Published:Updated:

``சென்ட்ரல் சப்போர்ட் செய்யும் என்றார் மோடி!" - டெல்லி விசிட் பின்னணியை விவரிக்கும் ஜெயக்குமார்

``தினகரன்தான் அரசியலுக்காக அரசியல் பேசுகிறார். நாங்கள் மக்களுக்காகத்தான் பிரதமரை சந்தித்தோம்."

``சென்ட்ரல் சப்போர்ட் செய்யும் என்றார் மோடி!" - டெல்லி விசிட் பின்னணியை விவரிக்கும் ஜெயக்குமார்
``சென்ட்ரல் சப்போர்ட் செய்யும் என்றார் மோடி!" - டெல்லி விசிட் பின்னணியை விவரிக்கும் ஜெயக்குமார்

பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகிய மூவர் மட்டுமே இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். 20 நிமிட சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``கஜா புயல் சேதங்கள்குறித்து விரிவாக பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி பிரதமரிடம் கோரியுள்ளேன். நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.15,000 கோடி கேட்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மத்திய படைகளை அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்" என்றார். 

அதேநேரம், ``பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறியாமல், இழப்புகளை மதிப்பீடு செய்யாமல், அவசர அவசரமாக முதலமைச்சர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது" என இந்தச் சந்திப்பை விமர்சனம் செய்திருந்தார் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். 

டெல்லி சந்திப்பின் பின்னணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். 

வர்தா புயலின்போது தமிழக அரசு கேட்ட நிதியை அளிக்காமல் வெறும் 3.24 சதவிகித நிதியையே மத்திய அரசு ஒதுக்கியது. இந்த முறை உரிய நிதி வந்து சேருமா? 

``கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறோம். `தற்காலிகத் தீர்வாக 1,500 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும்' என்றும் சேதாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் குழுவை அனுப்புமாறும் பிரதமரிடம் தெரிவித்தோம். ஆவண செய்வதாக அவரும் உறுதியளித்தார்".

இந்தச் சந்திப்பில் அரசியல் இருப்பதாகக் கூறுயிருக்கிறரே தினகரன்? 

``கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகச் சேதங்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில்தான் பிரதமரிடம் பேசினோம். இதில் எந்தவித அரசியலும் இல்லை. தினகரன்தான் அரசியலுக்காக அரசியல் பேசுகிறார். நாங்கள் மக்களுக்காகத்தான் பிரதமரை சந்தித்தோம்".

நிவாரணப் பணிகள் நிறைவடைய இன்னும் எத்தனை நாள்கள் ஆகும்? 

``இன்னும் பத்து நாள்களில் மின்வாரியப் பணிகள் நிறைவடையும் என அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார். இரவு பகலாக வேலை நடந்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் நிலைமை சீரடைந்து வருகிறது". 

பிரதமர் சந்திப்பில் குறிப்பிடும்படியான விஷயம் இருக்கிறதா? 

``கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விவரித்தார் முதல்வர். அதைக் கேட்டு தன்னுடைய கவலையைப் பகிர்ந்து கொண்டார் மோடி. `சென்ட்ரல் உங்களுக்கு முழுமையாக சப்போர்ட் செய்யும்'  என உறுதியளித்தார்". 

வர்தா, ஒகி புயல் பாதிப்புகளுக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளும் வந்து சேருமா? 

``நிலுவைத் தொகையைப் பொறுத்தவரையில் உடனடி சீரமைப்பு, நிரந்தர வாழ்வாதாரம் எனப் பல வகைகள் இருக்கின்றன. உடனடி தீர்வுகளுக்காக நாம் கேட்டதைக் கொடுத்தார்கள். நீண்டகால தீர்வு என்பது ஒரு ப்ராசஸ். அது படிப்படியாகத்தான் நிறைவேறும். வரும் காலங்களில் மக்கள் பாதிக்காமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன".