Published:Updated:

`ஐந்து சதவிகிதம்தான் ஃபைனல் கணக்கு!' - எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட்

`ஐந்து சதவிகிதம்தான் ஃபைனல் கணக்கு!' - எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட்
`ஐந்து சதவிகிதம்தான் ஃபைனல் கணக்கு!' - எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட்

கடந்த காலங்களில் மத்திய அரசோடு தமிழக அரசுக்கு இணக்கமான உறவு இல்லை. தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல நட்பில் இருக்கிறது பா.ஜ.க அரசு.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `புயல் பாதிப்புகள் வரும்போதெல்லாம் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான தொகையையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தச் சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்க வேண்டியதில்லை' என்கின்றனர் டெல்லி வட்டாரத்தில். 

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பின்போது, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகிய மூவர் மட்டுமே உடன் இருந்தனர். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், கஜா புயலுக்கு நிவாரணம் கோருவது தொடர்பான மனுவை அளித்தார் முதல்வர். புயல் நிவாரணத் தொகையை விரைந்து வழங்கும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதன்பிறகு கேபினட் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றுவிட்டார் பிரதமர். ``இன்று மதியம் விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவும் முடிவு செய்திருக்கிறார் முதல்வர். அப்போதைய சூழலைப் பொறுத்து நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அவர் முடிவு செய்வார்" என விவரித்த டெல்லி வட்டார அரசியல் விமர்சகர்கள், ``இந்தச் சந்திப்பைப் பெரிய விஷயமாக டெல்லி ஊடகங்கள் பார்க்கவில்லை. தமிழகத்தில் நிஷா புயல், வர்தா புயல், ஒகி புயல் என எந்தப் பேரிடர் வந்தாலும் மத்திய அரசு பாராமுகத்துடன்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வதற்காக 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய், வர்தா புயல் பாதிப்புகளை சரிசெய்வதற்காக 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் என மொத்தமாக 62 ஆயிரத்து 138 கோடி நிதி உதவியை மத்திய அரசிடம் கோரியது தமிழக அரசு. 

ஆனால், மத்திய அரசோ வறட்சி நிவாரணத்துக்கு ஆயிரத்து 748 கோடியும் வர்தா புயலுக்கு 266 கோடி ரூபாய் என மொத்தமாக 2 ஆயிரத்து 14 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. வர்தா புயலின் பாதிப்புகளால் காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட சென்னை நகரின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கே 266 கோடி ரூபாயைத்தான் பா.ஜ.க அரசு ஒதுக்கியது. தற்போது கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மொத்தமாக சீர்குலைந்துவிட்டன. இதன் பாதிப்புகளைச் சரிசெய்ய 15 ஆயிரம் கோடி ரூபாயைக் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில், முதல்கட்டமாக 1,500 கோடி ரூபாய் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்குப் பதில் அளித்த பிரதமர், ` பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு நடத்தும்; புயல் பாதித்த பகுதிகளுக்கு மத்தியப் படைகளை அனுப்புகிறேன்' எனக் கூறியிருக்கிறார். கஜா புயலுக்கும் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, எடப்பாடி பழனிசாமி சந்திப்பை பிரதானமாக கவனிக்க வேண்டியதில்லை" என்கின்றனர் உறுதியாக. 

`` ஒகி புயல், வர்தா புயல் ஆகியவற்றில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர். இந்தமுறை மத்திய அரசு தாராள மனதுடன் நிதியை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அரசியல்ரீதியாக இந்தச் சந்திப்பை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான தேவையும் இப்போது இல்லை. கடந்த காலங்களில் மத்திய அரசோடு தமிழக அரசுக்கு இணக்கமான உறவு இல்லை. தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல நட்பில் இருக்கிறது பா.ஜ.க அரசு. எனவே, தமிழகத்துக்குத் தேவையான நிதி வந்து சேரும் என நம்புகிறோம்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

`டெல்லி சந்திப்பு பயன் கொடுக்குமா?' என்ற கேள்வியை தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேட்டோம். ``நிவாரணத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசு கொடுக்கும் அறிக்கை ஒருபுறம், மத்திய அரசின் குழு அளிக்கும் அறிக்கை மறுபுறம் என இரண்டையும் ஆராய்ந்துதான் நிதியைக் கொடுப்பது வழக்கம். அதனால் கேட்கக் கூடிய நிதி எவ்வளவு இருந்தாலும், அரசின் வரையறைகளோடு ஒத்துப் போகும்போது கூடுதல் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. திட்ட கமிஷனிடம் மாநில அரசுகள் கோரிக்கை வைக்கும்போது, முழுமையாக ஆராய்ந்து பார்த்துத்தான் மத்திய அரசு நிதி வழங்கும். நிவாரண நிதிகளைப் பொறுத்தவரையில் சதவிகிதக் கணக்குகள் உண்மையா எனத் தெரியவில்லை. காப்பீடு நிறுவனங்கள்கூட நாம் கேட்கும் தொகையை முழுமையாகக் கொடுப்பதில்லை. அவர்களும் ஆராய்ந்து பார்த்துத்தான் நிதி கொடுப்பார்கள். அப்படித்தான் மத்திய அரசும் செயல்படுகிறது. இந்தச் சந்திப்பில் எந்தவித அரசியலும் இல்லை. 

வழக்கமாக இதுபோன்ற புயல்கள் வரும்போது, மீனவர்களின் படகுகள் பாதிப்படையும்; உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும். இந்தமுறை அப்படி எதுவும் நடக்கவில்லை. மத்திய கடற்படை அதிகாரிகள், தமிழிலேயே அறிவிப்பு கொடுத்து மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றியிருக்கிறார்கள். மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கடலில், மீனவர்களுக்கு முழுப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றியிருக்கிறோம்" என்றார் விரிவாக.
 

பின் செல்ல