பிரீமியம் ஸ்டோரி

ட இந்தியாவில் வேலுபாய் போலப் பெரிய ‘டான்’ ரேஞ்சில் இருக்கும் பி.ஜே.பி இணைய அணி, தமிழகத்தில் மட்டும் லொள்ளு சபாவில் வரும் டூப் டான் போலப் பரிதாபமாக இருக்கிறது. சொந்த வீட்டுக்கு வரும் ஸ்டாலினை ‘கோ பேக்’ சொல்லி காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள். கேட்டால், ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக்கிற்கு, பழிக்குப் பழியாம். இதைக் கேட்டு ‘பழி’யே தற்கொலை செய்துகொள்ள கயிறுதேடுவதாகத் தகவல். அடுத்தகட்டமாக, சில ஹேஷ்டேக்குகளை அவர்கள் உருவாக்கிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கம்பேரிஸன் கோவாலு!

• என்னதான் கொளுத்து கொளுத்தென்றுகொளுத்தினாலும், சூரிய பகவான் நம் வேலைக்கு என்றும் இடையூறாக இருந்ததில்லை. ஆனால், இந்த மழை நசநசவெனப் பெய்து வேலையைக் கெடுப்பதோடு, செருப்பை நாறடிக்கவும் செய்கிறது. எனவே, #GoBackRain ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தால் வருண பகவான் ரிட்டர்ன் ஆகிவிடுவார்.

• நவம்பர் தொடங்கிவிட்டால் போதும்... கும்பலாகக் கிளம்பி வேடந்தாங்கல் வந்துவிடுகின்றன ஃபாரீன் பறவைகள். இதனால், இந்தியப் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்குகிறது. எனவே, #GoBackForeignBirds ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினால், அவை மிரண்டுபோய் வராமல் போய்விடும்.

• 90-களில் பிறந்தவர்களுக்குச் சக்திமான்தான் தி பெஸ்ட் சூப்பர் ஹீரோ. ஆனால், அவ்வப்போது சக்திமான் ரிட்டர்ன்ஸ் என வரும் செய்திகள் அவர்களையே பயமுறுத்துகின்றன. ஒரு காலத்தில் சூப்பர் ஹீரோவாக இருந்தவர், இன்று சிரிப்பு போலீஸாக ஆகிவிடுவாரோ என்ற பயம் அது. அந்த கெட்ட சம்பவம் நிகழாமலிருக்க #GoBackShaktimaan ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கலாம்.

• வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது தவறில்லை. ஆனால், அப்படி வரும் பெரும்பான்மையானவர்கள் தாஜ்மஹாலுக்கே செல்கிறார்கள். இதுதான் தவறான விஷயம். அதனால், இப்படி வரும் பயணிகளைத் திருப்பி அனுப்ப #GoBackTajMahalTourists என்பதை ட்ரெண்ட் செய்யலாம்.

• மங்கோலிய மன்னர் செங்கிஸ்கான் இந்தியாவின் தலைப்பகுதி வரை படையெடுத்துவந்ததே, அதன்பின் பல மன்னர்கள் இந்தியாவில் ஊடுருவக் காரணமாக ஆனது. அவரை தொடக்கத்திலேயே தடுத்திருந்தால், பிற ஊடுருவல்களை நிறுத்தியிருக்கலாம். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. #GoBackGenghisKhan ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து, எல்லோரையும் குழப்பியடிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு