஞர் சரவணன், ``புயலுக்குப் பிறகான இந்தச் சம்பவங்கள் அரசின் நிர்வாகத் திறனற்ற நிலையைத்தான் காட்டுகின்றன. புயலுக்குப் பிறகு அதிகமாக மரங்கள் விழும் என்ற அடிப்படைகூடத் தெரியாத அரசாக இது உள்ளது. விழுந்த மரங்களை அகற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். புயலுக்கு முன்பு மட்டும் மக்களை நிவாரண முகாம்களில் தங்கவைத்தால் எல்லாப் பிரச்னைகளும் சரியாகி விடாது. உள்ளாட்சித் தேர்தல் நடக்காதது இந்தப் பிரச்னைகளுக்கான முக்கியமான காரணம். தேர்தல் நடந்திருந்தால் ஊர் தலைவரைக் கேள்வி கேட்டிருப்பார்கள். தேர்தல் நடக்காததால், மக்கள் சேர்ந்து அமைச்சரைக் கேள்வி கேட்கிறார்கள். மக்களின் உணர்வுகளைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவர் என்ன அமைச்சர்? தேர்தலில் வாக்களித்தவர்களுக்குப் பதிலளிக்க முடியவில்லை என்றால், ராஜினாமா செய்யுங்கள். மக்கள் போராடிக் கேட்பது  அமைச்சர்களின் பணத்தை அல்ல... தங்களின் வரிப் பணத்தை” என்றார் ஆவேசமாக.

அரசு, தனது பழைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்பது மக்களின் உரிமை, பதில் சொல்வது அரசின் கடமை.